Bicycle Thieves (1948)




No Spoilers
போருக்கு பின்னரான காலப்பகுதியில் இத்தாலி வறுமையின் கோரப்பிடியில்
சிக்குண்ட காலக்கட்டம்தான் கதை நிகழும் களம். இக்காலப்பகுதியில் மேட்டுக்குடிகளிலும் பார்க்க அதிக அளவில் இன்னல்களுக்கு முகம்கொடுத்தவர்கள் சாமானியர்களே.

இன்றாவது எதும் வேலைக்கிடைக்காதா!? என்ற ஏக்கத்தில் தினந்தோறும் ஒரு கட்டிடத்தின் முன்னால் குறிப்பிட்ட அதிகாரிக்காக காத்திருக்கும் ரோம் நகரவாசிகள். அவர் வந்து தன் கையிலிருக்கும் பட்டியலில் இருந்து சில பெயர்களை வாசிக்கின்றார். அனைவரின் முகத்திலும் எதிர்பார்ப்பு தங்களின் பெயரும் வரக்கூடும் என்ற நப்பாசைத்தான். அதில் கதையின் நாயகனான என்டனியோவின் பெயரும் கூப்பிடப்படுகிறது. அவனே அதை எதிர்பார்க்கவில்லை, தெரு தெருவாக சென்று திரைப்பட போஸ்டர் ஒட்டும் வேலை. சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் "என்னடா பண்ணப்போறமுணு யோசிச்சுட்டு" இருந்தவனுக்கு வேலைக்கிடைத்த செய்தி காதுல தேன் ஊற்றிய மாதிரி இதமாக இருந்தது !

அதே நேரம் கூட்டத்தில் இருந்தவர்கள் தங்களுக்கும் எதாவது பணித்தரும்படி கூச்சலிட்டு கொண்டு இருந்தனர். அவர்களை தகுந்த காரணங்கள்
சொல்லி சமாளித்தவண்ணம் அதிகாரி அன்டனியோவிடம் "இந்த வேலைக்கு சைக்கிள் கட்டாயம், உன்கிட்டயிருக்கு தானேன்னு?" கேட்க. தன்னுடைய சைக்கிள் அடகுவைக்கப்பட்டிருக்கு இப்போ இல்லனு உண்மைய சொல்லிட்டா வேலைபோயிடுமுனு மனசுல நினைச்சுகிட்டு, "ஆமா ஐயா என்கிட்டயிருக்குனு" பொய் சொல்லி வேலைக்கான அனுமதி பத்திரத்த வாங்கிட்டு வந்துடுவான்.

மனைவி மரியா, மகன் ப்ருனோ மற்றும் சின்ன கைக்குழந்தை இதுதான் அண்டனியோவின் அழகான சிறிய குடும்பம். மரியாகிட்ட தனக்கு வேலைக்கிடைச்சிட்டதாவும் அதே நேரம் சைக்கிளை மீட்க வேண்டிய கட்டாயத்தை விளக்கி கூறி உதவி கேக்குறான். அவள் கையிலும் காசுயில்லை, ஏற்கனவே வீட்டுல இருந்த பெறுமதியான பொருட்களையெல்லாம் விற்று தீர்த்தாச்சு மேற்கொண்டு எதுவுமில்லை.
உலகத்தில் உள்ள எல்லா கணவன்மார்களும் இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் முதலில் போய்ட்டு நிக்குறது மனைவிகிட்டதானே ஏதாவது மேஜிக் பண்ணி பணத்தை புரட்டி தந்துவிட மாட்டாளா! என்ற கடைசி நம்பிக்கைதான். மரியாக்கு திடீர்னு ஒரு யோசனைவருது வேகமா அறைக்குள்ள போய்ட்டு அங்கு இருக்க கட்டில் விரிப்பு, போர்வை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு அடகுக்கடையில் வைத்து சைக்கிளை அண்டனியோக்கு மீட்டு கொடுக்கின்றாள். குளிர்காலம் வேறு நல்ல போர்வையில்லாமல் நாட்களை போக்குவது இலகுவான காரியமல்ல. எனினும் இப்போதைக்கு இதை விட்டால் வேறுவழி அவளுக்கு தெரியவில்லை.

மறுநாள் காலை இனி நமக்கு விடிவுகாலம் தான் !, இந்த வேலையின் மூலமாக வரும் வருமானம் மற்றும் மேலதிகமாக பகுதிநேரம் எல்லாம் வேலைப்பார்த்தால் நல்லா காசு பார்க்கலாம், தன் குடும்ப கஷ்டம் எல்லாம் நீங்கிவிடும் என்ற கனவுடன் முதல் நாள் வேலைக்கு போறான். எல்லாம் சரியா போய்ட்டுயிருக்கும் போதுதான் விதிவிளையாட ஆரம்பிக்குது !

"நீங்க இப்போ நினைக்குறது சரி"

கண்பார்த்திருக்க எதிர்பாராத தருணத்தில் சைக்கிள் திருடப்படுகின்றது.
பின்னாடியே விரட்டிட்டி போயிட்டும் பயனில்லை திருடன் சிட்டாய் பறந்து விடுகின்றான். இப்போ அண்டனியோவின் நிலைமையை நான் விளக்க தேவையில்லை. மரத்தில் இருந்து விழுந்தவனை மாடுமுட்டிய கதையாய் போனது பாவம் மனுஷன் !

(கதை நிகழ்வது கிட்டதட்ட 70 வருடங்களுக்கும் முன்பு அப்போதைய நிலவரப்படி ஒரு சைக்கிள் வாங்குவது உயர்ரக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு சமமாகும். ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத ஒரு சாமானியன் சைக்கிளை பறிகொடுப்பது என்பது அவன் வாழ்க்கையே புரட்டி போடகூடிய நிகழ்வு)

Neorealism வகையரா படம் பொதுவாக கலைப்படங்கள் இம்முறையில்தான் அதிகமாக எடுக்கப்படும்.
ரோம் நகர் முழுவதும் மகன் ப்ருனோவுடன் சேர்ந்து சைக்கிளை தேடி அலைவதுதான் மிகுதிக்கதை. சைக்கிள் திரும்ப கிடைத்ததா? இல்லையா? என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு கட்டத்தில் அன்டனியோவின் நிலைமையை பார்த்து நமக்கே மனசுக்கு ரொம்பகஷ்டமா போயிடும். கடவுள் பிறர்க்கு தீங்கிழைக்காத ஒரு அப்பாவியை இப்படியெல்லாம் சோதிக்கக்கூடாது! எதிர்பார்க்காத முடிவுதான்.

ரொம்ப எளிமையான கதை, மிகைபடுத்தல் கிடையாது, நிஜத்தில் நிகழ்வது போலிருக்கும். படபெயரை வாசிக்கும் போதே நமக்கு இதுதான் கதையாயிருக்ககூடும் என்பதை இலகுவாகயூகிக்க முடியும். எனினும் இத்தனை வருடங்கள் கழிந்தும் தன்னளவில் உயர்ந்து நிற்க காரணம் இதுதான் என்று குறிப்பிட்டு ஒன்றை மட்டும் சொல்லிவிடமுடியாது. இதன் பெருமை இயக்குனர் முதற்கொண்டு, நாயகன், நாயகி, மகன், இதர கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என எல்லோரையும் போய்ச்சேரும்.
இந்த மாஸ்டர் பீஸ்சை பற்றி இன்னும் நிறைய பேசலாம். 
சமீப காலமாக நீண்ட கட்டுரைகளை முடிந்தளவுக்கு தவிர்த்து வருவதால் இத்துடன் முடிக்கின்றேன். சந்தர்ப்பம் அமைந்தால் கட்டாயம் பாருங்க உங்கள் நேரத்தை வீணடிக்காது.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I