Posts

Showing posts from April 20, 2020

நரகம்

Image
விளக்கிலிருந்த கடைசி சொட்டு   மண்ணெண்ணையும் எரிந்து  தீர்ந்து கொண்டிருந்தது. காற்றின் போக்கில் ஆடியப்படியிருந்த  விளக்கின் சுவாலை மெதுமெதுவாக சிறுத்து ஒளியிழந்து கடைசியில் முழுதாக அணைந்து போனது.  அந்த கணம் திரியின் செந்தணலில் இருந்து நீண்டு எழுந்த கரும்புகை ஓர் நேர்க் கோடாக மேல் நோக்கி சென்று மறைந்தவுடன் திரியின் தணலும் அணைந்து வெளிச்சம் முழுதாக நீங்கி, வீடு முழுவதும் கும்மிருட்டானது.  அணைந்து போன குப்பி விளக்கை  வெறித்து பார்த்தபடி வீட்டுத் திண்ணையிலிருந்த மண்திட்டில் அவள் அமர்ந்திருந்தாள். அவளின் இருபுறமும் பிள்ளைகளும் இருந்தார்கள். கூடவே பல நாட்கள் அடிப்பட்டு நெளிந்து போயிருந்த வடுவுடன், அவர்களின் துயர வாழ்க்கையின் அடையாளமாக  ஒரு பழைய அலுமினிய சோற்றுப் பானையும் இருந்தது. அன்றிரவு நேரம் கடந்து போயிருந்தும் மூவரும் சாப்பிட்டிருக்கவில்லை.  மிச்சமிகுதியிருந்த அரிசியும் பகலுடன் தீர்ந்து போயிருந்தபடியால்  இரவுணவு சமைக்கவென எதுவும் மீந்திருக்கவில்லை. பிள்ளைகள் அன்று வீட்டில் நிகழ்ந்த  அசம்பாவிதத்தில் உண்டான அதிர்ச்சியிலும் பசியாலும் சோர்ந்து போயிருந்தார்கள்.