மேதகு (2021)

மேதகு படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. படக்குழுவில் பணியாற்றிய ஒருவர் என் முகநூல் நண்பர் பட்டியலில் இருந்தார். கடந்த வருடம் இது தொடர்பான அறிவிப்பும், காட்சி படங்களும் அவர் பதிவில் வந்ததைக் கண்ட போது எதற்கு இவர்களுக்கு வேண்டாத வேலை, தலைவரின் வரலாற்றை படமாக எடுக்கிறேன் என்று சொல்லி எதாவது சொதப்பி விடப் போகிறார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். படத்தின் இயக்குநர் (தி. கிட்டு) பெயரை இதற்கு முன்பு கேள்விப்பட்டது கூட கிடையாது. நடிகர்கள், இசை, ஒளிப்பதிவு, என எல்லோருமே புதிய முகங்கள். கொஞ்சம் கூட நம்பவில்லை. ஆனால் இன்று என் கணிப்பை பொய்த்துப் போகச் செய்து விட்டார்கள். சில குறைகள் இருந்தாலும், படம் மிகவும் விறுவிறுப்பாகாவும், முடியும் மட்டும் அதனுடனே ஒன்றி இருக்கவும் வைத்திருந்தது. படத்தின் பலமே தலைவரின் இளவயது பாத்திரத்தில் நடித்த நடிகர் குட்டி மணி தான். திரையில் அவரை பார்க்கும் பொழுது அன்பும் மதிப்பும் பொங்கி வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. தனக்கு கொடுத்தப் பாத்திரத்தை செம்மை செய்து விட்டார். கதை வசனம், பின்னனி இசை, ஒளிப்பதிவு என எல்லாம் தரம். கலவரம், வன்முறை காட்சி...