கிறுக்கனின் கையேடு

மனம் உடைந்து சோர்வாக இருக்கும் ஒரு தருணத்தில் உங்களுக்கு வாழ்வின் மீதான பிடிப்பும் நம்பிக்கையும் அற்று போகும் இல்லையா? பசிக்காது, ஓர் சிறந்த நகைச்சுவை காட்சியை பார்த்து சிரிக்க இயலாது போகும் தருணத்தை கட்டாயம் வாழ்வின் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் கடந்து வந்திருப்பீர்கள். இதே போல அடிக்குமேல் அடிவிழும் ஒரு மோசமான நாளில் இதயம் பாரமாகி, மண்டை வெடித்துவிடும் நிலையிலிருக்கும் நேரத்தில் அதிகமாக பசிக்கும். சாதாரண நகைச்சுவைக்கும் கிளர்ந்தெழுந்து சிரிப்பீர்கள். எதையோ கடந்து வரவும், மறந்து விடவும் தீவிரமாக முயற்சிப்பீர்கள். பாவம்! அதை உங்களிடம் இருந்தே மறைத்து கொள்வீர்கள். அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தும், முடியும் என்பதாக நம்புவீர்கள். ஜோக்கர் படத்தின் நாயகன் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் போது வெடித்து கதறி அழுவதற்கு பதிலாக உரக்ககத்தி சிரிக்க ஆரம்பித்து விடுவான். அது அவனை மீறி நிகழும் ஒன்று. ஒரு வேளை கண்ணீராக வெளிப்பட்டிருந்தால் அவன் மனப்பாரம் குறைந்து சரி போயிருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் புறக்கணிப்புக்...