Posts

Showing posts from August 3, 2021

ஓவியன்

வான்கோ தன் காதலிக்கு காதை அறுத்து கொடுக்கவில்லையாம், நிர்கதியான நிலையை அறிந்திருந்தும் கடனைத் திருப்பிக் கேட்ட விலைமாதுக்கு தான்  அறுத்துக் கொடுத்தாராம். அவர் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லையாம், யாரோ ஒரு சிறுவனை காப்பாற்றத்தான் அப்படிப் பொய் சொன்னாறாம். அவர் சித்தம் கலங்கியவர் கிடையாதாம், மனிதர்களை  கண்டுப்பயந்து தான் ஒதுங்கி நின்றாராம். நேற்றுக் கனவில் வந்தவர், இப்படி நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தார். “ஓவியம் உலகை அடக்கும்  உலகம் ஓவியத்தை அடக்கும்  ஓவியன் தன்னை அடக்கி  உலகை ஓவியத்துக்குள் ஒடுக்குவான்." என்ற ஆத்மாநாம் கவிதையை படித்துக் காட்டினேன். சிறு புன்னகை செய்தார். பின்பு சுவற்றில் ஒடுக்கியிருந்த நீலவானில் மாயமானார். 08-03-2021

சிறு சிறு தருணம்

மழை நாளில், சன்னலில் உடலை குறுக்கியப்படி தூறலை ரசிக்கும் பூனைக் குட்டி. யாமத்தில் தழுவிக் கிடக்கும் வெற்றுடல்கள். நாவலின் கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளன். முதல் குழந்தையை ஸ்பரிக்கும் ஆண். சிறுத் தொட்டியை கடலாக்கிய தங்க மீன். முலையின் மென்மை, குறியின் அழுத்தம், கண்டுணர்ந்த அவனும் அவளும். பிடித்த கதையின் கடைசி வரி, முற்று. முதல் காதல், உதட்டு முத்தம் அவள் வாசனை. மழலையின் இமைக்கா நொடிப் பார்வை, பின் தொடரும் குறுஞ்சிரிப்பு. ராஜாவின் இசை, உன் நினைவு, சிறு புன்னகை, வடியும் கண்ணீர் துளி. குறையொன்றும் இல்லை, நான் வாழ்ந்து விட்டேன். 08-01-2021

வடு

ஓர் இன்ப கவிதை புனைய வேண்டும். பொருத்தமான சொற்களை தேடிக்கொண்டிருந்தேன். உன் நினைவு அடுக்குகளால் நிரப்பப்பட்டிருக்கும்  அகப்பெருவெளியில் நான் எங்கனம் அவற்றை கண்டடைவேன். 07-28-2021

சுவடு

நித்தமும் உன் நினைவுகளை கடந்து தான் அவளுடன் காதலுறுகிறேன். போகத்தின் உச்சத்தில் திளைத்திருக்கும் சமயத்தில்  உன் பெயரைச் சொல்லி அவளை  விளித்திடுவேனோவென்று அஞ்சுகிறேன்!  நீ இடித்து நிர்மூலமாக்கிய குடிசையை அவள் கட்டிக்கொண்டிருக்கிறாள்.  விரைவில் அங்கு குடியேறிவிடுவோம். பிறகு உன் முகவரியை நான் நிரந்தரமாகத் தொலைத்து விடக்கூடும். 07-28-2021