நரகம்


விளக்கிலிருந்த கடைசி சொட்டு  
மண்ணெண்ணையும் எரிந்து 
தீர்ந்து கொண்டிருந்தது. காற்றின் போக்கில் ஆடியப்படியிருந்த  விளக்கின் சுவாலை மெதுமெதுவாக சிறுத்து ஒளியிழந்து கடைசியில் முழுதாக அணைந்து போனது. 
அந்த கணம் திரியின் செந்தணலில் இருந்து நீண்டு எழுந்த கரும்புகை
ஓர் நேர்க் கோடாக மேல் நோக்கி சென்று மறைந்தவுடன் திரியின் தணலும் அணைந்து வெளிச்சம் முழுதாக நீங்கி, வீடு முழுவதும் கும்மிருட்டானது. 

அணைந்து போன குப்பி விளக்கை 
வெறித்து பார்த்தபடி வீட்டுத் திண்ணையிலிருந்த மண்திட்டில் அவள் அமர்ந்திருந்தாள். அவளின் இருபுறமும் பிள்ளைகளும் இருந்தார்கள். கூடவே பல நாட்கள் அடிப்பட்டு நெளிந்து போயிருந்த வடுவுடன், அவர்களின் துயர வாழ்க்கையின் அடையாளமாக 
ஒரு பழைய அலுமினிய சோற்றுப் பானையும் இருந்தது. அன்றிரவு நேரம் கடந்து போயிருந்தும் மூவரும் சாப்பிட்டிருக்கவில்லை. 
மிச்சமிகுதியிருந்த அரிசியும் பகலுடன் தீர்ந்து போயிருந்தபடியால் 
இரவுணவு சமைக்கவென எதுவும் மீந்திருக்கவில்லை. பிள்ளைகள் அன்று வீட்டில் நிகழ்ந்த  அசம்பாவிதத்தில் உண்டான அதிர்ச்சியிலும் பசியாலும் சோர்ந்து போயிருந்தார்கள். 

அவளுக்கு இருபது அல்லது  இருபத்திமூன்று வயதிருக்கலாம். கரும் நிறத்திற்கே அழகு சேர்த்து கொண்டிருந்தது அவள் வனப்பு. சராசரி உயரத்தைவிட சற்று குறைந்தவள். பிருஷ்டத்தை உரசும் நீண்ட கரும் கூந்தல். வளைவுகள் கொண்ட மேனிக்கு சொந்தக்காரி. 
நொடிக்கு நூறு கதைபேசும் குண்டு கண்முழிகள் அவளின் அழகை இரட்டிப்பாக்கி கொண்டிருந்தன.
அவளை நேர்க்கொண்டு பேசும் எந்த ஆணும் ஒரு நொடியேனும் அந்த கண்களை எதிர்கொள்ளமுடியாமல் தடுமாறிப் போவான். மொத்தத்தில் நல்ல அழகி. வறுமையும், துன்பமும் சேர்ந்து வயதிற்கு மீறிய முதிர்ச்சியடைந்த தோற்றத்தை அவளுக்கு ஏற்படுத்தியிருந்தாலும்,
அவை எதுவும் குறையாய் தோன்றவில்லை.

பாவம் அவள் வாழ்க்கைதான் சூனியமாகிவிட்டது. இப்பொழுதெல்லாம் 
பசுமையான நாட்கள் அவள் நினைவிலிருந்து முழுதாக மறைந்து போயிருந்தது. உலகத்தையே வெறுத்து, விரக்தியின் உச்சத்தில் இருந்தாள். எதிலும் பிடிப்பில்லை. வாழ்க்கை அவளை பந்தாடிக்கொண்டிருந்தது. 
காதலித்து கரம் பிடித்தவன்,
இன்று முற்றிலும் அந்நியனாக 
மாறிப் போயிருந்தான். 
குடி அவனை அடிமையாக்கி வைத்திருந்தது. பொண்டாட்டி, 
பிள்ளைகளை பற்றி சிறிதேனும் அக்கறையின்றி 
தான்தோன்றித்தனமாக திரிந்து கொண்டிருந்தான். கிடைக்கும் கூலி வேலையை செய்வான். பிறகு
மாடாய் உழைத்து சம்பாதித்த 
காசுக்கு மூக்கு முட்ட குடித்து விட்டு 
மர்ம ஸ்தானங்கள் வெளித்தெரிய பொதுவெளியில் விழுந்து கிடப்பான்.
இல்லையென்றால் முழுபோதையில் வந்து காரணமின்றி அவளை 
அடித்து, துவைப்பான். 
அதிசயமாக சில நாட்கள் வீட்டிற்கு அரிசி, பருப்பு, மாவு என சில அத்தியாவசிய மளிகை சாமான்களையும், பிள்ளைகளுக்கு தின்பண்டங்களையும் வாங்கி வருவான். அன்பாய் பேசிப்  
பரிவாய் நடந்து கொள்வான். 
தன்னுடைய வேண்டுதலுக்கு கடவுள் செவிசாய்த்து விட்டார், தாமதிக்காமல் நாளைக்கே நேர்த்திக்கடனை செய்து முடித்து விடவேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொள்வாள். இந்த நாடகம் தொடங்கி ஒரு வாரம்கூட முழுதாக கடந்திருக்காது மீண்டும் அவன் முருங்க மரத்தில் தொங்கி  கொண்டிருப்பான்.
எல்லாம் மாறிவிடும். அவனை திருத்தி வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையை முழுதாக இழந்திருந்தாள். அவனுக்காக உறவுகளை தூக்கியெறிந்துவிட்டு வந்தவளுக்கு தன் எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் பொய்த்து போனதென்று  புரியவந்த போது காலம் கடந்து மீண்டு எழமுடியாத பொறியில் அவளை சிக்கவைத்திருந்தது. கடந்து வந்த பாதையை மீட்டுப் பார்க்கும் பொழுது எதுவுமே புரியவில்லை! தன்னை உயிராக காதலித்தவன் இவனா? இல்லை நான் தவறாக புரிந்துகொண்டேனா? என்று பல நாட்கள் சிந்தித்து பார்த்தாள். 
எதுவுமே புலப்படவில்லை. 
யாரால்தான் எதிர்காலத்தை 
நூறு வீதம் சரியாக கணித்து  
வாழ்ந்து விடமுடியும்? 

அவள் அருகிலிருந்த சோற்றுப்  பானையை மடியில் எடுத்து வைத்துக்கொண்டாள். பிறகு 
அதில் தண்ணீரை தேவைக்கு மேலதிகமாகவே ஊற்றினாள். 
ஒரு கையில் பானையை அரவணைத்தபடி கெட்டியாக பிடித்துக்கொண்டு மறு கையால் பானையிலிருக்கும் சோற்றை 
நீருடன் சேர்த்து பிசைய ஆரம்பித்தாள். அதில் ஒரு கைப்பிடியளவுக்கு சரி சோறுயிருக்குமா என்பதே சந்தேகம்தான். அவன் தாயின் செய்கையில் வெற்றுப் பார்வையை பதித்து மனதை வேறு எங்கோ சூனியவெளியில் சிதறவிட்டப்படி தீவிர யோசனையிலிருந்தான். 
அவள் பானையில் உள்ள ஒரு பருக்கை சோற்றைகூட தவறவிட்டு விடாமல் மேலும் கீழுமாக துழாவி வழித்து ஒன்று சேர்த்து நீருடன் 
கலந்து நன்றாக பிசைந்து 
கரைத்து கொண்டிருந்தாள். 
அது என்ன அட்சயப் பாத்திரமா ? 
அள்ள, அள்ள குறையாமல் வந்து கொண்டிருக்க, எவ்வளவு வழித்தாலும் உள்ளேயிருந்தால் 
தானே கையில் வரும். 

இப்போதைக்கு அவளின் நோக்கமெல்லாம் பிள்ளைகள் பட்டினியுடன் தூங்கிவிடக்கூடாது என்பது மட்டும்தான். 
உதவி கேட்கவும் நாதியில்லை. அயலவர்கள் யாரும் தங்களின் நிலையை கண்டுவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தாள். மூவரும் சிறு 
சப்தத்தைக்கூட எழுப்பவில்லை. எவ்வித  சம்பாஷணைகளும் அங்கு நிகழவில்லை. முன்திட்டம் எதுவும் இன்றியே மயான அமைதி கவ்வி கொண்டிருந்தது. அணைந்து போயிருந்த விளக்கும் அதற்கு உதவிற்று. அன்றிரவு நிலவுவெளிச்சம் கூட இல்லை. வெளியில் இருந்து பார்ப்பவர்கள் வீட்டில் யாருமில்லை அல்லது உறங்கியிருப்பார்கள் என்று நினைத்து கொள்ளக்கூடும். 
இந்த இரவை மட்டும் எப்படியாவது சமாளித்துவிட்டால் விடிந்ததும் எதாவது செய்து கொள்ளலாம் 
என்பது அவள் எண்ணம். 
எதன் அடிப்படையில் அப்படி எண்ணினாள் என்று தெரியவில்லை.
அந்த வெற்று நம்பிக்கைதான் 
அவளை வாழவைத்து கொண்டிருந்தது. ஒவ்வொரு விடியலும் எல்லா உயிர்களுக்கும் ஏதோ ஒரு புதிய வழியை திறந்து  விடுகிறது. அந்த நம்பிக்கைதான் அவளையும் இயக்கி கொண்டிருந்தது.

சோற்றை பிசைந்து முடித்திருந்தாள். 
பிறகு இரு டம்ளர்களில் அந்த சோற்று நீரையூற்றி பிள்ளைகளுக்கு பருகக்கொடுத்தாள். ஆகாரம் என்றெண்ணி ஆவலுடன் பருகிய  பிள்ளைகள் ஏமாந்து போனார்கள். அதை கஞ்சியென்று கூட சொல்ல முடியாது. சோற்று மணம் உள்ள நீர் அவ்வளவுதான். அவன் வயதில் சிறியவனாக இருந்தாலும் தாயின் நிர்கதியான நிலைமையை  விளங்கிக்கொள்ளும் அளவுக்கு பக்குவமுடையவனாக இருந்தான்.
எதுவும் பேசவில்லை.
கிடைத்ததை பருகிவிட்டு அமைதியானான். ஆனால் 
அவனின் தங்கை அதற்கு பழக்கப்பட்டிருக்கவில்லை. 
அவள் பால்குடி மறக்கடிக்கபட்டு சில மாதங்களே ஆன மழலை, பசியால் உண்டான கோபத்தை அழுகையால் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். 
அதேநேரம் கரும் இருட்டிலும் அம்மாவின் கண்களிலிருந்து 
சலனமே இல்லாமல் வழிந்து கொண்டிருந்த கண்ணீரையும் 
அவன்  கவனிக்கத்தவறவில்லை. கண்ணீரை துடைத்து விட்டு, தாயின் மார்பில் முகத்தை புதைத்து கொண்டான். அவனை இறுக்கி அணைத்துக் கொண்டு விசும்பினாள். அவளுக்கு அன்றைய  இரவு வெற்றுப் பானையில் மிச்சமிருந்த தண்ணீர் மட்டும் ஆகாரமாகிப்போனது.

நேரம் இரவு ஒன்பது மணியை 
கடந்து ஊரே உறங்கி விட்டிருந்தது. 
சிறு சலனமில்லை. இராப்பூச்சியின் கிர்ர்ர்ர்..., கிர்ர்ர்ர்....,  என்ற ரீங்காரம் மட்டும் இடைவெளிவிட்டு, விட்டு கேட்டுக்கொண்டிருந்தது. 
இருட்டில் தட்டுத்தடுமாறி பாயை விரித்து தலைகாணியை எடுத்து வைத்து படுக்கையை தயார் செய்து 
பிள்ளைகளுக்கு நடுவில் படுத்துக் கொண்டாள். அழுது தீர்த்து விட்டிருந்த தங்கை அம்மாவின் வெற்று மார்பை உறிஞ்சியபடி பசி மயக்கத்திலே அவளின் நெஞ்சு குழிக்குள் முடங்கி உறங்கி விட்டிருந்தாள். 
அவன் பகல் நிகழ்ந்த சம்பவங்களை மனதில் மீட்டப்படி பசியை மறக்கடித்து கொண்டிருந்தான். அதை மறக்க நினைக்கும் போதுதான் மீண்டும் மீண்டும் அதிகமாக நினைவில் வந்துகொண்டிருந்தது. 

அன்று பகல் பாடசாலைவிட்டு 
வீடு வந்து சேர்ந்த பொழுது வீட்டில் சிதறிக்கிடந்த பொருட்களும், வீங்கிய முகத்துடன் தலைமுடியெல்லாம் கலைந்து அழுது சிவந்த கண்களுடன்  கலையிழந்து போயிருந்த அம்மாவின் முகம் அங்கு என்ன நடந்திருக்ககூடும் என்பதை காட்சி படிமங்களாக  மனக்கண்ணில் உருவாக்கியது. வீட்டில் சண்டைவரும் போதெல்லாம் சேதப்படுத்துவதற்கு என்று அப்பாவிடம் இருந்தது, ஒன்று அந்த நெளிந்து போன பழைய அலுமினிய சோற்றுப்பானை மற்றையது அம்மா. அவன் அம்மாவின் நிலையைகண்டு மிகுந்த துயருற்றான். கண்கள் 
அவன் கட்டுப்பாட்டை இழந்தது. அழுதான். அவனால் எதையும் மாற்றமுடியவில்லை. நடப்பவையெல்லாம் அவன் 
சக்திக்கு மீறியதாக இருந்தது. 
இந்த நிலைமையை எப்படி எதிர்க்கொள்வதென்று அவனுக்கு  தெரியவில்லை. அப்பா தினமும் குடிவெறியில் வந்து அம்மாவை இழுத்து போட்டு அடித்து உதைப்பதும், இதை பார்த்து தானும் தங்கையும் கதறி அழுவதும் பிறகு சத்தம் கேட்டு அயலவர்கள் யாராவது வந்து நிலைமையை சரி செய்வதுமாகவே  பெரும்பலான நாட்கள் துயரமாக கடந்து போய்க்கொண்டிருந்தது.
சில சமயங்களில் உடனே யாரும் வருவதுமில்லை. அன்றாடம் நிகழும் நிகழ்வு என்பதால் அவர்களும்  சலிப்படைந்து போயிருக்கலாம். 
அச்சந்தர்ப்பங்களில் என்ன செய்வதென்று புரியாமல் 
மேலும் சத்தமாக வீறிட்டு அழுதப்படி துடித்து கொண்டிருப்பான். அவன் கண்முன்னே மோசமான வன்முறை காட்சி நிகழ்ந்து கொண்டிருக்கும்.
அவளின் தலைமுடியை பிடித்திழுத்து முகத்திலும் தலையிலும் சளார், பளார் என அறைந்து கீழே தள்ளி சரமாரியாக வயிற்றிலும், நெஞ்சிலும் மிதிக்கும் பொழுதில் அவளின் அலறல் விசித்திரமான ஒலிகளை எழுப்பி முனங்களாக வெளிப்படும். பல தருணங்களில் அவளுக்கு  ஆடையுடன் மூத்திரம் போயிருக்கும். இத்தனை முரட்டுத்தனமான கொலைவெறி தாக்குதலுக்கு பின்பும் அவள் உயிருடன் இருப்பதுதான் அவனுக்கு மேலும் ஆச்சரியத்தை அளித்தது! இதை அருகிலிருந்து பார்த்து அவனும், தங்கையும் கதறி அழுது கொண்டிருப்பார்கள். அந்த மிருகம் இவை எதையும் பற்றி துளியேனும் கவலையின்றி தன்வெறியாட்டத்தை நடத்தி முடித்துவிட்டு கெட்ட வார்த்தைகளால் உரத்த குரலில் அவளை திட்டிக்கொண்டு போதையில் சரிந்து கிடக்கும். இதையெல்லாம் நித்தமும் பார்த்து தான் ஒரு மனநோயாளியாகவோ இல்லை மோசமான சைக்கோவாகவோ  மாறிவிடுவேன் என்று பயந்தான். இது அவனுக்கு பெரும் மனச்சிதைவை உண்டாக்கியது. தான் வளர்ந்து பெரியவன் ஆனதும் இதையெல்லாம் சரி செய்து விடலாமென்று  நினைப்பான். ஆனால் அதுவொன்றும் ஒரே நாளில் நிகழ்ந்து விடாதே, இன்னும் எத்தனை வருடங்களுக்கு இதை தாங்கி கொள்ளப்போகிறேன் என்பதை நினைக்கும் தருணங்களில் 
மேலும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகினான். அந்த கணம் மண்டை வெடித்துச் சுக்குநூறாக சிதறிவிடும் போலிருக்கும்.  

இந்த துயர்மிகு நரகவாழ்க்கையில் இருந்து தப்பிக்க அவனுக்கு இரண்டு வழியிருந்தது ஒன்று உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் அல்லது வீட்டை விட்டு எங்காவது வெகுதூரம் ஓடி விடவேண்டும். 
எப்படி தற்கொலை செய்து கொள்ளமுடியும்? அதற்கான வழிமுறைகள் என்னவென்பதே  சரியாக தெரியாத வயதில், அவனுக்கு தெரிந்த முறையெல்லாம் வலியை ஏற்படுத்தும் என்பதே அவனுக்கு மரணம் பற்றிய பெரும் அச்சத்தை உண்டாக்கியது. சாகத்துணிந்தவன் வலியை பற்றி யோசிப்பதெல்லாம் உங்களுக்கு முரண்நகையாக தோன்றலாம். அவனுக்கு தேவை விடுதலை அதைதான் எதோ ஒரு ரூபத்தில் தேடிக்கொண்டிருந்தான். மரணமும் நிரந்தர விடுதலைக்கான ஒரு மார்க்கம் என்பதே சாகத் துணிந்ததன் காரணம். 
அல்லது வீட்டை விட்டு எங்காவது தூரமாக ஓடி விடவேண்டும். இங்கிருந்து நித்தமும் மனதாலும், உடலாலும் வதைப்படுவதைவிட  வெளியேயிருக்கும் ஆபத்துக்களோ, நிச்சயமின்மையோ அவனை பெரிதாக பயமுறுத்தவில்லை. ஆனால் இந்த நரகத்தில் அம்மாவை மட்டும் தனியாக விட்டு போவதை அவன் விரும்பவில்லை. அவளுக்கும் இதே எண்ணங்கள் தோன்றும் ஆனால் நான் இல்லாவிட்டால் என் பிள்ளைகள் நாதியற்றுப்போய் விடுவார்கள். அவர்களை வளர்த்து கரைசேர்த்து விட வேண்டும், என்ற வைராக்கியத்தில் எல்லாக்  கொடுமைகளையும் தாங்கி கொண்டிருந்தாள். இன்னொரு விஷயமும் அவனுக்கு புரியாத மாயமாகவே இருந்தது.
எதற்கு அவள் இத்தனை துன்பத்தை அனுபவித்து கொண்டு இந்த மிருகத்துடன் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதே, பிரிந்து செல்லவிடாமல்
எது அவளை தடுக்கிறது? 
அவர்கள் அன்னியோன்யமாக இருந்தோ, கொஞ்சி குலாவியோ  பார்த்ததில்லை. இப்படி  குழப்பங்களுடனே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

பெரும்பாலும் ஒவ்வொரு நாளிரவும் அவனுக்கு நரகமாகவே முடிந்தது.
தன் சக்திக்கு மீறிய ஒன்றை மாற்றி அமைக்க, இல்லாத ஒன்றிடம்
சரணடைவது தானே மனித இயல்பு.
அவனும் அதையே செய்தான்.
தினமும் இன்றைய இரவு அமைதியாக முடிந்து விடவேண்டும் என்று கடவுளர்களை தீவிரமாக 
பிரார்த்திப்பான்.

"கடவுளே இன்னைக்கு சண்ட வரக்கூடாது "
" அப்பா குடிச்சிட்டு வரக்கூடாது "

"சண்ட வரக்கூடாது"  

"சண்ட வரக்கூடாது "

"சண்ட வரக்கூடாது "

"சண்ட வரக்கூடாது "

"சண்ட வரக்கூடாது "

"சண்ட வரக்கூடாது "

என்று பல நூறுமுறை மனதிற்குள் இடைவிடாது வேண்டிக்கொண்டே இருப்பான். சில நேரம் எதோ ஒரு கடவுள் அவன் வேண்டுதலை 
ஏற்றுக்கொள்வதுமுண்டு. மறுநாள் அதற்கும் சேர்த்து வைத்தாற் போல்  வதைத்து விடுவார். 

ஏன் மற்ற குடும்பங்களை போல என் குடும்பம் சந்தோசமாகயில்லை? 
என் அப்பாவை போல வேலைக்கு போகாமல் அவர்களின் அப்பாமார்கள் போதையில் வந்து தங்கள் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி பிள்ளைகளை வதைப்பதில்லை?
நித்தமும் பசி, வறுமை, சண்டையென  அமைதியற்று நாங்கள் துன்புறும் போது மற்றவர்கள் சிரித்து மகிழ்ந்து இன்பமாக வாழ்ந்து  கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கொடுத்த அமைதியான வாழ்க்கையை கடவுள் எங்களுக்கு மட்டும் ஏன் கொடுக்காமல் போனார்? என்று பல கேள்விகள் அவன் மனதிற்குள்ளே ஏக்கமாக ஒலித்தபடியிருக்கும். 

யோசனையில் எங்கோ தொலைந்து மீண்டு நினைவுக்கு வந்தவனாய், 
இப்பொழுது கொஞ்சம் சரி தூங்க முடிந்தால் நன்றாகயிருக்கும் என்று  முயற்சித்தான். ஆனால், முடியவில்லை. நீண்ட நேரமாக உறக்கமில்லாமல் புரண்டு படுத்தபடியிருந்தான். வயிற்றை தின்றுக் கொண்டிருக்கும் பசியைவிட இன்றைய இரவு நிம்மதியாக முடிந்தால் தேவலையேன்றிருந்தது. 
அன்றிரவு அப்பா சாப்பாட்டுக்கு தேவையான மளிகை சாமான்களுடன் வந்து அம்மாவை எழுப்பி நடுசாமத்தில் சமைக்க சொல்லலாம். இல்லாவிட்டால் மீண்டும் குடிவெறியில் வந்து பகல் விட்டகுறையை தொடர்ந்து அவளை அடித்து, துவைத்து தூஷண வார்த்தைகளால் திட்டி அந்த சோற்று பானையை மேலும் நெளித்து, தன் வீரத்தை நிலை நாட்டிக்கொள்ளலாம். இதை நினைத்து பார்க்கும் போதே அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. மீண்டும் மனதிற்குள் "கடவுளே இன்றைய இரவு  
அமைதியாக முடிந்து விடவேண்டும்" என்று தீவிரமாக வேண்டிக் கொண்டிருந்தபடியே உறங்கிப்  போனான். 

கடவுள் தான் ஒரு கையாலாகாதவன்  என்பதை அன்றைய இரவு மீண்டும் ஒரு முறை நிரூபித்தான். 

***

Comments

  1. நல்லாயிருக்கு சகோ கதை மற்றும் வார்த்தை கோர்வைகள்.

    ReplyDelete
  2. ஏழ்மை நிலையில் உள்ள சாதாரண பெண்கள் இப் படித் தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையா அல்லது சின்ன பையன் மனநிலை சொல்லும் முயற்சி மட்டும் தானா?

    ReplyDelete
    Replies
    1. அந்த துயர வாழ்க்கையில் நம்மை வைத்து பாருங்கள். பதில் கிடைக்கும்

      Delete
  3. Replies
    1. உங்களுக்கும் எனது நன்றி !

      Delete
  4. Ludovic Ludvic மிக்க நன்றி ப்ரோ !❤️ தேர்ந்த ரசனையாளர் ஆன உங்களிடம் இருந்து இந்த வார்த்தைகளை கேட்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I