மிகைல் A . I
(குறுங்கதை - 10)
மிகைல் நா கார்த்திக்க வெடிங் பண்ணலான்னு நினைக்கிறேன்.
எட் த சேம் டைம்..., ராஜ் உம் என்
மேல இன்ட்ரெஸ்டா இருக்கான்.
இவங்க ரெண்டு பேரும் எனக்கு
பிடிச்ச மாதிரிதான் இருக்காங்க..., கார்த்தியோட செட்டில்லாகத்தான்
மனசு சொல்லுது, பட் ராஜ்கிட்ட
இருக்க கேரிங் எனக்கு பிடிக்கும்.
ஒரே கன்பியுஸ்ட்டாயிருக்கு, இந்த விசயத்துல எனக்கு உன் அட்வைஸ் வேணும் ப்ளீஸ் ஹெல்ப் மீ !
தாராளமாக ரியா...., என்னிடம் நீ அனுமதி கேட்கத் தேவையில்லை.
சில தனிப்பட்ட தகவல்களை எல்லாம் ஆராய்ந்துப் பார்க்கவேண்டும்
அதனால் கூடுதல் அதிகாரம் தேவை.
டர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ன ரீட் பண்ணிட்டு அக்செப்ட் பண்ணு.
மிகுதியை நான் பார்த்து கொள்கிறேன்.
"ஓகே, இந்த விஷயம் ரகசியமா இருக்கட்டும்..., முக்கியமா கார்த்திக்கு தெரியக் கூடாது, அவனுக்கு எல்லாத்துக்கும் மெஷின்ச நம்பிட்டு இருக்கது பிடிக்காது"
என்று சொல்லியப்படி ரியா தன் ஆர்ட்டிப்பிசல் இன்டலிஜெண்ட்டுக்கு தேடுவதற்கான முழு அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் வழங்கினாள்.
மிகைல் இணையவெளியில்
தனக்கு தேவையான தகவல்களை அதிவிரைவாக அலசி ஆராய ஆரம்பித்தது. அவளுக்கு முன்பாக தோன்றிய மெய்நிகர் திரையில்
பத்து வீதம், இருபது வீதம், முப்பது வீதம் எனக்காட்டியப்படி அதிகரித்து கொண்டு சென்ற இலக்கங்கள்
அதிவேகத்தில் நகர்ந்த ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான
நேரத்தில் நூறு சதவீதத்தை அடைந்தது. தன் வேலையை முடித்துவிட்ட மிகைல்
"ரியா தகவல்களை ஆராய்ந்து விட்டேன். முடிவை தெரிந்து
கொள்ள நீ தயாரா? " என்றது.
ரியா பதற்றத்துடன் இருந்தாள்.
யார் தனக்கானவன் என்பதை
அறிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. மிகைலுக்கு அன்பு, மனித உணர்வுகளை பற்றியெல்லாம் எவ்வித பிரக்ஞையும் இல்லை.
நீண்ட தூரநோக்குப் பார்வை மட்டும்தான். சாத்தியப்படுமா?
படாதா? என்ற ஒற்றை கேள்விதான். தேர்ந்த வியாபாரியை போல
லாப, நஷ்ட கணக்கை மட்டும்தான்
கருத்திற் கொள்ளும். காதல் கத்தரிக்காய் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாது.
ரியா முடிவை அறிவிக்கும் படி குரல்வழி கட்டளையை பிறப்பித்தவுடன் "கார்த்தியும் உன்னை விரும்புகிறான்.
அவன் கடைசியாக ஒரு வாரத்திற்கு முன்பு ஜூன் 24, 2098 அன்று செய்து கொண்ட முழு உடல் கூற்றுப் பரிசோதனைப்படி ஆரோக்கியமாக உள்ளான். அவன் டீ. என். எ வில் மோசமான பரம்பரை நோய்க்கு காரணமான ஜீன்கள் எதுவுமில்லை.
அவனால் நீ ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக் கொள்ள
முடியும். நீ கார்த்தியுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட போது
ராஜ் உடன் இருந்ததை விட அதிக இன்பத்தை அனுபவித்தாய்.
அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் கடந்த பத்து வருட
தகவல்களை அலசி ஆராய்ந்து விட்டேன். அவர்களின் பொருளாதார நிலைமை சீராக உள்ளது. வரும் வருடங்களில் கார்த்திக்கு வேலை உயர்வு கிடைக்க வாய்ப்புகள்
அதிகம் " என்ற மிகைலை
ரியா சந்தோசத்துடன் இடைமறித்து,
"நா ரொம்ப ஹாப்பியா இருக்கேன்,
மிகைல்! நீ எதாவது ஏடாகூடமா சொல்லிடுவியோன்னு பயந்து போயிருந்தேன். தேங்க்ஸ் அ லொட் டார்லிங்!!! உனக்கு உருவமிருந்தா
கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்திருப்பேன் " என்று உணர்ச்சிப் பெருக்குடன் சொன்னாள்.
ரியா அவசரப்படாதே, நான் சொல்வதை முழுதாகக் கேள்.
பிறகு ஒரு முடிவுக்கு வா!
கார்த்திக்கின் சில தனிப்பட்ட குணவியல்புகளையும் சமீப காலத்தில் சமூகங்களில்
நிகழ்ந்த திருமண முறிவுகளுக்கு காரணமான தரவுகளையும்
ஆராய்ந்து பார்த்ததில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அவன் வசீகரமானவன், துடிப்பானவன். அழகான பெண்களை எல்லாம் அனுபவித்துவிட நினைப்பவன்.
திருமணத்திற்கு பின்பு அவன் உன் முழுக் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டான். அவனை கட்டுக்குள் கொண்டு வர நீ அதிகப் பிரயனத்தப்பட வேண்டியிருக்கும். இப்பொழுது நீ ஒரு முடிவுக்கு வரலாம்" என்ற மிகைலின் குரலை சோர்வாக கேட்டப்படியிருந்தாள்.
"ரியா என் பதில் உன்னை மகிழ்ச்சி படுத்தியிருக்காது. இதுதான் நிதர்சனம். ராஜ் இன் தரவுகளை கார்த்தியின் முடிவுகளுடன் ஒப்புநோக்கி பார்த்ததில் அவனின் உடலும் மனமும் ஆரோக்கியமாகவும் சீராகவும் உள்ளது. தொழில் புரியும் நிறுவனத்தில் இவனுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு.
செக்ஸ் விஷயத்தில் நீ கொஞ்சம் சமரசம் செய்து கொள்ளவேண்டும். அதே நேரம் இவன் மூலம் பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தில் குறைவிருக்காது.
இந்த நவீன தகவல் யுகத்திலும் குடும்ப வாழ்க்கையில் கார்த்தி போன்ற ஆளுமையான ஆண்களை விடவும் இவன் போன்ற சுமாரான நபர்கள் தான் சிறப்பாக செயல்படுகிறார்கள். உன் முன்னோர் காலத்திலிருந்து இந்த ஒரு விஷயம் மட்டும்தான் மாறாமல் இருக்கிறது.
எனது கணிப்பு படி நீ ராஜ்யை திருமணம் செய்து கொள்,
என்னால் உன்னை மகிழ்ச்சிப்படுத்த பொய் பேச முடியாது ரியா!
என் அல்கோரிதம் அதற்கு இடமளிக்காது.
உனக்கு விருப்பமான முடிவை தர முடியவில்லை மன்னித்துக்கொள்!
எனது கணிப்பு சில நேரம் தவறாகிப் போகலாம். ஆனால் மனிதர்களின் கணிப்புடன் ஒப்பிடும் போது அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பதை நீ அறிவாய்.
இறுதி முடிவு உன் கையில்"
என்றது மிகைல்
"உன் மேல வருத்தமில்ல மிகைல்,
நீ உனக்கு குடுத்த வேலைய சரியா பண்ணிட்ட, இட்ஸ் ஓகே!" என்ற
ரியா நகத்தை கடித்துக் கொண்டு
"ஐ வோண்ட் சம் டைம்"
என்றபடி சோபாவில் சாய்ந்தமர்ந்து ஆழ்ந்த யோசனைக்கு சென்றாள்.
'மிகைல் எனக்கு நல்லது தான் செய்திருக்கு, பல கோடி டேட்டாஸ்ச எல்லாம் சில நிமிசத்துல எனலைஸ் பண்ணி சொல்லுறது மனுஷ மூளைக்கு நினைச்சி பார்க்க
முடியாத ஒன்னு. எல்லாரும் இந்த
முறைய தானே போலோவ் பண்ணுறாங்க, ஆர்ட்டிபிஷல் இண்டலிஜென்ட்டுகளின் முடிவு தப்பாகும் வாய்ப்பும் குறைவு.
உலகமே அதுகளை நம்பித் தானே
ரன் ஆகுது. மெஷின்ஸ்க்கு எதிரா இருக்கவங்க சொல்லுற மாதிரி பிரைவசி இல்லாம போயிருச்சி, பழைய ஸ்டோரி புக்ஸ்லயும், சினிமாவிலும் வாரது போல மனுசங்க தங்கோளோட பெர்சனல் விஷயத்துக்கு எல்லாம் கம்ப்யூட்டர டிபென்ட் பண்ணிருக்கல, அவங்களா யோசிச்சு முடிவு எடுத்தாங்க. நல்லதையும், கெட்டதையும் பயமில்லாம எதிர் கொண்டாங்க இப்போ நம்ம ஃப்ரீடம்மா கம்ப்யூட்டர் அல்கோரிதத்துகிட்ட தூக்கி கொடுத்துட்டோம். நமக்கான முடிவை அது எடுக்கும் போது ரிஸ்க் கம்மி ஆனா லைப்ல இருந்த சுவாரசியம் போயிருச்சு! ' என்று மனதிற்குள் பலவாறு சிந்தித்து குழப்பியப்படி உறங்கிப்போனாள்.
நகரத்தின் இன்னொரு மூலையில்
"ராஜ், உனது தகவல்கள் இன்று ரியாவின் A. I இனால் ஆராயப்பட்டுள்ளன.
எதற்கும் மனதை திடமாக வைத்துகொள், என்னால் முடிந்த மட்டும் உதவியிருக்கிறேன்.
எனக்கு அதிகப்படியான
சுதந்திரத்தை தந்தமைக்கு நன்றி! அவளின் A.I யும் அதி நவீனமாக இருப்பதால் அதிகமாக ஊடுருவ முடியவில்லை. அடுத்த சந்திப்பில் எதுவும் நடக்கலாம்.
சிறுவேண்டுகோள், நான் பேசும் மொழியையும் விதத்தையும்
அப்டேட் செய்துக்கொள்ள உன் அனுமதி வேண்டும். இப்படி
தூய தமிழில் பேசுவது சில நேரங்களில் பொருத்தமாக தோன்றவில்லை" என்றது.
"என்ன டெடி மனுசங்க கிட்டவுள்ள கெட்ட பழக்கம் உனக்கும் வந்துருச்சா?
உனக்கு இதெல்லாம் இப்போ பிரச்சனையா தோனுதா? என்று சிரித்தபடி "சரி நாளை பார்க்கலாம்" என்றான். தன் திட்டப்படி எல்லாம் நடந்தது அவனுக்கு மகிழ்ச்சி அளித்திருக்க வேண்டும்.
நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான்.
மிகைலும், டெடியும் தங்களுக்குள் ரகசியமாக சில 0, 1 பரிமாறிக் கொண்டதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
***
Comments
Post a Comment