அங்கு யாரும் புலப்படவில்லை


(குறுங்கதை 12)

ஆளரவமே இல்லாத மலைக்காடு. பாதையின் இருபுறமும் செழித்து உயர்ந்த பைன் மரங்கள். 
பனிமூட்டம், குளிர்க் காற்று, நிலவொளி என ரம்மியமான 
இயற்கை அழகு ஆனால் நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கு ஒற்றையாகப்  பயணிக்கும் போது 
இவையெல்லாம் பூரிப்படைய செய்வதற்கு பதிலாக பீதியைக்  கிளப்பும்படியிருந்தன.

தனியாகக் காரை வேகமாக 
செலுத்திக் கொண்டிருந்தான். 
முடிந்த மட்டும் விரைவாக இந்த காட்டைக் கடந்து சென்று விடவேண்டும் என்பதே அவனின் முதல் நோக்கமாக இருந்தது. அமானுஷ்யம், ஆவிகள், இவற்றில் கொஞ்சம் நம்பிக்கையுண்டு. 
இந்த பாதையில் ஆவிகளின் நடமாட்டம் தொடர்பான கட்டுக் கதைகள் உலாவுவதால் மனதில் எழுந்த பயத்தை அடக்க முடியவில்லை. இம் மாதிரியான நேரங் கெட்ட நேரத்தில் தான் துர்ஆத்மாக்களின் இருப்பை பற்றிய ஆராய்ச்சியில் மனது ஈடுபட ஆரம்பித்தது. இடையிடையே சடசடத்து தாழ்வாகப்  பறந்துச் சென்ற வெளவால்கள் வேறு 
அதற்கு ஒத்து ஓதின!

இந்த எண்ணத்தை உடனே 
திசைத்  திருப்பி மனதை வேறு சிந்தனைகளில் மாற்ற எண்ணியப்படி காரிலிருந்த 
மியூசிக் பிளேயரை ஒலிக்க விட்டான். அரைமணி நேரப்பயணத்திற்கு பிறகு தொலைவில் ஏதோவொரு சிறு வெளிச்சம் தெரிவது போலிருந்தது. 
நெருங்க நெருங்க ஒளியின் அளவு பெருத்துக்கொண்டே போனது. 
அங்கு புலப்பட்ட காட்சி அவனை கலக்கமடையச் செய்தது. 

பாதையில் ஓர் இளம் பெண். 
அவள் இடப்பக்கத்தில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓர் ஸ்கூட்டீ. வெளிச்சம் அதிலிருந்து தான் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.  
காரை மறித்து உதவி கேட்கும் பாவனையில் நின்றுக் கொண்டிருந்தாள். 
பேய்ப் பயம் ஒருபக்கம். 
ஒரு கணம் நிறுத்தாமல் சென்று விடுவோமா என்று யோசித்தப்படியே உன்னிப்பாக அந்த இடத்தை நோட்டமிட்டான். இளம் பெண், சுடிதார், ஸ்கூட்டீ, கால்கள் இரண்டும் தரையில் பட்டுக்கொண்டிருந்தது. ஆடையின் நிறம் வெள்ளையில்லை. அவளை சுற்றி புகைபடலம் எதுவும் கிளம்பவில்லை. மொத்தத்தில் ஆவியென்ற முடிவுக்கு வர எந்த முகாந்திரமும் தென்படவில்லை.
கைகளை மார்புக்கு குறுக்காக நெருக்கிக் கொண்டு குளிரில் நடுங்கியபடியிருந்தாள்.

அருகில் சென்று காரை நிறுத்தினான்.
மோகினியே தோற்றுப் போய்விடுமளவுக்கு அழகியாக இருந்தாள். 'பேயா இருந்தா கூட பரவால்ல ரிஸ்க் எடு..! ' 
என்று ஆண்மனம் கெஞ்ச ஆரம்பித்தது. அவள் பயந்து போயிருந்தாள் என்பதை 
உடல் மொழிக்காட்டிற்று. 
இவனைப் பார்த்த பிறகு சற்று ஆசுவாசம் அடைந்தது போலிருந்தாள்.  

இருவரையும் சுமந்தபடி கார் அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கியது.
தான் ஒரு பத்திரிகை நிருபர் என்றும்,
அருகில் இருக்கும் ஓர் கிராமத்திற்கு போகும் வழியில் ஸ்கூட்டீ பழுதடைந்து நின்று விட்டதாகவும், அவ்விடத்தில் போன் கவரேஜ்ஜும் சுத்தமாகயில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்த சமயத்தில் தான் உங்களை சந்திக்க நேர்ந்தது என்று அவன் அனுமானித்த அதே கதையை பதற்றத்துடன் சொல்லி முடித்தாள். முறுவலித்தப்படி எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான். 
பேச்சு வேறு கட்டத்திற்கு தாவியது.

சற்று நேரத்திற்கு பிறகு 
இருவரும் மௌனமானார்கள்.
பாடல் மட்டும் மெல்லிய ஓசையில் ஒலித்துக் கொண்டிருந்து. வெளியில் கீச்...,கீச்..., கூர்ர்ர்ர்..., கூர்ர்ர்ர் என்ற இராப் பூச்சியின் இரைச்சலும், தூரத்தே ஓநாய்களின் உஊஊஉ...., ஊளைச் சத்தமும் அவளுக்கு பீதியை கிளப்பிவிட்டிருந்தது. இடைக்கிடையில் இவனை வேறு சந்தேகத்துடன் ஓரக்கண்ணால் பார்த்தப்படியே இருந்தாள். இனிமேல் இந்த மாதிரியான ஆபத்தான பயணத்திற்கு தனியாக கிளம்பக்கூடாது என்று மனதில் உறுதியாக எண்ணிக்கொண்டாள்.   

ஒரு மணிநேரப் பயணத்திற்கு பிறகு 
ஓர் சிறிய 'டீ கடை' கண்ணில்பட்டது. 
மின்சார வசதியில்லாத இடம்.
லாந்தர் விளக்கு தான் ஒளியூட்டிக்கொண்டிருந்தது. 
கொஞ்சம் வண்டியை நிறுத்தச்  சொன்னாள். அங்கு டெலிபோன் இருந்தால், அழைப்பை ஏற்படுத்தி விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றாள். அவள் அவ்விடத்தை 
விட்டு நகர்வதை பார்த்துக் கொண்டிருந்தவன் இவளை ஆவியென்று சந்தேகித்த தன் அறியாமையை நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக்  கொண்டான்.

அவளுக்கும் டீ கடைக்கும் பத்தடி இடைவெளித் தூரம் கூட இருந்திருக்காது. 
ஆனால் அதை அடைய பத்து 
நிமிடம் நடந்து சென்றாள். 
அங்கு யாரும் கண்ணில் படவில்லை. மங்கிய வெளிச்சத்தில் ஒன்றும் சரியாகப் புலப்படவும் இல்லை.
அவளுக்கு தன்னை சில மானிட உருவங்கள் ஊடுருவி இருட்டில் கலந்து மறைந்தது போலிருந்தது. 
உடலை சிலுப்பிக் கொண்டாள்.  
மெதுவாக " ஹலோவ்.... யாராச்சும் இருக்கீங்களா? " என்று குரல் எழுப்ப 
உள்ளிருந்து ஓர் வயதான பெரியவர் தூக்கக் கலக்கத்தில் தட்டுத் தடுமாறி முன் வந்து நின்றார். அவர் நடந்துதான் வந்தாரா? இல்லை திடீரெனெ முன் தோன்றினாரா? என்ற சந்தேகம் வேறு ஒரு கணம் தோன்றி மறைந்தது. தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. மனபிரம்மையாக இருக்கும் என்று சுயசமாதானம் செய்துக் கொண்டாள். இந்த நடுக்காட்டில் இவர் யாருக்கு? கடையை திறந்து வைத்துக்கொண்டிருக்கிறார். 
அதுவும் நடுசாமத்தில் என்ற குழப்பம் வேறு.

"ஒரு போன் பண்ணிக்க முடியுமா?" என்று கேட்க, "என்கிட்ட அதெல்லாம் இல்லமா..., இந்த சாமத்துல நீ என்ன இங்க பண்ணுற? இது மோசமான இடமாச்சே ! " என்று வாஞ்சையுடன் குசலம் விசாரித்தார். அருகில் உள்ள ஊருக்கு போகும் போது தான் மாட்டிக் கொண்ட கதையை சுருங்கச் சொன்னாள். 
"அந்த நடுக்காட்டுல இருந்து இவ்வளவு தூரம் நடந்தா வந்த!? " 
"இல்ல.., தாத்தா" என்றவள். 'கிழவனுக்கு கண்ணும் தெரியாது போல' என புரிந்துக் கொண்டு தனக்கு லிப்ட் கொடுத்த கார் இருந்த திசையில் கையை நீட்டிக் காட்டினாள். 
அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர், மிரட்சியுடன்  
"என்னமா... சொல்லுற!? அந்த வண்டி பல வருஷமா  இங்க தானே நின்னுட்டு இருக்கு!" எனக்கூறி கார் வடிவில் நின்ற ஓர் துருப்பு பிடித்த இரும்பு சட்டகத்தை காட்டினார். 
என்ன!? பெருசு உளறுதென்று  மனதில் நினைத்தப்படி 
திருப்பி பார்த்தாள். தலை சுற்றியது,  தான் வந்த அதே மோரீஸ் மாடல் கார், பழைய இரும்பாகக்  கண்ணில் தெரிந்தது. இதயத்துடிப்பு அதிகரித்து, நா வறண்டு போனது..., இது கனவா நிஜமா!?, நான் எங்கு இருக்கிறேன்? என எல்லாமே நோலனின் படம் போல அவளைக் குழப்பிற்று.

"அப்டினா... எனக்கு லிப்ட் 
குடுத்தது!? "
என்று வினவி அலன்று போனவளை, "சரி மா.. உள்ள வா, எதுவும் யோசிக்காத, விடியும் மட்டும் இங்க இரு. காலையில ஏதாச்சும் ஒரு வழி பண்ணிடலாம்" என்று சொல்லி உள்ளே அழைத்து ஒரு மர பெஞ்சைக்  காட்டித் தூங்கச் சொல்லிவிட்டு  "விடியும் மட்டும் எதைப் பார்த்தாலும், கேட்டாலும் கண்டுக்கொள்ளாதே" 
என்று எச்சரித்து விட்டு தன் கயிற்றுக்  கட்டிலில் மெதுவாக சாய்ந்து படுத்துக் கொண்டார். 

ஏற்கனவே அரண்டு போயிருந்தவளை கிழவனின் எச்சரிக்கை மேலும் மிரட்டிற்று!, மொபைலைக்  கையிலெடுத்துப் பார்த்தாள். பேட்டரி தீர்ந்து போகும் நிலையிலிருந்தது. கவரேஜ் வேறு  வருவதும் போவதுமாக விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தது. 
தான் இருக்கும் இடத்தின் அடையாளத்தையும் கடையைப்  பற்றியும் குறிப்பிட்டு ஓர் மெசேஜ்சை கௌதமிற்கு அனுப்பினாள். 
பிறகு அயற்சியில் அவளை அறியாமலேயே  தூங்கிப் போனாள்.

யாரோ எழுப்பும் குரல் கேட்டு எழுந்தாள். காலை வெயில் முகத்தை 
சுள்ளென எரித்துக் கொண்டிருந்தது.
மெதுவாக கண்களைத் திறக்க பார்த்தாள் முடியவில்லை, 
பேய் அடித்த மாதிரி உடம்பெல்லாம் கடுமையான வலி! மெதுவாக எழும்பினாள். அருகில் கௌதம் நின்றுக் கொண்டிருந்தான். 
வாட்டர் பாட்டிலை நீட்டியப்படி  
"என்ன டீ, நீ சொன்ன அடையாளத்துல ஒரு கடையும் இல்ல!, பழைய காரும் 
இல்ல! நீ ஏன் இங்க தூங்கிட்டு 
இருக்க, நைட்டு அடிச்ச சரக்கு எதும் கூடிடுச்சா? " என்றான் நக்கலாக. கண்களை கசக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள், வெட்டவெளியாக இருந்தது. அவளுக்கு எதோ புரிய ஆரம்பித்தது. "சரி இருட்ட முன்னுக்கு இந்தக் காட்டை விட்டு வெளிய போயிடுவோம்.  நா எல்லாத்தையும் விபரமா பிறகு உனக்கு சொல்லுறே" என்றாள்.

கௌதம் பைக்கை ஸ்டார்ட் செய்தான் அவள் பின்னால் அமர்ந்து கொண்டாள். சிறிது தூரம் கடந்த பின்பு, " என்ன நடந்துச்சுனு இப்போ சொல்லு, " என்று வலப்பக்க சைட் மிரரை சரி செய்தப்படி சீரியஸாக கேட்டான். "இப்போ தெரிஞ்சே ஆகணுமா...! " என்றாள் கடுப்புடன்.
அவன் பிறகு எதுவும் பேசவில்லை. 
இடப்பக்க சைட் மிரரையும் சரி செய்துப் பார்த்தான். பின்னால் இருந்து குரல் மட்டும் தான் கேட்டுக்கொண்டிருந்தது.
***


Comments

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I