வாட்ஸ்அப்

நடுச்சாமம். "த அதர்ஸ்" படத்தின் எதிர்பாராத முடிவை சிலாகித்தபடி டிவியை நிறுத்த மனமில்லாமல் 
பெயர் ஓடிக் கொண்டிருந்ததை பார்த்தபடியிருந்தான். 
அதில் ஏதேட்சையாக "ஜென்சி" 
என்ற அவளின் பெயரை காண நேர்ந்தது. என்ன கருமமிது? நினைவின் சரடுகளிலிருந்து முழுதாக அகற்ற நினைக்கும் ஒருத்தியை ஞாபக படுத்தும் விதமாக சமீபத்தில் இப்படி  ஏதாவதொன்று 
நடந்தபடியிருந்தது. 
'பெற்றன் ஸீக்கிங்' மனநிலை. 
படுக்கைக்கு சென்று நீண்ட 
நேரம் தூக்கமில்லாமல் கட்டிலில் புரண்டு படுத்தபடியிருந்தான்.

நேரம் இரவு பனிரெண்டை 
நெருங்கி கொண்டிருந்தது. 
காதலும் காமமும் கட்டுடைப்பு செய்யும் நேரமது. நெடும் யோசனைக்குப் பிறகு 
மொபைலை கையிலெடுத்து 
" மிஸ் யூ" என்று அவளுக்கு வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தியை 
தட்டி விட்டான். அது கிராமம், நகரம் காடு, மலை, பாலைவனம், ஏழு கடல் எல்லாம் ஓர் நொடியில் தாண்டி
உலக வரைபடத்தில் எங்கோ ஓர் மூலையில் இருக்கும் அவளிடம் போய்ச்சேர்ந்தது. 
சென்று அடைந்ததிற்கு அடையாளமாய் தொடுதிரையில் அடுத்தடுத்து இரண்டு ரைட் மார்க் விழுந்தது. இன்னும் சாம்பல் நிறத்திலிருந்து  நீலநிறமாக மாறவில்லை. நடுச்சாமம், 
தூங்கி கொண்டிருப்பாள். 
விடிந்ததும் பார்க்கலாம். 
ஒரு வேளை இந்த குறுஞ்செய்தி 
தன் வாழ்க்கையை மாற்றிவிடலாம் என்று நினைத்து கொண்டான். அதற்கு பிறகு வரும் ஐம்பது ஆண்டுகளில் இருவரும் வாழப்போகும் இனிமையான நாட்களை ஒரு நொடிக்குள் 
ப்பார்ஸ்ட் போவார்ட்  செய்து 
பார்த்து சொக்கிப் போனான். 
அடுத்த கணம் அவனை உயிரோடு எரித்து கொண்டிருக்கும் அவளின் கொடும்நினைவுகள் எச்சரிக்க, வேண்டாம். ஒரு தடவைபட்டதே போதும். இன்னும் அந்த ரணமே முழுதாய் ஆறவில்லையேன நினைத்தவனாய் அனுப்பிய 
குறுஞ்செய்தியை அழித்தான். 
பிறகு கனத்த மனதுடன் தூங்கிப்போனான். 

மறுநாள் காலையில் 
அவளிடமிருந்து வந்திருந்த 
"குட் மோர்னிங்" என்ற
குறுஞ்செய்தி கண்ணில்பட்டது. 
நெடும் நாளைக்கு பிறகு.
பதிலுக்கு "குட் மோர்னிங்" என்று  
தட்டி விட்டான். மாதத்தில் ஓரிரு தடவை நிகழும் நாடகமிது.
வழமை போலவே ஒப்புக்கு "எப்படியிருக்க?" என்று நலம் விசாரிக்க, அவள் 
"நல்லா இருக்கேன், நீங்க? " 
என்று பதிலுக்கு கேட்க, கடைசி மட்டும் பேச வேண்டியதை
பேசாமலே அந்த உரையாடல் முடிவுக்கு வந்தது. 

நாட்கள் நகர்ந்தன, அவன் 
மட்டும் டைம் லூப்பில் மாட்டிக்கிக்கொண்டவன் போல தொலைந்து போன இறந்த காலத்தினுள் அவள் நினைவுகளால் உழன்று கொண்டிருந்தான். 
மறுபடியும் சிறு முயற்சி, ஒரு புதுக்கவிதை வடிவில் உருப்பெற்றது.

 "நம் இறந்த காலத்தை எதிர்காலத்தில் சந்தித்தேன். 
அங்கே நீயும் நானும் 
நாம் கற்பனை செய்தப்படியே வாழ்ந்து கொண்டிருந்தோம். "

மனதில் அந்த கணத்தில் தோன்றியதை அப்படியே எழுதி அனுப்பிவிட்டான். அது அவள் மனதை தொடவில்லை போல, பதிலில்லை. அவளுக்கு கவிதை பிடிக்கும். என்னை பிடிக்காது போனதால் என் கவிதையும் உணர்வற்று வெற்று வார்த்தைகளாக மாறிப்போனது.

சில நாட்களுக்கு பிறகு திடீரென 
ஓர் நாள் அவளுடன் பேசி விடவேண்டும் என்ற மனஉந்துதலை தடுக்க முடியாமல் மொபைலை கையிலெடுத்து வாட்ஸ்அப்பினை திறந்து பார்த்த போது, அவள் தன் புகைப்படத்தை மாற்றியிருந்தாள்.  உன்னிப்பாக கவனித்த போது அவளுக்கு பக்கத்தில் ஓர் ஆண். இருவரும் ஜோடியாக சிரித்தபடி 
ஓர்  செல்ஃபீ. இவனுக்கு தூக்கிவாரிப் போட்டது! 
மனதில் எங்கோ ஓர் ஓரத்திலிருந்த கடைசி சொட்டு நம்பிக்கையும் நேனோ செக்கன்களில் 
கானலாகிப் போனது. 
அது யாராகயிருக்க கூடுமென்று  அனுமானிக்க முடிந்தாலும். 
அவளிடமே யார் என கேட்டுவிடுவதென்று 
தீர்மானித்தான். 
அதிலும் ஓர் நப்பாசை. 
அத்துடன் பெண்கள் புதிரானவர்கள், 
அது மாயதோற்றமாகிவிட வாய்ப்புகள் அதிகம். 
இல்லாவிட்டால் சந்தேகக்காரன் என்ற முத்திரை குத்தி அதையே பிரிந்து சென்றதற்கான வலுவான காரணமாக்கி முழு பழியையும் 
தன் மேல் சுமத்திவிடுவாள் என்ற உள்ளுணர்வால் எச்சரிக்கப்பட்டான்.

ப்ரொபைல் பிச்சர்ல உன் பக்கத்துல இருக்குறது யாரு ?

நீங்க யாருனு நினைக்கிறீங்க?

எனக்கு தெரியல...

சொல்லுங்க யாரா இருக்கலாம்? 

இல்ல.... நீயே சொல்லு?

சில நொடிகள் 'டைபிங்' என்று 
தொடுதிரை இவனுக்கு காட்டியது. 
கத்தியின்றி, ரத்தமின்றி அவன் இதயத்தில் சொருகுவதற்கு பொருத்தமான வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தாள்.
அந்த தாமதமே கிட்டத்தட்ட 
பதில் கிடைத்தமைக்கு சமன். பேராசைக்காரன் இருந்தாலும் காத்திருந்தான்.

அவர்தான் இனி எனக்கு எல்லாமே, 
நா வெடிங் பண்ணிக்க போறவரு...!

இப்போ போதுமா? 

ம்ம்ம்ம்ம்.... 

ஏரேஞ்ட் மேரேஜ்ஜா?

இல்ல... லவ்!

ம்ம்ம்ம்.... 

ஏரேஞ்ட்  பண்ணிக்கிட்டோம்.

ம்ம்ம்....

இருவருக்கும் சலித்து போன அதே பழைய வார்த்தைகளை மீண்டும் தொடுதிரையில் டைப் செய்தான். அநேகமாக இதுதான் கடைசி முறையாக இருக்ககூடும்.

நீ இனி எனக்கு மெசேஜ் பண்ணாத.
நானும் பண்ண மாட்டேன்.
என் மொபைல் நொம்பரை 
டிலிட் பண்ணிடு. 
என்று தட்டி அனுப்பிவிட்டான்.

ம்ம்ம்..., ஓகே!
என்று அவளிடமிருந்து பதில் வந்தது. 

இப்படியாக அந்த காதலின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டது.

***

Comments

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I