Perfume




2008 ஆம் வருடம் அப்போ நான் உயர்தரத்தில் (A/L) விஞ்ஞான பிரிவில் படிச்சுட்டு இருத்தேன். எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அந்த நேரத்துல பொண்ணுங்க வாசனையே தெரியாம காஞ்சி போய்ட்டு இருந்த காலக்கட்டம், முத்தம் கூட குடுத்தது இல்லை. ஆனா அவன் அப்பவே எல்லா மேட்டரும் முடிச்சிட்டு இருந்தான். இத்தனைக்கும்  என்ன விட வயசு குறைவு. ஒரு நாள் என்கிட்டே வந்து மச்சான்  School Science Leb ல இருந்து எனக்கு கொஞ்சம் மதுசாரம் (Alcohol) வேணும்னா, நான் எதுக்குடானு கேட்டேன். பர்ஃப்யூம்  ஒன்னு ரெடி பண்ண போறேன் அதுல மதுசாரத்தின் அளவு அதிகமா இருந்தா பொண்ணுகளுக்கு அந்த வாசனை ரொம்ப பிடிக்கும் அதுனாலதான்டானு சொல்ல. உனக்கு இதெல்லாம் எப்பிடி தெரியுமுன்னு கேட்டேன். பெர்ப்யூம் பற்றி நிறைய தகவல் சொன்னான், ஆண்களுக்கு செய்யப்படும் பெர்ப்பியூமில் பெண்களுக்கு பிடிச்ச வாசனை அதிகமா இருக்க மாதிரி தயார் பண்ணுவாங்க, அதேபோல் பெண்களின் பெர்ப்பியூமில் ஆண்களை மயக்க கூடிய வாசனை திரவியங்கள் மிகையா இருக்கும். வாசனை நல்லா இருக்கேனு மாத்தி அடிச்சிகிட்டா பொண்ணுகளுக்கு பதில் பசங்க தான் நெருங்கி வருவானுக அப்பிடி, இப்படினு ஒரு வகுப்பே எடுத்தான். அவன் சொன்னது அறிவியல் ரீதியாக உண்மையும் கூட. Perfume னு ஒரு படம் இருக்கு நீ பாரு நான் ஏன் கேக்குறேனு புரியும்னு சொன்னான். லைட்டா கிளைமாக்ஸ் சீனையும் சொல்ல. அப்போ தான் முதல் முறையா எனக்கு இந்த படம் அறிமுகம். கதைய கேட்டு ஏதே பிட்டு படமா இருக்கும்னு நினைச்சி பார்க்கல. அந்த நேரத்துல Jet Lee, Jackie Chan, Van damme ன்னு ஆக்க்ஷன், தற்காப்பு சண்டை காட்சிகள் உள்ள படங்கள் மட்டும் தான் விரும்பி பார்ப்பேன். பல வருடங்கள் கழித்து உலக சினிமாவின் அறிமுகத்திற்கு பிறகு கலை படங்கள் எல்லாம் பார்க்க தொடங்கிய பின்னர்  IMDb Rating எல்லாம் பார்த்து. 2019ல தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்த்து முடிந்ததும் ஒரு அருமையான படத்தை இவ்வளவு நாட்களா தவறவிட்டுடேனு தோணுச்சி

பிரான்ஸ் 18ம்  நூற்றாண்டு
வாசனை திரவியத்துக்கு புகழ் பெற்ற பாரிஸ் நகரம் தான் கதை களம். அதே ஊரில் ஒதுக்கு புறமாக உள்ள சந்தை நிலம் முழுவதும் சேறும், சகதியுமாக இருக்கிறது. வியாபார நேரம் இறைச்சி, மீன், என தமக்கு  வேண்டியவற்றை கொள்வனவு செய்தபடி  அழுக்கு படிந்த, உடையும் பல நாள் தண்ணிரயே பார்த்திராத உடலுமாக  சனக்கூட்டம் அங்கும், மிங்கும் நகர்த்தபடி இருக்கிறது.  குவியல், குவியலாக கிடக்கும் மீன், பன்றி வெட்டி அகற்றிய கழிவுகள், அதன் மேல் மொய்க்கும் ஈக்கள், ஒரு புறம் வாந்தி எடுக்கும் குடிகாரர்கள். முறையான வடிகால் இல்லாத படியால் தேங்கி நின்று துர்நாற்றம் வீசும் சாக்கடை நீர், என மிகவும் மாசுப்பட்ட இடம். இது எல்லாம் அவர்களுக்கு பொருட்டே இல்லை, பழக்கப்பட்ட ஒன்று சாதாரணமாக கடந்து போகின்றார்கள்.

அதே நேரம் சந்தையின் ஒரு புறத்தில் நிறைமாத கர்ப்பினியான பெண் ஒருத்தி மீனை சுத்தப்படுத்தியவண்ணம் தன் வேலையில் மும்முரமாக இருக்கின்றாள். திடீரென பிரசவ வலி எடுத்து அந்த இடத்திலேயே விழுந்து யாரின் உதவியும் இன்றி தனியாக அழகான ஆண் குழந்தை ஒன்றை ஈன்று எடுக்கின்றாள். மீன்குடலும், தலையுமென கழிவுகள்  குவிந்து கிடக்க அதன் மேலே நம் கதையின் நாயகன் ஆழ்ந்து சுவாசித்தப்படி இருக்கின்றான். ஏனோ அந்த தாய்க்கு அவனை வளர்க்கும் எண்ணம் இல்லை அவளை பொறுத்த வரை ஐந்தோடு, ஆறு. பின்பு அழுகுரல் கேட்டு மக்களால் கண்டெடுக்கபட்டு அனாதை ஆசிரமத்தில் வளர்க்கபடுகின்றான். வளர, வளர தனக்குள் இருக்கும் ஆழ்ந்த நுகரும் சக்தியை உணருகின்றான். கண்ணை மூடிக்கொண்டு காற்றை நுகர்ந்து தன்னை சுற்றியுள்ள சட, திட பொருட்களை உருவகப்படுத்தி விடும் அளவுக்கு திறன் படைத்தவன். துர்நாற்றத்திற்கு மத்தியில் பிறந்த படியால் என்னவோ அபரிதமான நுகரும் சக்தி உடையவனாகவும். அதே சமயம் தனக்கென்று ஒரு வாசனை அற்றவனாகவும், வாசனையே அவன் உலகமாகவும் மாறிப்போகின்றது. அவனை பொறுத்தவரை செத்து அழுகிபோன எலியில் இருந்து வரும் துர்நாற்றமும். மலர்களில் வரும் நறுமணம் ஒன்று தான், எல்லாம் வாசனை அவ்வளவே. அனைத்து மணங்களையும் ரசித்து, சுவைத்து நுகர தெரிந்தவன். அவனது தேடுதல் அடுத்த கட்டத்திற்கு போகின்றது. கல்லிற்கும், உலோகத்திறகும், உயிருக்கும் என இந்த உலகத்தில் உள்ள அணைத்துக்கும் ஒரு மணம் உண்டு. அதன் வாசனையை மட்டும் பிரித்து எடுக்க முயற்சி செய்கின்றான். வழமையான முறை அதற்கு சரிப்பட்டு வரவில்லை. பல தேடல்களுக்கு பிறகு கனவு கைகூடுகின்றது. விலையாக சில அழகான கன்னி பெண்களின் உயிர்களும், ஈவிரக்கம் மற்றவன்  என்ற கொலைகாரப்பட்டமும். கொலைசெய்யும் நோக்கம் இருக்கவில்லை, தன் பிறப்பின் அர்த்தத்தை உணர நாயகனுக்கு தன் செய்கைகள் எதுவுமே தவறாக தோன்றவில்லை. இந்த படத்தை பற்றி எழுதிக்கொண்டே  போகலாம், முழுக்கதையையும் விவரித்து படம் பார்க்கும் சுவையை குறைக்கும் விருப்பமில்லை. 

மிகுதியை நீங்களே பார்த்து ரசியுங்கள். இந்த படைப்பின் தரத்தில் அழகியலில் கலை இயக்குனருக்கு, ஒளிப்பதிவாளருக்கும் பேரும் பங்குண்டு. 300 வருடத்திற்கு முன்பான பாரிஸின் வீதிகளையும், கட்டிடங்களையும், மேட்டு குடிகளையும், ஏழை குடியானவர்களையும். உடைகள், அன்றாட வாழ்க்கையில் உபயோகித்த பொருட்கள் முதல் என எல்லாம் சேர்ந்து எம்மை அந்த காலகட்டத்திற்கே அழைத்து சென்று விடுகின்றார்கள். சினிமாவின் ஊடாக காலப்பயணம் செய்வது எனக்கு பிடிக்கும். அந்த வகையில் நல்ல விருந்து! இந்த கதைக்களமே முற்றிலும் புதிய அனுபவம். இந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சி போல, இந்திய சினிமாவில் எடுக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என சொல்ல தெரியவில்லை. நினைத்து பார்க்கும் பொழுது வியப்பாக  இருக்கிறது. கதாநாயகனை வெறுக்கவும் முடியவில்லை, அதேகணம் நேசிக்கவும் முடியவில்லை. Ben Whishaw அந்த பாத்திரமாகவே மாறி நேர்த்தியாக நடித்திருப்பார். ஒரு நாவலை மழுங்க செய்யாமல் சினிமாவாக மாற்றுவது அவ்வளவு எளிதல்ல அந்த வகையில் இயக்குனர் Tom Tykwer உயர்ந்து நிற்கின்றார். இனி நீங்கள் Perfume வாங்கும் போது எல்லாம்  இந்த படத்தின்  நினைவு வந்து போகும். சினிமா விரும்பிகள் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய படைப்பு.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I