கடந்து வந்த பாதை - 2


பொதுவாக ஆண்களின் பதினெட்டு  வயது தொடக்கம் முப்பது வயது வரையான காலக்கட்டம் ரொம்ப போராட்டம் மிகுந்ததாகயிருக்கும். வாழ்க்கையே போராட்டம்தான் இருந்தாலும் இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில்தான் ஒரு ஆண் வெளி உலகத்தை தனியா எதிர்கொள்ள ஆரம்பிக்குறான். இவ் பனிரெண்டு வருடங்களே அவன் வாழப்போகும் மிகுதி நாட்களை தீர்மானிக்க போகுது.  இக்காலப்பகுதியில் நல்ல வேலையை தேடி அலைஞ்சுட்டுயிருப்போம். கூடவே காதல் தோல்வி, குடும்ப சுமை. இப்படி ஒன்னு விட்டா ஒன்னுன்னு வந்து புரட்டி எடுத்துட்டுயிருக்கும். நானும் இதுக்கு விதிவிலக்கல்ல.

கடந்து வந்த பாதை முதல் பகுதியில் ஸ்ரீ பாதகல்லுரிக்கு இன்டெர்வியூ போனது பற்றி சொல்லியிருந்தேன். அதற்கு பிறகு (நல்ல) வேலை தேடும் படலத்தை  ரொம்ப தீவிரமா நடத்திட்டுயிருக்கும் போது நிகழ்ந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை பற்றி சொல்ல போறேன். வாங்க கதைக்குள்ள போகலாம்.

சண்டே ஒப்சவேர், டெய்லி மிரர் மாதிரியான ஆங்கில பத்திரிகைகளில் நல்ல வேலை வாய்ப்புக்கு விளம்பரங்கள் வரும் தேடிப்பார்த்து விண்ணப்பிச்சுபாருன்னு நலன்விரும்பிகள் சொல்லக்கேட்டு நானும் என்தகைமைக்கு ஏற்றமாதிரி ஒரு வேலையை தேடி கண்டுபிடிச்சு விண்ணப்பத்தையும் அனுப்பிட்டேன். அரும்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ்மென் வேலை. கவர்ச்சியான சம்பளம் வேறு.
அநேகமாக சுற்றுலா பயணிகள்தான் வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும்.

ஒரு நாள் அழைப்பு வந்துச்சு குறிப்பிட்ட திகதியில் நேரத்தையும் சொல்லி நேர்முக பரீட்சைக்கு வர சொல்லிருந்தாங்க. நாளும் வந்தது  நானும் பையில எடுத்துக்கிட்டு வெள்ளையும் சொள்ளையுமா புது சொக்கா எல்லாம் போட்டுக்கிட்டு  கிளம்பிட்டேன். இடத்தை ஒருவாறு  தேடிக்கண்டுபிடிச்சி போய்சேர்ந்தாச்சு. எதிர்பார்த்ததை விட பலமடங்கு பெரிய கட்டிடம் நட்சத்திர விடுதிக்கு உரிய செழிப்பில் இருந்தது.

உள்ளே நுழைந்ததும் ரிஷப்சனிட் ஒரு இடத்தை காட்டி இருக்க சொன்னாரு,  எனக்கு முதலே ஒரு பதினச்சு, இருபது பேர் காத்துட்டு இருந்தாங்க. நானும்  போய்ட்டு உக்காந்தேன். அப்படியே வந்து இருங்கவங்க மேல் பார்வையை திருப்பி நோட்டம் விட ஆரம்பித்தேன். சில பெண்கள் எதோ பரீட்சைக்கு ரெடி ஆகுறமாதிரி படிச்சிட்டு இருந்தாங்க. எனக்கு என்னத்த படிக்குறாங்கனு சுத்தமா ஐடியா இல்லை!? என்னதான்  இருந்தாலும் உங்க ஆர்வத்துக்கு ஒரு அளவு இல்லையானு மனசுல நினைச்சிட்டு பக்கத்துலயிருக்க இருக்க பையன்கிட்ட பேச்சு குடுக்கலாமுன்னு பார்த்தா அவன் வேறு கையில பெரிய சைஸ்ல புத்தகத்தை வச்சி பார்த்துட்டு இருந்தான். ஆர்வத்துல எட்டிபார்த்து அதிர்ந்து போனேன்! அது புத்தகமில்லை ஒரு பையில் முழுவதுமாக அவனோட செர்டிபிகேட்ஸ். அப்பிடியே என்னோடே பையில பார்த்தேன் O/L , A/L ரிசல்ட் சீட் ரெண்ட தவிர வேற ஒன்னுமில்லை. உடனே சுதாகரிச்சுகிட்டு அவன்  பார்வைபடாதமாதிரி என் பையில மறைச்சு வச்சுக்கிட்டேன். ஒரு பக்கம் பொண்ணுக வேற ஆக்ரோஷமா தயாராகிட்டு இருங்காங்க, இவன் வேற நம்மளவிட ஓவர் கோலிப்பைட்டா இருக்கான் முதலில் எழுந்து ஓடிடுவமானு தோணுச்சு. கதவு வேற அடைச்சுயிருந்தனாளே மெதுவா நழுவவும் முடியல, வசமா மாட்டிகிட்டோம். இப்போ என்ன செய்யலாம்முன்னு முழிச்சிட்டு உக்காந்துயிருக்கும் நேரம் என்னோடே முறையும் வந்தது.

உள்ளே போனேன். நேர்முக தேர்வு நடக்கும் அறை ஒரு வீட்டின் வரவேற்பறை உரிய அமைப்பில் இருந்து. எனக்கு நேராக சிறு இடைவெளி விட்டு ஒரு சிறிய தட்டையான சதுரவடிவ மேசை அதை தாண்டியிருக்கும் சோபாவில் கோட்சூட் எல்லாம் போட்டுக்கிட்டு நடுத்தர வயதை தாண்டிய ஒருத்தர் இருந்தார். (அநேகமாக அவர் மேனஜர் இல்லாட்டி  ப்ரெசிடெண்ட்டா இருக்கனும்) அவருக்கு வலப்பக்கமாகயிருந்த சோபாவில் மூனு பேர் அதில் ஒரு பெண் மற்றைய இருவரும் ஆண்கள். மூவரும் இளம் வயதினர். அவர்களும் காப்ரேட் கலாசாரத்துக்கு உரிய உடைகள் அணிந்து மிடுக்கா இருந்தாங்க.

இந்த செட்டப்ப பார்த்ததுமே நடிங்கிடுச்சி. நான் படத்துல கூட இப்படி ஒரு இன்டெர்வியூ சீன் பார்த்தது இல்லை. இனிமே தான் சம்பவமே நடக்க போகுதுனு எனக்கு தெரியாம போச்சு.., ஆமா திடிர்னு சரமாரியாக ஆங்கிலத்துல கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க, எனக்கு எதிரில் இருப்பவர் ஒரு கேள்வி கேட்டதும். அவருக்கு வலது பக்கமா உள்ளவங்க ஒரு கேள்வினு மாத்தி, மாத்தி கேட்க... எனக்கு அவங்க கேக்குறது என்னனு புரியுது ஆனால் சரியான முறையில் வேகமா பதில் சொல்ல முடியல.
Where are you studied ?
Are you working ?
Say something about your current job?
மாதிரியான சின்ன சின்ன கேள்விங்கதான் அவங்க கேட்டது. ஆங்கிலபுலமை இருக்கானு டெஸ்ட்  பண்ணும் நோக்கத்திலிருக்கலாம். நான் சரஸ்வதி சபதம் படத்துல சிவாஜிக்கு ஊமையாயிருந்து முதல் முதலா கடவுள் அருளால் பேச வரும் போது அவர் எப்படி "அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா......, அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பப்பானு....." திக்கி முக்கி பேச ஆரம்பிக்குற மாதிரி உளறிட்டுயிருந்தேன். ஊருக்குள்ள நான் பேசுற ரெண்டே இங்கிலிஷ் வார்த்தை ஒன்னு குட் மொர்னிங், பல சமயங்களில் "குட்" ட  கட் பண்ணிட்டு மொர்னிங் மட்டும். மற்றையது "தேங்க்ஸ்",  பொதுவா நான் வாழ்ந்த சமூகத்துல இதை தாண்டி இங்கிலிஷ் பேசி பழக வாய்ப்புகள் மிககுறைவு. அப்பிடிபட்ட எங்கிட்ட இப்படி கோர்வையா பேசினால் என்ன பண்ணுவேன். எப்போ முடியும் வெளிய ஓடுவமுனு காத்துட்டுயிருந்தேன்.
மனசு வேற அப்பவே சொன்னேன் இங்கிலிஷ்க்கு டியூசன் போ, போன்னு கேட்டியா? இப்போ நல்லா அவதிப்படுன்னு படுத்த ஆரம்பிச்சிருச்சி.

நீங்க யோசிக்கலாம் இங்கிலிஷ் பேப்பர்ல விளம்பரம் பாத்துட்டு  இன்டெர்வியூ போன உனக்கு  இங்கிலிஷ்ல கேள்வி கேப்பாங்கனு மட்டும் தெரியாம போச்சான்னு? இந்த சம்பவம் நடந்தது 2009 ம் ஆண்டு, சத்தியமா அந்த நேரம் இதுகூட தெரியாத முட்டாளாதான் இருந்தேன். முதலே தெரிஞ்சிருந்தா பாடமாகிட்டு சரி போயிட்டிருக்க மாட்டேனா?

மன்னிக்கணும் நட்புக்களே இன்டெர்வியூ பாதியில விட்டுட்டு எதோ பேசிட்டுயிருக்கேன். கதைக்கு வருவோம். பிறகு நான் பதில் சொல்லுறதுக்கு முக்குறதபாத்துட்டு அந்த பெரிய மனுஷனே "Okay naresh, you can go, We will let you know"  சொல்லி மரியாதையா வழியனுப்பிவச்சாரு. ஒரே லட்சையா போயிடுச்சி! இருந்தாலும் எனக்கு அவங்ககிட்ட பிடிச்ச விஷயம் என் இயலாமை பார்த்து பரிகாசம் செய்யல. நேரத்தை வீணடிக்குறானு அவமானப்படுத்தல ரொம்ப நாகரிகமா நடந்துகிட்டாங்க. சும்மா சொல்ல கூடாது  மேன் மக்கள் மேன் மக்களே!

வெளிய வந்தேன் பெரிதாக எதிர்பார்த்து வராதனாலே வருத்தம்மில்லை ஆனால் இன்னும் நிறைய கத்துக்கிறனுமுடா நரேஷ்னு  எனக்குள்ளயே சொல்லிக்கிட்டேன். எண்ணி ஆறு மாசத்துல இங்லிஷ்ச கரைச்சி குடிக்குறோம்முனு சங்கல்பம் வேற எடுத்துக்கிட்டேன். எடுத்த உறுதி  எடுத்ததோட சரி, ஆறு மாசத்துக்கு பிறகு என்ன நடந்திருக்குமுன்னு நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

எனக்கு ஏன் இங்கிலிஷ் ஒழுங்கா வரலன்னு நிறுவ இதைவிட சுவாரசியமான கதை (நொண்டிசாட்டு)  ஒன்னுயிருக்கு. இப்போ அத சொன்னா இந்த கதை இன்னும் ஒரு மடங்கு பெருசாகிடும். இப்பவே கொஞ்சமா எழுதுடா, இப்படி பெருசா எழுதிவச்சா வாசிக்க போர் அடிக்குதுனு தோழி அலுத்துக்கிறா! என்னடி இது அநியாமாயிருக்கு நாவல் எல்லாம் எழுதுறதுனா குறைத்து நானுறு பக்கங்கள் சரி எழுதணுமே? அப்போ நான் எப்படி எழுத்தாளன் ஆகுறதுனு கேட்டேன். இருந்தாலும் "எப்பவுமே உங்க வாசகர்கள் சொல்லுறத கேளுங்க" என்ற முன்னோடிகளின் கூற்றுக்கு அமைய, அதோட எனக்கு இருக்கும்  நாலு வாசகர்களில் அவளும் ஒருத்தி எதுக்கு வம்புனு அவ பேச்சை கேட்கலாமுன்னு  யோசிச்சுயிருக்கேன். (இத நீ இப்ப படிச்சிட்டு இருப்பன்னு தெரியும், ரொம்ப யோசிக்காத  உன்னைதான் சொல்லுறேன்)

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I