பாலைவன குறிப்புகள்


இந்த பாலை நிலம் பலவிஷயங்களை கற்று தந்தது. அதில் ஒன்றுதான் மரங்களையும், புல்நிலங்களையும், பட்சிகளையும் நேசிப்பது. பாலைவன பசுந்தரையேன்ற ஒன்றை பற்றி கேள்விபட்டுருக்கீங்களா? கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் வெறும் மணல் குன்றுகளால் நிரம்பியிருக்கும் பாலைவனத்தில் கொடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயில். வேறும் வார்த்தை ஜாலம் அல்ல கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத அளவுக்கு மோசமான தட்ப வெப்பநிலை. (இதே பாலைநிலம் வருடத்தில் பாதிநாட்களில்  குளிர்காலத்தையும் சந்திக்கும்) அப்படிபட்ட இடத்தில் இயற்கையாக நீரூற்று தோன்றி அதை சுற்றி மட்டும் மரங்களும், சிறு செடி கொடிகளும், புற்தரைகளும், பட்சிகளும் நிறைந்து பச்சைப்பசேலாக காட்சிதரும்.
வழித்தவறியவர்களுக்கும், பாலைநில ஜீவராசிகளுக்கும் அதுதான் பூலோகசொர்க்கம். அதன் எழிலை வார்த்தை கொண்டு விவரிக்க முடியாது. நிஜத்தில் நான் பார்த்தது இல்லை. ஆனால் ஹாலிவுட் படங்களில் பார்த்து ரசித்தது உண்டு.

நான் வசிக்கும் அல்-கோபார்  நகரத்தில் பிரமாண்டமான கட்டிடங்களும், நிலமே தெரியாதபடி எங்கும் தார் அல்லது கான்க்ரீட் கொண்டு அமைக்கபட்ட வீதிகளும். நொடிக்கு ஒரு தடவை நம்மை கடந்து சொல்லும் உயர் ரக வாகனங்களுக்கும் குறைவில்லை. அதேகணம் பூங்காவில் பார்த்தாலே ஒழிய, மரங்களையும், புற்தரைகளையும் இலகுவில் வேறு எங்கும் பார்த்து விட முடியாது. சவூதி இராஜாங்கம் வருடம் முழுவதும் மில்லியன் கணக்கான ரியால்களை செலவு செய்து பூங்காக்களை உருவாக்கி பராமரித்து வருகின்றது.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கோடையின் உச்சக்கட்டம். காலை மூன்று மணிக்கேல்லாம் சூரியோதயத்தை பார்க்கமுடியும். பகல் பன்னிரெண்டு மணிக்கு கொழுந்துவிட்டெரியும். அந்நேரத்தில் சில கிலோமீட்டர் நடத்து போனால் நாவறண்டு உயிர் பிரியும் வாய்ப்புகள் அதிகம். இப்பொழுது கற்பனை செய்து கொள்ளுங்கள் வெப்பத்தின் வீரியத்தை.

பெருநாள் விடுமுறை என்பதால் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து காலை தூக்கத்தையும் துறந்து  வெயில் சூடேறுவதற்கு முதல் பொடி  நடையாய் என் குடியிருப்புக்கு அருகிலிருக்கும் பூங்காவிற்கு வந்த ஒரே காரணம் மரங்களையும், புற்தரைகளையும், பட்சிகளையும் ரசிப்பதற்கு. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சுகம். காடுகளையும், இயற்கையையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் தாய் நாட்டில் இவையெல்லாம் என் அருகில் இருக்கும் போது அருமை புரியவில்லை. இப்பொழுது அதன் மீதான ஈர்ப்பு ஒரு படி கூடிவிட்டது.  எதுவுமே எனக்கு அருகிலிருக்கும் போது அதன் அருமை புரிவதில்லை. அது மரமாகயிருந்தாலும் சரி, மனிதராகயிருந்தாலும் சரி!

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I