என்னவள் இனியில்லை



நேற்று காதலியின் திருமணத்திற்கு அலையா விருந்தாளியாக போயிருந்தேன், முட்டாள்த்தனமான யோசனைதான். அங்கு செல்வதற்கு முன் எனக்கு நானே சில கட்டுப்பாடுகளை விதித்து கொண்டேன். அதற்கு கட்டுப்பட்டால் தாராளமாக போகலாம் என்பதுதான் நிபந்தனை. ஒன்று கண் கலங்க கூடாது, இரண்டாவது மனம் உடைத்து போக கூடாது, கடைசியாக சோகம் வெளியே தெரியாதபடி முகத்தை வைத்து கொள்ளவேண்டும். முகத்தில்  மெல்லிய புன்னகை தவழ்ந்தால் கூடுதல் தகைமை. முதலில் போவதே கிறுக்குத்தனமான யோசனை, விதிக்கபட்ட நிபந்தனைகள் கர்ணக்கொடூரம்! ம்ம்ம் சரி போவது என்று கடைசியில் முடிவாயிற்று.

திருமணநாள், மணமேடையினை பார்த்த வண்ணம் முன் வரிசையில் அமர்ந்து கொண்டேன். என்னை அவள் எதிர்பார்த்திருக்கமாட்டாள். வருகையை தெரியப்படுத்தவும் நான் விரும்பவில்லை. ஓரு வேலை அதுவாக நிகழ்ந்தால் நிகழட்டும். அவளருகில் என்னுடைய இடத்தில் வேறு ஒருவன் அமர்ந்திருத்தான். பாவம் அவன் மனதில் உள்ளவள் வேறு எங்கு அமர்த்திருந்தாலோ இல்லை இருப்பாளோ!? உலகம் இப்படிதான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு அசாதாரணமான நம்பிக்கை.நாம் எல்லோரும் மற்றவர்களின் அன்புக்குரியவர்களை தான் நமக்கு சொந்தமாக்கி கொண்டுருக்கிறோம்.

எனக்கு தெரியும் அவள் மனதில் என் இடத்தில் வேறு எவராலும் புகமுடியாது. அதை இருவரும் அறிவோம். நேசத்தாலயே கொன்ருவிடுவேன்!அதுவே என் வரமும் சாபமுமாகி போனது. நேரம் போக, போக இதய துடிப்பு மண்டபத்தின் பேரிரைச்சலிலும் தனியாக கேட்க ஆரம்பித்தது. இனி அவள் எனக்கில்லை என்பதை அந்த உயிர்த்துடிப்பு உணர்த்தியது. கண்கள் குளமாகியது, மனம் சுக்குநூறாக உடைத்து போனது, சோகம் வெளித்தெரிய ஆரம்பித்தது. நிபந்தனைகளை மீறிவிட்டேன். அதற்கு மேல் அங்கு எனக்கு வேலையில்லை மெதுவாக அவ்விடத்தை விட்டு நகர ஆரம்பித்தேன்.

நரேஷ் 09-19-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I