ரெண்டு ரியாலும் நவநாகரிக கக்கூஸ்சும்


இந்த சவூதி ரியால் நாணயத்தின் நம் நாட்டு பெறுமதி இன்றைய தேதியில் எவ்வளவென்று தெரியுமா? 97 ரூபா. சவூதி ரியால் ஒன்றின் நம் நாட்டு மதிப்பு 48.50 ரூபா (48.50 x 2= 97) கிட்டத்தட்ட நூறு ரூபாய்க்கு சமம். கூடிய விரைவில் அதையும் தாண்டிச் சென்றுவிடும். மூன்று வருடங்களுக்கு முதல் 35.53 ரூபாவாக இருந்த பணமதிப்பு இன்று 48.50 ரூபாயில் வந்து நிற்கிறது. இதற்கு என்ன அர்த்தமென்றால் நம்நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலமையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறதென்று. இன்னும் சில வருடங்களில் நிலமை மேலும் மோசமடையும் வாய்ப்புகள் அதிகம். இதையெல்லாம் யோசித்து பார்க்கும் பொழுது சில சமயங்களில் தாய் நாடாவது மயிராவது பேசாமல் இந்த பாலைவனத்திலேயே கடைசி மட்டும் 
இருந்து விடலாமென்று தோன்றும்.

நான் சொல்ல வந்தது இதுவல்ல, கடந்த வருடம் விடுமுறையில் மூன்று வருடங்களுக்கு பிறகு நாட்டுக்கு போயிருந்தேன். என் கிராமத்திலும், நகரத்திலும் சில மாற்றங்களை அவதானிக்க முடிந்தது. மக்களின் 
வாழ்கைத்தரம் மேம்பட்டு இருந்தது என்று சொல்லமாட்டேன். ஆனால் நுகரும் சக்தி அதிகரித்து காணப்பட்டது. எல்லோரிடத்திலும் மோட்டார் பைக், 
ஸ்கூட்டி, ஆட்டோ, கார் இவற்றில் எதோ ஒரு வாகனம் இருந்தது. (கூடவே நிறைய கடனும்) நகரத்தில் வியாபார ஸ்தாபனங்கள் புதிது புதிதாக முளைத்து காணப்பட்டது. ஒரு கடை வைத்திருந்த முதலாளிமார்கள் இரண்டு கடைக்கு சொந்தக்காரர்களாகி இருந்தார்கள். (பணக்காரர்கள் மேலும்  பணக்கார்களாக மாறிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பணத்தின் இயல்பு புரிந்திருந்தது அதனால் சிறப்பாக கையாண்டு பெருக்கி கொண்டிருந்தார்கள்) ஊரில் இருந்த சில மிடில் கிளாஸ் ஜீவன்கள் நன்றாகயிருந்த சிறிய வீட்டை உடைத்து பெரிதாக கட்டிக்கொண்டிருந்தார்கள். இன்னோரு சாரார் கிட்டத்தட்ட நான் 
சென்ற எல்லா வீடுகளிலும் நல்லா இருந்த டாய்லெட்டை உடைத்து அட்டாச் பாத்ரூமாக மாற்றி வைத்திருந்தார்கள். வீட்டின் வரவேற்பஅறையை விட பாத்ரூம் அழகாயிருத்தது. அதற்கு உண்டான செலவை கேட்டப்பொழுதுதான் எனக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது! அந்த தொகைக்கு ஒரு திருமணத்தையே நடத்தி முடித்து விடலாமா. இப்பொழுது நீங்களே தொகையை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஏன்டா கக்கா போக இவ்வளவு சிலவழிக்கணுமா!? (இது எனக்கு நானே கேட்டுகொண்ட கேள்வி மட்டுமே) பணக்காரன்கிட்ட தேவைக்கு அதிகமா காசுயிருக்கு. லக்ஸரி டாய்லட் எல்லாம் கட்டுறான். மிடில் கிளாஸ் நாமே அதெல்லாம் பண்ணலாமா? அதுவும் கடன்பட்டு. இதைத்தான் சொல்லவந்தேன் நாட்டில் பொருளாதாரம் நலிந்துவிட்டது. ஆனால் கடன் மலிந்துவிட்டது. வங்கிகள் எல்லாம் வலிந்து கடன் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். லீசிங் கம்பெனிகளும் வாகனம் ஒன்றரை வாங்குவதற்கான அடிப்படை தொகையின் அளவை  குறைத்து விட்டார்கள். இன்றைய தேதியில் மிக சொற்பதொகையை செலுத்தி ஒரு வாகனத்தை வாங்கி விடமுடியும்.  என்ன பெட்ரோல் போட காசு இருக்காது. விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் வாங்கி விடலாம் ரீசார்ஜ் செய்ய காசு இருக்காது. 

மிடில் கிளாஸ் மக்களுக்கே உண்டான சாபமிது முதலில் வீட்டைகட்டுவார்கள் பின்பு கல்யாணத்தை முடிப்பார்கள். பிறகு செத்து போய்விடுவார்கள்!அவர்கள் வாழ்நாள் பூராகவும் கடுமையாக உழைத்தால்தான் இவை இரண்டையும் சாதிக்க முடியும். இதற்கு இடையில் மேலும் கடன் சுமையுடன் என்னத்தை வாழ்ந்து கிழித்து விடமுடியும்? அப்படியென்றால் வீடு கட்டாத, கல்யாணமும் முடிக்காதான்னு சொல்லவாரியானு கேட்கலாம். முடிந்தவரை கடன் படாமல் பண்ணுங்க. அப்படியே பட்டாலும் நம் சக்திக்கு உட்பட்டு பண்ணுங்க. கொண்டாட வேண்டிய வாழ்கையை பேங்க் லோன் கட்டும் திண்டாட்டத்திலே முடித்து விடக்கூடாது.

நரேஷ் 
10-17-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I