ஊரில் ஒருவரும் வாசிப்பதில்லை



ஒரு காலத்தில் பந்தி பந்தியா எழுதிய நீண்ட பதிவுகளை கண்டால் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தேன். கொஞ்சநேரம் ரிலேக்ஸ்சா பேஸ்புக் பார்க்கலாமுன்னு வந்தா இவனுங்க வேற இவ்வளவு நீளமா எழுதி சாகடிக்கிறானுகனு மனசுல தோணும். அதிலும் குறிப்பாக சினிமா, நூல் அறிமுகம் என தொடர்ச்சியாக ஒரே மாதிரியான பதிவுகள் வரும்போது பிடிப்பதேயில்லை. இவனுகளுக்கு வேற வேலையேயில்லையா? எப்பபார்த்தாலும் இதுமட்டுமானு மனதில் எண்ணிக்கொள்வேன். இது மூன்று வருடங்களுக்கு முன்னரான என் மனநிலை. இப்போ பாருங்க எதை வெறுத்தேனொ அதுவாகவே மாறிவிட்டேன். இப்பொழுதெல்லாம் நான் இடும் நீண்ட பதிவுகளை கண்டு என் நண்பர்கள் தெறித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திட்டுவது எனக்கு தெளிவா கேட்கும். பெருசு பெருசா எழுதி படுத்துறான். நிம்மதியா முகப்புத்தகத்துல உலாத்த 
கூட  முடியலன்னு. 

ஏழு வருடங்களுக்கு முன்பு கண்டி சிட்டி சென்டரில் ஒரு புத்தக கண்காட்சி நடந்தது. நான் மிகுந்த ஆவலுடன் போயிருந்தேன். எங்கு தேடியும் தமிழ் புத்தகங்கள் ஒன்று கூட கிடைக்கவில்லை. சிங்கள, ஆங்கில புத்தகங்கள் மட்டும் நிறைந்து கிடந்தது. பெருத்த ஏமாற்றத்துடன் உலாத்தி கொண்டிருந்த போது ஒரு அழகு சிங்கள பதுமையொன்று கையில் ஆங்கில குறுநாவலை வைத்து புரட்டிக்கொண்டிருந்தால். நான் ஏக்கத்துடன் பார்த்தேன். அந்த அழகியையல்ல அவள் கையிலே தவழ்ந்த குறுநாவலை. (இதை நம்ப கஷ்டமாகதான் இருக்கும். வேறு வழியில்லை. நம்பிதான் ஆகவேண்டும்)  நமக்கு மட்டும் ஆங்கிலத்தில் புலமை இருந்திருந்தால் குறைத்தது ஆங்கில நாவல்களை சரி வாங்கி போயிருக்கலாம். நமக்கு தமிழை தவிர மற்றயதுயெல்லாம்  அரைக்குறை. ஆங்கிலம் எனக்கு வராமல் போனதற்கு பின்னால் ஒரு கதையே உண்டு. 

தொண்ணுறுகளின் இடைப்பட்ட காலத்தில் விடுதலை புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே உக்கிரமாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று கொண்டிருந்த நாட்கள். அப்பொழுது நான் வவுனியாவில் வசித்தேன். மூன்று, அல்லது நான்காம் வகுப்பு படித்த நினைவு. எங்களுக்கு ஆங்கில பாடத்துக்கு ஆசிரியர் இல்லை. ஒரு கன்னியாஸ்த்திரி ஐந்தாறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஓர் சர்ச்சிலிருந்து சைக்கிளில் வருவார். ஆங்கிலத்தில் ஒரு சிறுவர் பாடலை பாடுவார் நாங்களும் கூட சேர்ந்து பாடுவோம். அவ்வளவு தான் ஆங்கிலபாடம்.  ஆண்டு ஒன்று தொடக்கம் ஐந்து வரை. அதாவது நான் கண்டிக்கு குடிப்பெயரும் வரை இதுதான் நிலைமை. முறையான ஆரம்பக்கல்வி கிடைக்கவில்லை. சில நாட்கள் காலையில் பள்ளிக்கு சென்றுபார்த்தால் அங்கு பள்ளிக்கூடமே இருக்காது! கட்டிடம் இருக்கும். 
யுத்த சூனிய பிரதேசத்திற்கு அண்மையில் வசிக்கும் மக்கள் யுத்தகாலத்தில் திடீர் என மூளும் சண்டைகளினால் இரவோடு இரவாக இடம்பெயர்ந்து எங்கள் பள்ளிக்கூடங்களில்   தங்க வைக்கப்படுவார்கள். அவர்கள் அங்கு இருந்து திரும்பி சொந்த இடத்துக்கு போவது நாட்கள் தொடங்கி, மாத கணக்கு வரை நீளும். அது நடக்கும் சண்டையின் தீவிரத்தை பொறுத்தது. பின்பு அருகில் உள்ள பிறிதொரு பாடசாலைக்கு தற்காலிகமாக மாற்றப்படுவோம். வருடத்தில் பல நாட்கள் இப்படிதான். அதனாலேயே நமக்கும் பழகி போய்விட்டது. என்னதான் இருந்தாலும் நான் சொல்வதெல்லாம் நொண்டிச்சாக்கு தான். அதே சமயத்தில் எங்களைவிட  எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கஷ்டப்பட்ட தமிழ் பிள்ளைகளும் உண்டு. மொத்தத்தில் இலங்கை தமிழர்கள் கடந்த காலங்களில் ஒரு நூற்றாண்டுக்காண துன்பத்தை ஒன்று சேரஅனுபவித்து விட்டார்கள். இதற்கு மேல் எந்த ஒரு கஷ்டமும் துயரமும் அவர்களை பெரிதாக பாதித்துவிடப்போவது இல்லை.

சரி புத்தகக்கண்காட்சியில் விட்ட இடத்தில் இருந்து தொடங்குகிறேன். கடைசியாக "முப்பது நாட்களில் சிங்களம் கற்பது எப்படினு" ஒரு புத்தகம் கண்ணில்பட்டது. அதை வாங்கிக்கொண்டு வீடு வந்தேன். பிறகு அதை திறந்து கூட பார்க்கவில்லை. ஒரு வருடத்திற்கு முன்பு ஊருக்கு விடுமுறையில் போயிருந்தபோது அந்த அதிசயம் நடந்தது. அபூர்வமாக புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ள தோழி ஒருத்தியை சந்திக்க நேர்ந்தது. ஆனால் அவள் சமகால எழுத்தாளர்கள் ஒருவரையும் படித்தது இல்லை. இன்னும் ரமணிசந்திரனை 
மட்டும் வாசித்து கொண்டிருந்தாள். நீ இன்னும் வாசிக்கவே ஆரம்பிக்கவில்லையேன்று அவளுக்கு நான் சில புத்தகங்களை பரிந்துரைத்தேன். இங்கு எங்கும் தமிழ் புத்தகங்கள் வாங்க முடியுமான்னு கேட்டேன். அவள் கண்டியில் சில புத்தகக்கடைகளின் பெயரை சொல்லி அங்கு தமிழ் புத்தகம் கிடைக்கலாம் என்றால். நானும் அவள் குறிப்பிட்ட 
எல்லாக்கடையும் ஏறி இறங்கினேன். கல்வி, சமையல் குறிப்பு, கைமருந்து, 
சார்ந்த புத்தகங்களை மட்டும் பார்க்க முடிந்தது. இதுதான் மலையகத்தின் வாசிப்பின் தற்போதைய நிலைமை. வாசகர்கள் இருந்தால் தானே 
புத்தகக்கடைகளில் நல்ல புத்தகங்கள் இருக்க முடியும். நம் ஊரில் ஒரு பயலுக்கும்தான் அந்த பழக்கமே இல்லையே!

நான் எழுதும் நீண்ட பதிவுகள் இப்பொழுது உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் ஒரு நாள் நீங்களும் என்னை போல மனம்மாறி புத்தகங்களை வாசிக்ககூடும். என்னால் ஒருவரை மாற்ற முடிந்தாலும் போதும். அதனால் தொடர்ந்து வாசிப்பையும் நல்ல சினிமா, நூல்களை பற்றியும் பேசிக்கொண்டே இருப்பேன். என் ஊரிலிருந்து வாசிப்பு பழக்கம் உள்ள அறிவார்ந்த தமிழ் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். ஏனென்றால் அங்கு நிலைமை படுமோசம். சில வருடங்களில் ஊருக்கு வந்த பிறகு வாசிப்பு பழக்கம் உள்ள  நண்பர்களை சேர்த்து கொண்டு இலக்கிய சந்திப்புக்களையும் உலக சினிமா சார்ந்த கலந்துரையாடல்களையும் நடத்தும் எண்ணம் இருக்கின்றது. உங்களில் எத்தனை பேர் என்னுடன் சேர்ந்து கொள்வீர்கள்?

நரேஷ் 
12-13-2019

Comments

  1. I agree .... can u suggest me some books if u can . Like novels .....that mean like Ramanichandran's novel

    ReplyDelete
  2. இந்த பிளாக்கில் 'நூல் அறிமுகம்' பக்கத்தில் பாருங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I