காடு


நாவல் / ஜெயமோகன் 

இந்த வருடத்தில் வாசித்த மிக அற்புதமான நாவல். நல்லப்படியாகதான் இவ்வருடத்தை கடந்து போகிறேன். காரணம் உன்னதமான படைப்பாளியை அடையாளம் கண்டுக்கொண்ட மனநிறைவு. இது வரை ஜெமோவை படித்து இல்லையென்றால் இந்த புத்தகத்தை கட்டாயம் படித்து விடுங்கள். பிறகு மனிதரை விடமாட்டீர்கள்! எனக்கு பித்து பிடிக்க செய்து விட்டார். நீலியின் நினைவில் கனத்தமனதுடன் நாவலை வாசித்து முடித்தேன். கிரிக்கும் நீலிக்கும் இடையிலான உறவு என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. 

புதிதாக வாசிக்க தொடங்குபவர்களுக்கு காடு ஒரு நல்ல ஆரம்பமில்லை. பொறுமையும் உன்னிப்பான அவதானமும் தேவை. எனக்கும் முதல் நூறு பக்கங்களில் சில தடுமாற்றம் இருக்கதான் செய்தது. கடினமான மொழிநடை ஊன்றி வாசித்தால் மட்டும் தான் உள்வாங்க முடியும். ஒருவேளை ஜெமோவின் எழுத்துக்கு நான் புதிது என்பதால்கூட இருக்கலாம். தொடக்கத்தில் இன்னும் சில பக்கங்களை தாண்டும் போது சரியாகிவிடும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். 
இன்னொரு முக்கிய சிக்கல் மலையாளம். கதைக்களமும், கதாபாத்திரங்களும் மலையாள பின்னணி கொண்டதால். ஆரம்பத்தில் பாதி புரியவேயில்லை. எனக்கு ஜெமோவின் மேல் கோபம் தான் வந்தது. தமிழில் எழுதினாலே புரிந்தகொள்ள கடினமாகயிருக்கு போது இவர் எதற்கு மலையாளத்தில் எல்லாம் எழுதி வைத்துள்ளார்றென்று. தொடக்கத்தில் மலையாள சொல்லாடல் வரும் இடங்கள் புரிந்து கொள்ள கடினமாகயிருந்தது. மலையாளம் மொழியின் பரிட்சயம் கொஞ்சம் கூட இல்லாவிட்டால் கஷ்டம்தான். எனக்கு மலையாளிகளுடன் பழகிய அனுபவமும், மலையாள சினிமாக்கள் பார்த்த பழக்கமும். அதன் மூலம் கற்று கொண்ட சில வார்த்தைகளும் வெகுவாக உதவியது. தொடக்கத்தில் அந்த 
பக்கங்களை தாண்டி வரும் பொழுது  தடுமாறினேன். கடைசியில் தெளிவாக 
புரிய ஆரம்பித்துவிட்டது. பாதிபக்கத்தை தாண்டிவிட்டால் பிறகு  நாவல் உங்கள்  கட்டுக்குள் வந்துவிடும்.

இந்த நாவலை படிப்பது அடர்ந்த பசுமை மிக்க மலைக்காட்டுக்குள் நுழைவதற்கு சமனானது. கதையின் நாயகன் கிரியாக மாறி நீலியின் மேல் உன்மத்தம் கொண்டு காட்டில் சுற்றி அலைய போகிறீர்கள். அணுவணுவாக வனத்தின் இயற்கை வனப்பினை உணர்ந்து ரசிக்க முடியும். இனி எந்த காட்டினுள் நுழைந்தாலும். இந்நாவல் கண்முன்னே நிற்கும். 

நானுற்றி எழுபத்தைந்து பக்கமுள்ள நாவலில் எத்தனை பக்கத்திற்குதான்  காட்டைப்பற்றி மட்டும் சுவாரசியமாக எழுதிவிடமுடியும்? ஆனால் ஜெமோவின் காட்டை பற்றிய விபரிப்பும், வர்ணனையும் அற்புதம். என் கூற்றை நாவலை படிக்கும் போது உணர்வீர்கள். காமத்தை விரசம் இல்லாமல் எழுத்திலே கொண்டு வருகின்றார். ஒரு இடத்தில் மலைமகளின் கருமையான மார்பை பற்றிய வர்ணனையில் வார்த்தைகளின் சேகரம் எனக்குள் கிளர்ச்சியை மூட்டிவிட்டதை தவிர்க்கமுடியவில்லை.  

இன்னொரு இடத்தையும் குறிப்பிட்டு சொல்லியாகவேண்டும். சிறுத்தையின் 
திடீர் தாக்குதல் இடம்பெறும் ஒரு சம்பவத்தை மிக அற்புதமாக எழுத்திலே புனைந்து எழுதியிருப்பார். அதை வாசிக்கும் கணத்தில் அக்காட்சி கண்முன்பே விரியும். அவ்விடம் இந்த நாவலின் அற்புதமான விபரணைகளில் ஒன்று.

கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுக படுத்துவதும். பிறகு அவர்கள் கதையில் இருந்து நீக்குவதையும். மிக நேர்த்தியா செய்து உள்ளார். 
குட்டப்பன், நீலி, ரெசாலம், ஐய்யர், குரிசு, சினேகம்மை, மேரி, கீறகாதன் என்னும் யானை, தேவாங்கு, வேங்கை மரம், அயனி மரம், மிளா, நாயகன் கிரி, 
கிரியின் அம்மா, அப்பா, மாமா, மாமி, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொருத்தரையும் மனதில் பதியவைத்துவிட்டார் மனுஷன். 
மறக்க முடியாத கதைமாந்தர்கள்.

இது வேறும் புனைவுயில்லை ஜெமோ கடந்து வந்த பாதை. புனைவுகளுடன் 
சேர்ந்த நிஜக்கதை. இன்று அவர் அடைந்த உயரத்திற்கும். அவர் கடந்து வந்த 
பாதையை நமக்கு காட்டும் பொழுது அதிர்ச்சியும், வியப்பும் ஒருமித்து வருகின்றது. மொத்தத்தில் வாழ்நாளில் தவிர்க்க கூடாத அருமையான நாவல். 

நரேஷ் 
12-18-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I