வெள்ளிக்கிழமை பிரியாணி


என் அப்பார்ட்மெண்டுக்கு பக்கத்துல மலையாள பூப்பிய்யா ஒன்னு இருக்கு (சிறிய சாப்பாட்டு கடைகளை இங்கே  பூப்பியான்னு சொல்லுவாங்க. "பூப்" என்பதை "பூ" வுக்கு முன்பு "ப்" சேர்த்து அழுத்தம் கூட்டி வாசிங்க) அங்கு வெள்ளிக்கிழமை நாட்களில் மட்டும் ஸ்பேஷலா பிரியாணி கிடைக்கும். அது ஏன்னா?  வெள்ளிக்கிழமை தான் சவூதியின் வாரஇறுதி விடுமுறை நாள். 
நம்ப ஊருல ஞாயிறுமாதிரி. கோழி பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, செம்மீனு பிரியாணி (இறாலுக்கு மலையாளத்தில் செம்மீனுன்னு பெயர்) வேறு எங்கும் கிடைக்காத இன்னொரு ஸ்பெஷல் ஐட்டமும் கிடைக்கும். அதுதான் ஒட்டக பிரியாணி பொதுவா எல்லா சாப்பாட்டு கடையிலும் கிடைக்காது. எனக்கு தெரிந்து இங்கு மட்டும் தான். 

ஆரம்பத்தில் எனக்கு பெரிதாக பிரியாணி மீது நாட்டமில்லை. காரணம் கோழி கறியில் சோற்றை போட்டு கிண்டி பிரியாணின்னு பேர் வைச்சு கொடுப்பானுக. இறைச்சி துண்டேயிருக்காது. ஆனால் இங்கு சாப்பிட்ட பிறகுதான் அசல் பிரியாணி எதுவென்று  தெரிந்துகொண்டேன். பாஸ்மதி அரிசியை நல்ல பதமா வேகவைத்து. வஞ்சகமே இல்லாம கஜூ, உலர் திராட்சை, ஏலக்காய், கராம்பு எல்லாம் சேர்த்து. தாராளமாக நெய்யும் விட்டு. புதினா தழையெல்லாம் தூவி. 
மசாலா சேர்த்து பதமா கோழியை வறுக்கும் பொழுது சும்மா கமகமன்னு வாசம் வரும். நாவூறும்! பிறகு சுடச்சுட தட்டில் பரிமாறிய பிரியாணியுடன் கோழி இறைச்சில ஒரு துண்டை பிய்த்து சேர்த்து சாப்பிட்டால் சும்மா அமிர்தம் மாதிரி இருக்கும்! என் வாழ்நாளில் இதுவரை இப்படி ஒரு பிரியாணியை நான் சாப்பிட்டது கிடையாது.

ஒவ்வொரு வெள்ளியும் தவறாமல் ஆஜராகிடுவேன். அதுலயும் ஒரு சிக்கல் வந்தது. கடையில் இருக்கும் கிழவனுக்கும் எனக்கும் ஆகாது. நான் போயிருக்கும் போதெல்லாம் என்னமோ புரியாணி சட்டியை களவாடிட்டு போக போற மாதிரி குறுகுறுன்னு பார்ப்பான். பொதுவா மலையாளிங்ககிட்ட தமிழில் பேசினால் புரிந்தது கொண்டு மலையாளத்தில் பதில் சொல்லுவாங்க, சிலருக்கு தமிழ் தெரியும் அவங்ககிட்ட மொழிசிக்கல் கிடையாது.கிழவனிடம் 
நான் தமிழில் கதைப்பேன், அவன் இந்தில பதில் சொல்லுவான். நான் உடனே சிங்களத்தில் பதில் சொல்லுமான்னு யோசிப்பேன். புரியாணி வந்து என் கண்ணை மறைத்துவிடும். பிறகு இந்தி தெரியாதுன்னு இங்லிஷ்ல  சொல்லுவேன். அதையே இளக்காரமாக "ஒ... இந்தி தெரியாதானு?" கேள்வியா திருப்பி இந்திலயே கேட்பான். "ஆமாடா பட்டினு! " சொல்லத்தோணும் பிரியாணி முக்கியமே அதுனால அடக்கிகொண்டு அமைதியா இருந்து விடுவேன். இத்தனைக்கும் எந்த முன் விரோதமும் இருவருக்கும் இடையில் இல்லை. ஒருவேளை நமக்கு பார்த்த உடனே ஒருத்தரை பிடிக்குறமாதிரி, பிடிக்காமலும் போகலாம் இல்லையா? அப்படி எதோ ஒரு காரணமாகதான் இருக்கனும். இப்படியே தொடர்ந்து போய்ட்டு இருந்த பனிப்போரில் இப்பே சினேகம் மலர ஆரம்பிச்சிடுச்சி. ரெகுலர் கஸ்டமர்னால இருக்கலாம். கடைசிலே புரியாணி நம்ம ரெண்டு பேரையும் ஒன்னு சேர்த்துருச்சி. 

இந்த படத்தில் இருப்பது நான் சொன்ன சாப்பாட்டு கடையில்லை. அது இதற்கு நேர் எதிர் பக்கத்துலயிருக்கு. இதுவொரு எகிப்திய ரெஸ்டூரண்ட் அங்க பிரியாணியெல்லாம் கிடைக்காது. ஒரு வேலை கிடைத்தாலும். மட்டன் பிரியாணிக்கு வளர்த்த கிடாவுக்கான விலைவரும். நான் இன்னும் மிடில் கிளாஸ் பிச்சைக்காரனாக இருப்பதால் அங்கு எல்லாம் சாப்பிடும் அளவுக்கு பொருளாதாரம் இன்னும் உயரவில்லை. 

என்னதான் விலைகொடுத்து சாப்பிட்டாலும் இங்கு கிடைக்கும் பிரியாணியின் சுவைக்கு எதுவும் ஈடாகாது. நீங்கள் சவூதி பக்கம் வந்தால் கட்டாயம் சாப்பிட்டு பாருங்க. "நாங்க ஏன்டா அங்க வர போறோம்னு நீங்க யோசிக்கிறது புரியுது"  கட்டுரையை இப்படி முடிச்சா நல்லா இருக்குமேன்னு தான்.

நரேஷ் 
11-14-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I