தன்னம்பிக்கையும் அதிர்ஷ்டமும்

சைபர் செக்யூரிட்டி தொடர்பான செமினார் ஓன்றுக்கு வேலை பார்க்கும் கம்பெனி சார்பாக நானும் இன்னொரு நண்பரும் உயர்தர நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. அதை பற்றிய அனுபவபதிவுதான் இது. 

மிக பிரமாண்டமான கட்டிடம் என் கைத்தொலைபேசியின் கேமராவாள் முழுவதையும் ஒரே படத்தில் உள்ளடக்க முடியாத அளவில் இருந்தது. 
(இப்பொழுது பரப்பளவை கற்பனை செய்து கொள்ளுங்கள்) அரண்மனையின் வடிவில் வடிவமைக்கபட்ட கட்டிடம். பிரதான மண்டபத்தின் கதவு ஒவ்வொன்றும் ராட்சஸ அளவில் காணப்பட்டன. யானை ஒன்று இலகுவாக புகுந்து போகும் அளவு அகலமும். ஒட்டக சிவிங்கியொன்று எவ்வித சிரமமும் இல்லாமல் நிமிர்ந்து போகும் அளவுக்கு உயரமாகவும் காணப்பட்டது. சுவர்களில் நூதனமாக தீட்டப்பட்டு மாட்டப்பட்டிருந்த கிறுக்கல்  ஓவியங்களையும் பார்க்க முடிந்தது. இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் நா வருவேன்னு நினைச்சு கூட பார்க்கல!? இவ் அனுபவம் என் வாழ்நாள் அதிர்ஷ்டம். ஆனால் எதுவும் இலகுவாக கிடைத்து விடாது. அதற்கு உண்டான விலையை கொடுத்தாகணும்.

இந்த செமினார்ல நான் பார்த்து வியந்த விஷயம் சில வருடங்களுக்கு முன்பு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடைய நாடாகயிருந்த 
சவூதி அரேபியாவில் இன்று நம்ப முடியாத அளவு மாற்றங்களை பார்க்க முடிகின்றது. ஒரு நாள் முழுவதும் நடக்கவிருந்த செமினாரில் காலை உணவு, தேனீர் இடைவேளை, பகல் உணவு எல்லாம் ஏற்பாடாகியிருந்தது. பெரும்பாலும் நிகழ்வை ஒழுங்கமைத்து நடத்தியவர்கள் பெண்களே. இதுபோக ஈமெயில் செக்யூரிட்டி, கிளவுட் செக்யூரிட்டி, டேட்டா செக்யூரிட்டி, அப்ளிகேஷன் செக்யூரிட்டி, இன்னும் சில தலைப்புகளின் கீழ் நடைபெற்ற கருத்தரங்கினை இந்நாட்டு பெண் கணனி துறைசார் நிபுணர்கள் தான் நடத்தினார்கள். மொத்தம் ஏழுபேரில் ஆண்கள் இருவர் மட்டுமே, மற்றறைய ஐவரும் பெண்கள். அவர்களின் நுனிநாக்கு ஆங்கிலமும், பேசிய துறை சார்பான கணனி அறிவும் நிஜமாவே வியக்க செய்தது. அதுவும் அவர்கள் சவூதியின் முதன்மையானதும் உலக நாடுகளில் பிரதான கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அரம்கோவில் (Aramco) பணிபுரிபவர்கள். (இந்த நிகழ்வை நடத்தியதும் அரம்கோ நிறுவனம்தான்)

இவ் அனுபவம் எனக்கு புதிது. அனுமதியை பரிசோதித்து உள்நுழைந்த உடன் சிறுபதற்றம் இருக்கத்தான் செய்தது.அங்கு இருந்த ஒரு கோபீ மெஷின் பற்றி சொல்லியே ஆகணும். பொதுவா ஒரு பட்டன், ரெண்டு பட்டன் இருந்தால் சரி. அதை அழுத்தி கப்பை கீழே பிடித்தால் காரியம் முடிந்துவிடும். இதில் மொத்தம் பதினாறு  பட்டன்களும் ஐந்து , ஆறு வெளியேற்றிகளும் இருந்தன. கேப்சினோ, லேட்டே, எஸ்பிரோஸோ, காபி, மில்க் காபி, என இன்னும் சில எட்டு வகை பானங்களையும் சேர்த்து தரக்கூடிய மெஷின். முதலில் அதை பார்த்ததுமே தெரியாம எதையாச்சும் அழுத்தி அசிங்கபட்டுற கூடாதுனு. யாராச்சும் முதலில் போகட்டும் டெமோ பார்த்த பிறகு நம்ம செயலில் இறங்கலாமென்று முடிவு செய்து பின்வாங்கி அங்கு நட்சத்திரம் ஹோட்டலின் பாணியில் அழகாக அடுக்கி பரிமாறப்பட்டிருந்த பெயர் தெரியாத பல அருச்சுவையான காலை சிற்றுண்டிகளையும், இனிப்பு வகைகளை ஒவ்வொன்றாக சுவைக்க ஆரம்பித்தேன். அதே சமயம் என்னை போன்றே ஒவ்வொருவரும் அந்த மெஷினிடம் தடுமாறி கொண்டிருந்தார்கள். 
இது என்னடா டை கட்டிய கணவான்களுக்கு வந்த சோதனை. சைபர்செக்யூரிட்டி செமினாருக்கு வந்து கடைசியில் கோபீ மெஷினுடன் மல்லுக்கட்ட வேண்டி வந்துருச்சேன்னு எனக்கு மனதில் சிரிப்பு வேறு. பிறகு ஒரு சில நிமிடங்களில் அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமில்லை எது வேண்டுமோ அதற்கு கீழே கப்பை வைத்து விட்டு பட்டனை ஒரு அழுத்த வேண்டியது மட்டும் தான் நம்வேலை ஒரு சில நொடிகளில் சூடான பானத்தை நிரப்பி விட்டு அதுவாக நிறுத்தி கொள்ளும். என்பதை கண்டறிந்தாயிற்று.
தெரியாவிட்டால் பின்நகர்ந்து கற்று கொண்டு காரியத்தில் இறங்குவதும் புத்திசாலித்தனம் தான். இருந்தாலும் படித்த உயர்பதவிகளில் இருப்பவர்களிடம் நான் கற்றுக்கொண்ட விஷயம் தன்நம்பிக்கை தயங்காமல் துணிந்து காரியத்தில் இருக்கும் மனதிடம். துறைசார் அறிவை விட தன்நம்பிக்கை அதிகம். அதுதான் அவர்களின் உயர்வுக்கு காரணம்.

நரேஷ் 
05-12-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I