கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்



சிறுகதைகள் / போகன் சங்கர் 

நான் முழுமையாக வாசித்து முடித்த சிறுகதை தொகுப்பு. அருமையான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நண்பர் Govinda Raj க்கு நன்றி! எவராவது சொன்னால் தான் சில நல்ல படைப்புகளை கண்டடைய முடிகின்றது. நம்மை பாதித்துவிட்ட படைப்பை பற்றி எதுவும் பேசாமலிருப்பது மாகாபாவமென  உணருகிறேன். முதலில் இந்த புத்தகத்தின் தலைப்பை பார்த்ததும் எதோ புராணக் கட்டுரை தொகுப்பாகயிருக்க கூடுமென நினைத்து கொண்டேன். இந்த கணம் வரை உங்களில் பலருக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும். இது முற்றிலும் வேறு மாதிரியான அனுபவம். போகன் சங்கர் தன்னை பாதித்த ஜெ மோவிற்கு நன்றி சொல்லித்தான் கதைகளை சொல்லத் துவங்குகிறார். 
" பூ ",  " படுதா ",   " யாமினி அம்மா ", " நடிகன் "  போன்ற கதைகளில் அவரின் தாக்கத்தை உணரமுடிந்தது. 

போகனுக்கு நன்றாக கதை சொல்ல வருகின்றது. எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பிக்கும் கதை பிறகு கதைக்குள் இன்னோரு கதை. பிறகு இரண்டும் சந்திக்கும் தளம். அபாரம்! சிறந்த வாசிப்பனுபவம். இதையெல்லாம் படிக்கும் போது எனக்கு சிறுகதை எழுதும் ஆசையே போய்விடுகிறது. இன்னும் அனுபவங்களை சேகரம் செய்ய வேண்டும். மேலும் வாசிக்க வேண்டும். பிறகு எழுதினால் ஏதாவது தேறலாம்.

எழுத்தாளன் தன்னை ஒரு பரிசோதனை கூடத்து எலியாக மாற்றிக்கொள்ள வேண்டும். வாசகன் முன்னே நிர்வாணமாக நிற்க வேண்டும். தன்னை உத்தமபுத்திரனாக காட்டிக்கொள்ள பிரயத்தனப்படக்கூடாது. அப்பொழுதுதான் அற்புதமான இலக்கியங்களை படைக்கமுடியும். தீவிரமான வாசிப்பு ஒருவனை சாந்தப்படுத்திவிட தானே வேண்டும். ஆனால் பிறகு ஏன் இந்த எழுத்தாளர்கள் மட்டும் பித்து நிலையிலே திரிகின்றார்கள் என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது. தன்னை எழுத்துக்கு அர்ப்பணித்தே ஒரு கட்டத்தில் வேற்றுலக வாசியாகவே மாறிப்போய்விடுகிறான். 

இத்தொகுப்பில் வருவதெல்லாம்  யதார்த்தவாத கதைகள் தான். சில கதைகளில் அமானுஷ்யம் புகுந்து கொள்கிறது. "மீட்பு" என்ற கதை முடிவில் எனக்குள் எதோ இனம் புரியாத தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. எனக்கு பெண் குழந்தைகள் பிடிக்கும் என்பதாலா? என்ன காரணமென்று சரியாக தெரியவில்லை. படம் பார்த்த உணர்வு. குறித்து வைத்து கொள்ளுங்கள். 
இந்த கதை முடிவில் உங்களையும் ஏதோ செய்யும். 

" பாஸீங் ஷோ " என்னை கவர்ந்த மற்றும் ஒரு கதை.  பெண்ணின் உணர்வுத் தளத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கும். சிக்கலான உளவியளை கற்பு வாதங்களுக்கு உற்படுத்தாமல். ஒழுக்க, கலாசார சிக்கலை நம்மிடமே விட்டுச்சென்று விடுகின்றார். போகன் பெண்ணாக மாறியத் தருணம்.

மறக்க முடியாத மற்றும் ஒரு கதை " பொதி " கதையின் ஆரம்ப கட்டமும் எழுத்தின் கோர்வையும் என்னை திணறடித்துவிட்டது. வரிக்கு வரி காட்சிகள் கண்முன்னே விரிந்து செல்லும். கதையின் தொடக்கமும்,  முடிவும் எதிர் எதிர் தளங்கள். எவ்வித அனுமானத்திற்கும் இடமில்லை. கதையின் போக்கிலேயே நகர வேண்டியதுதான். 

எழுத்தாளன் தன்னை பைத்திக்காரனாக, விபச்சாரியாக, தெரு நாயாக, குருடனாக, சராசரி மனிதனாக, பெண்ணாக, கடவுளாக, பிச்சைக்காரனாக, வேற்றுல வாசியாக என்று பலவாறு உருவகப்படுத்தி கொண்டு எழுதுகிறான். அதனால் தான் வேறும் கதையாக மட்டும் படித்து விட்டு  நகரமுடிவதில்லை. யாரோ அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு எதோ ஒன்றைச் சொல்ல முயற்சிக்கிறார்கள்.

நரேஷ் 
12-27-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I