உருமாற்றம்

உருமாற்றம் (The Metamorphosis)

ஃப்ரன்ஸ் காஃப்கா (1883 - 1924)

மொழிப்பெயர்ப்பு நாவல் 

"கனவுத்தன்மையை கொண்ட என் அகவாழ்க்கையைச் சித்தரிக்கும் உணர்வு பிற எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளிவிட்டது." 

1914 ஆம் ஆண்டு காஃப்கா எழுதிய நாட்குறிப்பிலிருந்து. 

***

இது ஒரு வித்தியாசமான நாவல்;
ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து விழித்தெழும் க்ரகர் செம்சா 
(கதையின் நாயகன்) தான் ஒரு ராட்சத பூச்சியாக உருமாறியிருப்பதை கண்டுணர்ந்து மிகுந்த அதிர்ச்சிக்கும், குழப்பத்துக்கும் உள்ளாகின்றான்.  
இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் எதுவும் அவனுக்கு புலப்படவில்லை. ஒருவேளை கனவாகயிருக்க கூடும் அல்லது தற்காலிக மாற்றம் தான். நான் எழுந்து கொண்டால் பழைய நிலைக்கு என் உடல் மீண்டும் வந்து விடும். எனப்பலவாறு சிந்தனைகள் அலைபாய வயிற்று பகுதி கூரையை பார்க்க கட்டிலில் கிடந்தவன். உடலை திருப்பி எழுந்து கொள்ள முடியாமல் தடுமாறி கொண்டிருந்தான். புதிய பூச்சி உடல் அக்கணம் வரைக்கும் முழுதாக க்ரகர் செம்சாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கவில்லை. கடிகாரமுட்கள் சுழன்று நேரம் கடந்து போய்க்கொண்டிருந்தது. உருவில் எந்த முன்னேற்றத்தையும் காணாததை உணர்ந்து பதற்றம் மேலும் அதிகமாகியது. 

தனியார் நிறுவனமொன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கின்றான். தன்னால் முடிந்த மட்டும் சிறப்பாக பணியாற்றி  நிறுவனத்துக்கு அதிகலாபத்தை பெற்றுக்கொடுத்த போதிலும். எதிலும் திருப்தி அடையாத நிர்வாகம் மேலும் ஓடு. விற்பனையை இரட்டிப்பாக்கு என்று அவனை மனஅழுத்தத்திலேயே வைத்திருந்தது. பல சமயங்களில் இந்த வேலையை தூக்கி எறிந்துவிடலாமென்று தோன்றினாலும் முடியாத நிலைமை. அவனின் வருமானத்தை மட்டும் நம்பியிருக்கும் அம்மா, அப்பா, தங்கை எல்லாம் கஷ்டப்படுவார்கள் என்ற எண்ணம் சுய விருப்ப வெறுப்புகளுக்கு 
முக்கியத்துவம் கொடுக்காமல் அவனை தொடர்ந்து ஓடச்செய்தது. அவ்வாறானதொரு  இக்கட்டான சூழ்நிலையில் உருமாற்றம் அடைந்தது அவனை மேலும் பித்து கொள்ளச்செய்தது. 

நேரமாகியும் மகன் விழித்து கொள்ளாததை கண்டு குடும்பத்தார் கதவை திறக்க முயற்சிகிறார்கள். க்ரகர் ஒருவாறு எழுந்து கதவை திறக்கின்றான். அவனின் நிலைமையை பார்த்து வெருண்டு அவனை அந்த அறையிலே விரட்டியடித்து அடைத்து வைக்கின்றார்கள். 

நாட்கள் நகர்கின்றன க்ரகர்ரின் உடல் நிலையில் எவ்வித  முன்னேற்றமும் புலப்படவில்லை. அவனை பாரமாகும், இடையூறாகவும் எண்ணுகிறார்கள். தொடர்ந்து பராமரிக்க அவர்களால் முடியமால் போகிறது. குடுப்பத்திற்காவே தன்னை அர்ப்பணித்தவன் சம்பாதிக்க முடியாத காரணத்தால் வேண்டாதவன் ஆகிறான். அவன் பெற்றோரும், சகோதரியும் நல்லவர்கள் தான். சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களை மாற்றி விடுகின்றது. முடிவில் க்ரகர்க்கு என்னவானது? அவன் மீண்டும் மனித உருவை அடைத்தானா? என்பதை நாவலை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். தவிர்க்கவே கூடாத அருமையான படைப்பு!

தூக்கத்திலிருந்து எழும்போது ராட்சத  பூச்சியாக மாறி விடுகிறான். என்ற கதைக்கருவை கேட்டவுடன் எதோ ஹாலிவுட் பான்டஸி கதை மாதிரி இருக்கேனு நீங்கள் நினைக்கலாம். புத்தகத்தை எழுதி சரியாக இவ்வருடத்துடன் சேர்த்து நூற்றியைந்து ஆண்டுகள். அக்காலகட்டத்தில் இந்த கோணத்தில் கதைச் சொல்வதை பற்றி கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள். அத்துடன் இது கேளிக்கை கதையும் இல்லை. புனைவின் உடனான  காஃப்காவின் வாழ்வனுபவம்.

1915 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவலிது. கதை கருவை பாருங்கள். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து படித்தாலும் புதிதாகவே இருக்கும். எவ்வளவு நவீனமாக மனிதர் யோசித்திருக்கிறார். ஆண்களுக்கு இந்த கதை மிக பிடித்து போகும். காரணம்; வேலை தேடி திரிந்த நாட்களில் அடைந்த  அவமதிப்பும், புறக்கணிப்பும் கண்முன்னே வந்து போகும். ஒருவாறு போராடி ஒரு வேளையில் சேர்ந்த பிறகு  சைக்கோவை விட மோசமான பித்த நிலையிலிருக்கும் ஒருவன் மேலதிகாரியாக வந்துவிட்டால் அந்த வேலையை தக்கவைத்து கொள்ள படும்பாடு வார்த்தைகளால் விபரிக்க முடியாது. இதையெல்லாம் இன் நாவல் நினைவூட்டி செல்லும்.

செம்மையான மொழிபெயர்ப்பு. கதையும் குழப்பங்கள் அற்று சீராக பயணிக்கும். பக்கங்களும் குறைவு ஒரே நாளில் வாசித்து முடித்து விடலாம். கதை சொல்லும் செய்தி அதன் தளம் அதி உன்னதமானது. ஒரு கட்டத்தில் மனம் கனத்து விட்டது.

" மற்றவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத பொழுது நம் இருப்பை இழக்கின்றோம் "

இது எல்லா உறவுக்கும் பொருந்தும்.

நரேஷ்
12-01-2020

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I