நடுநிசி

எனக்கு அப்பொழுது எட்டு வயது. தொண்ணூறுகளின் ஆரம்பக்காலம். வவுனியாவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் சிதம்பரபுரம் அகதி முகாமில் வசித்த நாட்கள். ஒரு பக்கம் புலிகளுக்கும். இலங்கை அரசாங்கத்திற்கும் உக்கிரமாக சண்டை நடந்த காலக்கட்டம். எங்கள் முகாமுக்கு வருடம் முழுவதும் அகதிகள் வருவதும். போவதுமாக இருப்பார்கள். பெரும்பாலும் சொந்த இடத்துக்கு திரும்பி போகமுடியாமால் அங்கேயே வருடக்கணக்கில் தங்கி விடுபவர்கள் அதிகம். அகதி முகாம் என்றாலும் பரப்பளவிலும் அமைப்பிலும் ஓர் கிராமத்தை ஒத்தது. நூலகம், கிராமசேவகர் அலுவலகம், காவல் நிலையம், கோயில், மைதானம் எல்லாமுண்டு. ஆனால் சொந்தமாக நிலம் வாங்கவோ, விற்கவோ  முடியாது. முதலில் அங்கு நிலம் வாங்கும் அளவுக்கு பொருளாதார சுதந்திரம் யாருக்கும் இருக்கவில்லை. பெரும்பாலும் எல்லோரும் அன்றாடம் காய்ச்சிகள். மூன்று வேலை சாப்பாட்டுக்கே படு திண்டாட்டமாகதானிருக்கும். அரசாங்கத்தின் ரேஷன் அரிசியில் தான் பலர் உயிர்காத்து கொண்டிருந்தார்கள். யுத்தத்தில்  
வீடு வாசல், வாழ்வாதாரத்தை விட்டு, உடுத்திய உடுப்புடன் கையில் அகப்பட்டதை காவிக்கொண்டு இரவோடு இரவாக வந்த சனம் தான். உடனே இன்னோரு திடமான வருமானத்தை அவ்வளவு இலகுவாக தேடிக்கொள்ள முடியவில்லை. இப்பொழுதுபோல வீட்டுக்கு வீடு  மின்சார வசதிகளெல்லாம் கிடையாது. இரவுகள் மண்ணெண்ணெய் விளக்குகளால்  ஒளியூட்டப்பட்டிருக்கும். அதுவும்  நடுச்சாமம் மட்டும்தான் விடிய விடிய விளக்கு எரிப்பதெல்லாம் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம். நிலவுதான் எமக்கு தெருவிளக்கு. சில சமயங்களில் அகல் விளக்கும் கூட.

நடுநிசி நேரம் ஊரே ஆழ்ந்து உறக்கத்திலிருந்தது. திடீரென எங்கிருந்தோ ஓர் பேரிரைச்சல். திடுக்கிட்டு முழித்துக்கொண்டேன். பக்கத்திலே அம்மா, அப்பா தங்கை எல்லோரும் சொல்லிவைத்தாட் போல் வெருண்டு எழுந்தார்கள். ஏதோ அபாயம் என்று மட்டும் விளங்கியது. தூக்க கலக்கத்தில் தட்டுத்தடுமாறி தங்கையை தூக்கிகொண்டு வேகவேகமா கதவை திறந்து   வெளியே வந்த அம்மாவை பின் தொடர்ந்தேன். வெளியே பார்த்தால் ஊரே அலறியப்படி ஓடிக்கொண்டிருந்தது. நின்று நிதானித்து சிந்திக்க அவகாசம் இருக்கவில்லை. எதோ மோசமாக நடந்துவிட்டதென்று மட்டும் புரிந்தது. எது எங்களை ஓட வைத்ததென்று  தெரியாமலே நாங்களும் சேர்ந்து ஓட ஆரம்பித்தோம். எங்கள் வீட்டுக்கு முன்பு வெட்டவெளி. அதைத் தாண்டி மரத்தடி. மரங்கள் செறிவாகயிருக்கும் என்பதால் உண்டான காரணப்பெயர். பிறகு கடைவீதி அதுதான்  கிராமத்திற்கே சின்ன டவுன் மாதிரி. அதற்கு அப்பால் ஊரின் எல்லையில் போலீஸ் நிலையம். இப்போதைக்கு அங்கு போகலாம் அதை தவிர வேறு பாதுகாப்பான இடமெதுவுமில்லை. அரை போதையில் ஓடிக்கொண்டிருந்த அப்பா 'எதுக்குடி ஓடுறனு'  அம்மாவிடம் கேட்க 'சனியனே எனக்கு மட்டும் தெரியுமா? ஊரே கலவரப்பட்டு ஓடிட்டுயிருக்கு. எதோ ஆபத்து பேசாம வா ' என்று ஓடியபடியே கடிந்து கொண்டாள். நான் ஒன்றும் புரியாமல் மரணப்பயத்தில் இருவரின் உரையாடலையும் கேட்டப்படி எங்களை தாண்டியும். பின்னும் ஓடும்  சனங்களின் ஓலத்தை கேட்ட பீதியில்  ஓடிக்கொண்டிருந்தேன். அம்மாவின் இடுப்பில் தூக்கம் கலைந்த கிறக்கத்தில் தங்கை சிணுங்கி கொண்டிருந்தாள். எங்கள் வீட்டிலிருந்து பொலிஸ் நிலையம் அருகில் என்பதால் விரைவாக சென்றடைந்தாயிற்று.

இரவு காவலில் இருக்கும் ஒரு சில பொலிசாரை தவிர மற்றவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். அவர்களும் பீதியடைந்தெழுந்து நடுசாமத்தில் நாலாப்பக்கத்திலிருந்தும்   அலையலையாக திரண்டுவரும் சனத்திரளை பார்த்து ஒன்றும் புரியாமல் காரணத்தை வினவினார்கள். எங்களுடன் வந்த 
பாதிச்சனத்துக்கு எதற்கு ஓடினோம் என்றே தெரியாது. தமிழர்கள் சாவு எந்த ரூபத்திலும் வரலாமென்ற மனநிலையில் வாழ்ந்த காலக்கட்டம். பிறகு தான் காரணம் தெரியவந்தது. எங்கள் கிராமத்தின் எல்லையில் அடர்ந்த காடு அதைத்தாண்டி'இரட்டை' என்னும் சிங்கள கிராமம் இருந்தது. அன்றிரவு வாள், ஈட்டி, கோடரி போன்ற கூரிய கொலை ஆயுதங்களுடன் அங்கிருந்து கும்பலாக சிலர் தாக்குவதற்கு  வந்ததாகவும். அவர்கள் சிங்களமொழியில் உரையாடி கொண்டதை கேட்டதாகவும். அதனால் மிரண்டுபோய் ஓட ஆரம்பித்ததாகவும் சொன்னார்கள். ஊரில் ஒருவருக்கும் சிங்களம்  தெரியாது. அதனால் அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியாமல் போனது. சிங்களம் அறிந்தவர்கள் ஒரு சிலர் இருக்கலாம். அதில் அம்மாவும், அப்பாவும் அடக்கம். மலையகத்தில் பிறந்து வளர்ந்து எண்பத்து மூன்றாம் ஆண்டு   இனக்கலவரத்தில் பாதிக்கபட்டு வீடு வாசல், வாழ்வாதாரத்தை இழந்து  வடக்கு நோக்கி குடிபெயர்ந்து பின்பு உயிரைபணையம் வைத்து கள்ளத்தோணியில் அகதியாக தமிழ் நாட்டுக்கு சென்று. சில வருடங்களுக்கு பிறகு அங்கிருந்து இலங்கை வந்து சேர்ந்த குடும்பங்களிலொன்று. ஏற்கனவே இனக்கலவரத்தில் பாதிக்கபட்டிருந்ததால் மீண்டும் அது போன்று ஒரு தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற பயம்  பெற்றோரின் மனத்தில் பதிந்திருந்தது. அம்மாவிடம் அந்த கதைகளை கேட்டுவளர்ந்த எனக்குள்ளும் ஆழப்பதிந்துவிட்டது. எட்டு வயசு பையனிடம் சொல்லுவதற்கு தகுந்த  கதையில்லையேன்று அவள் பொதுபுத்திக்கு உறைத்திருந்தாலும். அதை சொல்லிச்சொல்லி எச்சரிக்கை உணர்வுடனேயே வளர்த்தாள். அன்றைய நிலலைமைப்படி யாருக்கும் எதுவும் எப்பவும் நடக்கலாம். உயிர் தப்பித்து வாழ, உயிர் வாங்கிய கதைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்பது அவள் கணிப்பு. எட்டு வயது சிறுவன் பதினெட்டு வயது இளைஞனின் முதிர்ச்சியிலிருக்க  வேண்டிய கட்டாயம். 

போலீசார் நிலமையை கட்டுக்குள் கொண்டுவரமுயன்றனர். கூட்டத்தை அமைதிப்படுத்தி உண்மையான காரணத்தை கண்டறிய முயற்சித்தார்கள். போலீஸ் நிலையத்தை அண்டிய வெட்டவெளியில் சிறு சிறு குழுக்களாக சனம் தரையில் அமர்ந்து மூச்சு வாங்க ஆரம்பித்தார்கள். ஊரே அன்று பொலிஸ் நிலையத்தை சுற்றி விழித்திருந்தது. உறக்கம் குழந்தைகளை தவிர வேறு எவருக்கும் வரவில்லை. ஒருவருக்கும் வீடு செல்லும் தைரியமும் இருக்கவில்லை. வீட்டில் விட்டு வந்த வயதான கிழவன், கிழவிகளுக்கு என்ன நடந்திருக்குமோவென்று நினைத்து சிலர் விசும்பி கொண்டிருந்தனர். அவர்களை சுமந்து கொண்டு பல மைல் தூரம் ஓடிவருவது சாத்தியமில்லை. அந்த முயற்சி முழு குடும்பத்தையும் காவுவாங்கிவிட கூடும். அந்த இரவே மரணபயத்தில் கவிழ்ந்திருந்தது. எந்த நேரத்திலும் தாக்கப்படலாமென்ற அச்சம் ஒவ்வொருவர் முகத்திலும். சிறு சலசலப்பு கூட இதயத்துடிப்பை இரட்டிப்பாக்கியது. யாருக்கும் போலீஸ் மீது பெரிதாக  நம்பிக்கையில்லை. அவர்களும் சிங்களவர்கள் தானே. ஒருவேளை நம்பக்கம் நின்றாலும். கூடினால் இருபது பேர் இருக்கலாம் அவர்களினால் எப்படி மூர்க்கம் கொண்ட சிங்கள கடையர்களுக்கு எதிராக சண்டையிட்டு ஓர் ஊரையே பாதுகாத்திடமுடியும் என்ற அவநம்பிக்கை. அன்று பால் போன்ற  நிலவொளி ரசிக்கமுடியாத மோசமான நரகஇரவு. எப்பொழுதும் விடியும் என்றிருந்தது. விடியலால் மட்டுமே மரணபயத்தை போக்கமுடியும். அன்றிரவு மட்டும் ஏனோ கடிகாரம் மிகமந்தமா இயங்கி கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது. நகரவேயில்லை. எப்பொழுதும் தூங்கினேன் என்று தெரியவில்லை. விடிந்தது. நான் வீட்டில் உயிருடன் இருந்தேன். விறகு அடுப்பின் கங்குகளிருந்து மெலிதான புகை மேல் எழுந்து கொண்டிருந்தது. அம்மா தட்டி எழுந்திருக்க சொன்னால் பக்கத்தில் வந்து தேனீரை தந்து கையில் சீனி கொஞ்சம் வைத்துவிட்டு போனாள். பக்கத்தில் தங்கை ஆழ்ந்த  உறக்கத்திலிருந்தாள். நான் சீனியை நுனிநாக்கால் நக்கி ஒரு மிடறு சூடான தேனீரை பருகியபடி வெளியே வந்தேன். அங்கு அப்பா எதிர்வீட்டு மாமாவுடன் எதோ  பேசிக்கொண்டிருப்பதை கண்டேன். நேற்று இரவு நடந்த அசம்பாவிதத்தை பற்றியென்று மட்டும் புரிந்தது. ஊரே அதைப் பற்றித்தான் பேசிகொண்டிருந்தது. அன்று பள்ளிக்கூடம் போகவில்லை. 

காலையில் ஊர் மைதானத்தில் பொலிஸாரினால் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. காலை வெயில் சூடேறிக்கொண்டிருந்த நேரம். ஊர் தலைவர் மற்றும் சில முக்கியஸ்தர்கள் மேடையில் இருந்தார்கள். பரிதவிப்பும் இனிவரும் இரவுகளை எப்படி எதிர்கொள்வதென்ற கலக்கத்திலும் சனம் நின்றுகொண்டிருந்தது. 'உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அளிப்போம். எதற்கும் அச்சம்  கொள்ளத்தேவையில்லை' என்று தலைமை போலீஸ் அதிகாரி நம்பிக்கையூட்டினார். அதனை தமிழில் ஒருவர் மொழிபெயர்த்து கொண்டிருந்தார். அவரின் பேச்சில் உண்மையிருந்தது போல நான் உணர்ந்தேன். அந்த அதிகாரி  மொழிபெயர்ப்பாளர் துணையுடன் தமிழில் ஒரு சில வார்த்தைகள் நேரடியாக பேசமுயன்றார். சிங்கள மொழியின் வாடையே தெரியாத ஊர் சனங்களுக்கு அவரின் பிழையான தமிழ் பேச்சு அந்த மனஇறுக்கத்திலும் நகைப்பை உண்டாக்கியது முரண்நகை. எல்லோரும் சிரித்து விட்டார்கள். அந்த அதிகாரிக்கு அவமானமாக போய்விட்டது. ஆனால் அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நான் அவரினால் மட்டும்தான் எங்களை காக்க முடியுமென்று நம்பினேன். சனங்களின் செய்கையில் விசனமுற்றேன். அதிகாரி கோவப்பட்டு எதுவும் செய்து விடுவாரோ என்ற பயம்தான் காரணம். கூட்டத்தில் சிலர் ' நம்ம போட்ட கூச்சலில் சிங்களவன் மிரண்டு ஊருக்கே திருப்பி ஓடியிருப்பான் ' என்று சொல்லி சிரித்தபொழுது எனக்கும் அது சாத்தியமாகவேபட்டது. ஊரே ஒரே நேரத்தில் எழுப்பிய 
 "ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ"  என்ற மரண ஓலம் கேட்பவர்களை கதிகலங்க செய்திருக்கும்.

அன்று தொடக்கம் இரவு நேரத்தில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். தமிழ் ஆயுத குழுக்களான ரெலோ, புளொட் போன்றனவும் அவர்கள் பங்குக்கு பாதுகாப்பில் ஈடுபட்டார்கள். மக்களுக்கு இராணுவத்தின் மீதிருந்த நம்பிக்கையில் துளி கூட அவர்கள் மீதிருக்கவில்லை. கண்டாலே பயந்து ஒதுங்கினார்கள். அவர்கள் தாதாக்கள் போல தான் ஊரில் உலாவந்தார்கள். செய்த அட்டூழியங்களும். கொஞ்சம் நஞ்சமல்ல! நான் அவர்களை பார்க்கும் போதெல்லாம் இரண்டு சம்பவங்கள்
நினைவிற்கு வரும். ஒரு முறை வவுனியாவில் இருந்து ஊரை நோக்கி  வரும் பிரதான பாதையின் முச்சந்தியில் வேகமாக லாரியொன்று  வந்து நின்றது. அதிலிருந்து ஆவேசத்துடன் இறங்கிய சிலர் வண்டியில் கண்கள் கட்டப்பட்டு, கைகளும் பின்னால் இழுத்து கட்டப்பட்ட ஒரு நடுத்தர வயது உள்ள ஒருவரை இழுத்து கீழே போட்டார்கள். பிறகு வேலியில் வளர்த்திருத்த மரத்தின் பச்சை தடிகளை ஒடித்து அந்த மனிதனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்கள். அவன் வலியால் 'ஐயோ அம்மா ' துடித்து கதற ஆரம்பித்தான். சில நிமிடங்களில் அவனைத் தூக்கி வண்டியில் போட்டு கொண்டு சென்றனர். வேடிக்கை பார்க்க கூடிய சனக்கூட்டத்தின் முகம் பயம் இயலாமை கலந்து உணர்ச்சியற்றிருந்தது. இத்தனைக்கும் இச்சம்பவம் நடந்தது போலீஸ் நிலையம் முன்பாக. புலிகளுக்கு எதிராக இயங்கியதால் அரசாங்கத்தின் முழு ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. மற்றைய சம்பவம். என் நண்பன் ஒருவன் என்னை விட வயதில் மூத்தவன். புதிதாக நட்பு கொண்டிருந்தோம். அவனுக்கு அம்மா இல்லை. அநேகமாக இறந்து  போயிருக்கலாம். சரியான காரணம் நினைவில் இல்லை. ஒரு தங்கை. அப்பா மட்டும்தான் இருவருக்கும். 
சரியான வறுமை. வெள்ளை நிறத்தில் மங்கிப்போன கிழிந்த ஒரு மேற்சட்டையும். ஓட்டை விழுந்த அரைக்கலூசானும் போட்டிருப்பான். அவனை கடைசி வரைக்கும் அந்த உடையில் மட்டும் தான் பார்த்தேன். சில நாட்களாக அவன் கண்ணில்படவில்லை. இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக கேள்விப்பட்டேன். அரசாங்கதின் கூலிப்படையாக செயற்பட்டுக்கொண்டிருந்த புளொட், ரெலோ இயக்கத்தின் கொள்கைகளால் கவரப்பட்டுயாரும் அவர்களுடன் சேர்வதில்லை. வறுமைதான் முக்கிய காரணம். மூன்று வேலையும் வயிறார சாப்பாடு கிடைக்கும். பிறகு தமிழர்களையே புலிகளாக பார்க்கும் இராணுவத்தின் கெடுபிடிகளில் இருந்து தப்பிக்கலாம். அவன் அங்கு சேர்வதற்கு காரணம் வறுமைத்தான். சில நாட்களில் அவனையும் அதே பிரதானசாலையின் முச்சந்தியில் பார்த்தேன். லாரியில் பின்னால் அமரந்திருந்தான். கையில் கட்டு போடப்பட்டிருந்தது. அதில் இரத்தம் வடிந்து காய்ந்து  போனதிற்கான அடையாளமாக வெள்ளை துணி கரும்சிகப்பாக மாறியிருந்தது. மிகவும் சோர்வாக காணப்பட்டான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தில் இருந்த என் கண்களை நேரடியாக சந்தித்தபோதும் அவன் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இருக்கவில்லை. இயக்கத்தில் சேர்ந்து சில நாட்களில் தப்பி ஓடியிருக்கிறான். ஒரு முறை சேர்ந்துவிட்டால் நினைத்த மூப்புக்கு வரமுடியாது. தப்பிக்க நினைத்தால் சுட்டு கொன்றுவிடுவார்கள். சில நாட்கள் காட்டில் ஒளிந்து திரிந்ததாகவும். தேடிச்சென்ற சிலரையும் தாக்கி  காயப்படுத்தியதாகவும். கடைசியில்  போராடித்தான் இவனை பிடித்து இருக்கின்றார்கள். இது போன்ற சம்பவங்கள் அவர்களின் மேல் மக்களுக்கு இருக்கும் பயத்தை போக்கிவிடும் என்பதால். 
இவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படலாம் என்று ஊரார் பேசிக்கொண்டார்கள். அன்றுதான் நான் அவனை கடைசியாக பார்த்தேன்.


மறுநாள் நள்ளிரவில் அப்பா,  அம்மாவை தட்டி எழுப்பினார். வீட்டின் அருகில் ரோந்தில் ஈடுபட்டிருந்த ஆமிகாரர்களுக்கு கோப்பி ஊற்றி கொடுக்கும்படி சொன்னார். நானும் விழித்துக்கொண்டேன். கையில் துப்பாக்கியும் இறுகிய முகத்துடனும்  மூவர் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார்கள். அப்பா அவர்களுடன் சிங்களத்தில் எதோ கதைத்து கொண்டிருந்தார். அவர்களும் சூடான கோப்பியை ஊதி பருகியபடி பேசிக்கொண்டிருக்க நான் மிகுந்த பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தேன். அவர்கள் அப்படியே விடியும் வரை இங்கேயே இருந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

பகல் நேரத்தில் நானும் நண்பர்களும் சிங்களவர்கள் வெட்ட வந்தால் என்ன செய்வதென்று கூடி ஆலோசனை நடத்துவோம். அதில் முன்வைக்கப்பட்ட வியூகங்களில் கூளாங்  கற்களினால் தாக்குவது என்ற முறை ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டது. எங்கள் வயதுக்கு அதைதாண்டி யோசிக்கவும் முடிவில்லை. பிறகு அதற்கான பயிற்சியில் ஈடுபட்டோம். குப்பையில் இருக்கும் கண்ணாடி போத்தல்களை சேகரித்து. குறிப்பிட்ட தூரத்தில் வைத்து கற்களினால் குறிபார்த்து வீசி உடைத்தோம். பின்பு போத்தல் ஓடுகளை உடைத்து நடைப்பாதையில் போடுவதாக யாரோ சொல்லி அம்மாவிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டேன். அத்துடன் பயிற்சி கைவிடப்பட்டது. வீட்டின் முன்னால் குவிந்திருக்கும் சிறு கற்களை பார்த்து அம்மா 'எதுக்குடா இவ்வளவு கல்லை பொறுக்கி வச்சிருக்கனு ' அவள் கேட்க நான் பதில் சொல்லவில்லை. அந்த ரகசியத்தை நானும் நண்பர்களும் கடைசிவரைக்கும் காத்தோம். ஒரு மாதத்திற்கு பிறகு ரோந்து நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. மக்களின் மனதில் அந்த பயஉணர்வு மெதுவா அகன்றிருந்தது. ஒரு பக்கம் யுத்தம்  தீவிரம் பெற்றிருந்ததும் காரணமாக இருக்கலாம். ஆனால் அன்றிரவு உண்மையில் என்ன நடந்ததென்பது  மட்டும். கடைசிவரை மர்மமாகவே இருந்தது.

நரேஷ் 
12-25-2019

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I