காதல்காரி

பைத்தியக்காரத்தனமாக இருந்தது. எந்த நம்பிக்கையில் மீண்டும் அவனை சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டேன் என்று தெரியவில்லை. என் முன்னால் இரண்டடி தூரத்தில்  தான் அமர்ந்திருக்கின்றான். அவன் முகத்தில் எவ்வித குற்ற உணர்ச்சியுமில்லை. அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. 
காதலித்த நாட்களில் நான் அவனுடன் பேசியதை விட அவன் கண்ணுடன் 
பேசியது தான் அதிகம். இன்றும் அதைத்தான் தொடர்ந்து கொண்டிருந்தேன். 
எனக்கு அது சுலபமாகயிருந்தது. உண்மையாகவும் தைரியமாகவும் பேசிக்கொள்வோம். அவனை விட அவன் கண்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும். ஒருவேளை அது அவனிடம் நான் பேசியதையெல்லாம் பகிர்ந்திருக்கலாம். நான் ஒரு முட்டாள் அவன் கண்கள் அவனுக்கு நேர்மையாக இருக்காதென்று எப்படி நம்பலாம். ஸஹர் கலிஃபா 
சொல்வது போல காதல் விஷயத்தில் என் அறிவு துணை நிற்பதில்லை. 
ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டே இருக்கின்றேன். நான் என்னத்தான் வாய் கிழிய பேசினாலும். மண்டை வெடித்து போகும் அளவுக்கு வாசித்தாலும். காதல்வயப்படும் பொழுது எதுவுமே எனக்கு உதவியதில்லை. அத்தருணங்களில் அவனை போன்று என் அறிவும் என்னை கைவிட்டு விடும். அடித்த அன்னை சிறிது நேரத்தில் கை நீட்டி "வா செல்லமே" என்றழைக்கும் போது எல்லாவற்றையும் மறந்து கண்களில் கண்ணீர் வழிய, உதட்டில் சிரிப்பு மலரும் அந்த கணத்தில் மழலையின் முகத்தை நீங்கள் பார்த்ததுண்டா? அது போலதான் நான் அவனிடம் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருந்தேன். மனம் எச்சரிக்கும் நான் அதை பொருட்படுத்தியதில்லை. காயப்பட்டுக்கிடக்கும் போது தான் முன்பே கொஞ்சம் யோசித்திருக்கலாமென்று தோன்றும். 

இப்பொழுது அவன் கண்களிடம் ஏன் என்னை நீங்கி சென்றான்? நீ எதுவும் அறிவாயா?  என்று கேட்டு ஏதாவது ஆறுதல் கிடைக்கலாமென்று அங்கலாய்த்து கொண்டிருந்தேன். " வேண்டாம். என்னிடம் எதுவும் கேட்காதே, இதற்கு பதில் தெரியாமல் இருப்பதுதான் நலம். அவனை வாழ்நாள் முழுவதும் வெறுக்கும்படியான காரணங்கள் எதையும் நீ கேட்டு தொலைத்து விடக்கூடாது. நீங்கள் தோற்று விட்டீர்கள். எஞ்சியிருக்கும் காதலையும் கொன்றுவிடாதீர்கள்." என்று கூறிய கண்களிடம் எதிர்த்து என்னால் எதையும் பேசமுடியவில்லை. எனக்கும் அது சரியாகவேபட்டது. 

இந்த சந்திப்பின் நோக்கமென்ன? எதனால் இங்கு அமர்ந்து கொண்டிருக்கின்றோம். கடந்த காலத்தை சரி செய்து நம் காதலை மீட்டு கொள்வதா? இல்லை நண்பர்களாக மீண்டும் தொடர்வதா? இரண்டாவது யோசனை கிறுக்குத்தனமானது. அதற்கு வாய்ப்பும் இல்லை. 

அன்றொரு நாள் அரை நிர்வாணத்தில் என் மேல் கிடந்தவன் தான் இன்று யாரோ போன்று அமர்ந்து என்னை பார்த்து கொண்டிருந்தான். நானும் அன்று பார்த்த அந்நிய ஆணுடன் பழகுவது போல பேச தயங்கி கொண்டிருந்தேன். சிறு பிரிவு பெரிய பிளவையே ஏற்படுத்தியிருந்தது. தாய்மண்ணில் அகதியாகியிருந்தேன். அவன் சாதாரணமாக உரையாடலை ஆரம்பித்தான். சம்மந்தமே இல்லாமல் எதுவெதுவோ பேசினான். அவனை பிரிந்திருந்த நாட்களில் எனக்குள் ஒரு மனப்பிரளயமே நடந்து முடிந்திருந்தது. அவனோ எதுவுமே நிகழாத தோரணையில் பேசிக்கொண்டிருந்தான். நானும் அவனுடன் போட்டிப்போட்டு நடித்து கொண்டிருந்தேன். எல்லாச்  சந்தர்ப்பங்களிலும் மனதில் நினைப்பதையெல்லாம் பேசிவிடமுடிவதில்லை. பேசக் கூட தேவையில்லை. அவன் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டு நான் உன்னை இப்பொழுதும் காதலிக்கிறேன் என்று சொன்னாலே போதும்.  இல்லை... இல்லை... அவனுக்கு அது நன்றாகவே தெரியும். அந்த கணத்தில் என் கண்களில் வழியும் கண்ணீர் எல்லாவற்றையும் உணர்த்திவிடும். மொழிக்கு வேலையிருக்காது. "அதுவும் முடியாவிட்டால் கடைசியாக மூச்சு விட முடியாதப்படி நெஞ்சொடு சேர்த்து இறுக்கி அணைத்துகொள் பிறகு வார்த்தைகளுக்கு தேவையிருக்காது. ஒரு சில நொடிகளில் எல்லாத் தடைகளையும் கட்டுடைத்து விடலாம். " இப்படியெல்லாம் மனம் உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருந்தது. எதையும் செயற்படுத்த முடியாமல் ஜடமாக அமர்ந்திருந்தேன். 

யாருக்கு தெரியும் திடீரென அவன் திருமண அழைப்பிதழை என் முன்னே நீட்டவும் கூடும். ச்சீ.... இருக்காது! அந்த அளவுக்கு மோசமானவனில்லை. என்னை அப்படியெல்லாம் தண்டிக்க எந்த நியாகங்களும் கிடையாது. 

நான் என்ன கேட்கப்போகிறேன் என்று அவனுக்கு தெரிந்திருந்தது. அந்த கேள்வியை வேண்டுமென்றே தவிர்த்து கொண்டிருந்தான். அதுவே என் ஆர்வத்தை அதிகரித்தது. இருந்தும் நான் எதுவும் பேசவில்லை.
பிரிந்து செல்லும் நேரமும் வந்தது. எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. 
தீவிரமான பேச்சு இதைக் கடைசி சந்திப்பாக மாற்றி விடக்கூடாது என்பதில் மட்டும் இருவரும்  உறுதியாக இருந்தோம். "நான் போகட்டுமா" என்றான் ஆனால் என் பதிலுக்கு காத்திருக்கவில்லை. எழுந்து நடக்க ஆரம்பித்து பார்வையிலிருந்து மெது மெதுவாக மறைந்து கொண்டிருந்தான். என் உதடுகள் புன்னகைத்தபடியிருக்க கண்ணீர் மட்டும் நிரப்பி வழிந்து கொண்டிருந்தது. 

நரேஷ்
01-12-2020

Comments

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I