ஊரின் மிக அழகான பெண்






ஃப்ரன்ஸ் காஃப்காவின் " உருமாற்றம் " நாவலை பற்றி சிறு பதிவு எழுதலாமென்று ஆரம்பித்தேன். எழுத முடியவில்லை இத்தனைக்கும் முன்கூட்டியே மனதில் எப்படி எழுத வேண்டும் என்ற சித்திரத்தை வரைந்தாயிற்று. சில சமயம் இப்படி நிகழ்வதுண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கொஞ்சம் முயற்சித்து பார்க்கலாம். முடியாவிட்டால் 
கட்டாயப்படுத்த கூடாது. எழுத்து அதுவாக நிகழவேண்டும். அதனால் 
அப்பிடியே அதை நிறுத்திவிட்டேன்.

இன்றைய விடுமுறை நாளில் எதையாவது எழுதாவிட்டால் எனக்கு இந்த நாள் முழுமை பெறாது. எதோ குறையாக மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கும். கடந்த ஆறு மாதங்களாக நான் ஏற்படுத்தி 
கொண்ட பழக்கம் மீது. சரி வேறு எதாவது உருப்படியாக செய்தாக வேண்டுமென்று நினைத்து கொண்டேன். உடனே சாருவின் " ஊரின் மிக அழகான பெண் "  என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைகள் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இங்கு இடைச்சொருகலாக ஒன்றை குறிப்பிடவேண்டும். புத்தகத்துக்கு தலைப்பிடுவதிலும். முன் அட்டையை 
தெரிவு செய்வதிலும் சாருவை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது! 
முதல் குழந்தைக்கு உண்டான பரிவிலும் நேசத்திலும் பார்த்து, பார்த்து செய்கின்றார். நல்ல ரசனைக்கார். இந்த நூலின் தலைப்பே  அதற்கு சிறந்த உதாரணம்.

இதில் மொத்தமாக 14 கதைகள் உள்ளன. முதல் இரண்டு கதைகளை வாசித்து 
முடித்த கையுடன் இதை எழுதிக் கொண்டிருக்கின்றேன். சிறு அறிமுகம் மட்டுமே பெரிதாக எதையும் விபரிக்க போவதில்லை.

முதல் கதை சீலே நாட்டு எழுத்தாளரான மரீயா லூயிஸா போம்பலின் " மரம் " என்ற ஸர்ரியலிஸ சிறுகதை. பிரிகிடா என்னும் பெண்ணின் துயரமான மணவாழ்க்கையையும், இளமைக்காலத்தையும் ஸர்ரியலிஸ பாணியில் விபரித்து செல்கின்றது. ஸர்ரியலிஸம் என்ற பதத்தின் தெளிவான விளக்கத்தை எனக்கு தந்தது சாருவின் " ஒளியின் பெரும் சலனம் " என்ற உலக சினிமா கட்டுரை நூல்தான். அதன் பிறகுதான் தெளிவான புரிதல் கிடைத்தது. நான் வாசித்த முதல் ஸர்ரியலிஸ சிறுகதையிது. கதைகளை பற்றிய சாருவின் பின் குறிப்புகள் நம் புரிதலை இலகுவாக்கும்.

புத்தகத்தின் இரண்டாவது கதை; வெனிசுலாவை சேர்த்த எழுத்தாளர்.  ஆர்த்துரோ ஊஸ்லார் பியெத்ரியின் " மழை " என்ற மேஜிக்கல் ரியலிஸ சிறுகதை. இக் கதையில் வரும் ஹெசூசோ என்று கிழவனும். அவனுடைய மனைவி உசேபியாவும் தங்கள் முதுமை காலத்தை தனிமையிலும், விரக்தியிலும் பல நாட்களாக மழையே பார்த்திராத வறண்ட பூமியில் வறுமையில் எஞ்சிய  நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியான ஒரு மோசமான நாளில் கதையில் அறிமுகமாகின்றான் மேஜிக்கல் ரியலிஸ பாத்திரமான சிறுவன். அவனின் வருகைக்கு பின்னர் அந்த முதிய  தம்பதிகளின் வாழ்க்கையில் நிகழும் துளிர்ப்பு! என கதை நகரும்.

மேல குறிப்பிட்ட இரண்டு கதைகளுமே யதார்த்தவாத கதைகள் இல்லை. கேளிக்கையை மட்டும் எதிர்பார்ப்பவர்கள் தவிர்த்து விடுவது உங்கள் மண்டைக்கு நல்லது.  கதையை உள்வாங்கி கொள்வதற்கு கொஞ்சம் உழைக்க வேண்டியிருக்கும். ஒரு முறை படித்துவிட்டு புரியாவிட்டால் மறுமுறை வாசித்து பாருங்கள். 

மிகுதி 12 கதைகளையும் படித்துவிட்டு வருகிறேன். நிறைய புதிய விஷயங்களை குருநாதர் கற்பித்து கொண்டே போகின்றார்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I