அன்னா கரினினா


பேரழகியின் துயரக்கதை 

லியோ டால்ஸ்டாயின் 
(உலகபுகழ் பெற்ற நாவல்) 

என் வாழ்நாளில் இந்த நாவலை கண்டடைந்ததை பெரும்பாக்கியமாக கருதுகிறேன். அதிலும் "அன்னா " என்னும் பெண் கதாபாத்திரம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் என்றென்றும் மனதை விட்டு நீங்காது! ஆண், பெண் உறவு சிக்கல்கள், தனிமனித மனப்போராட்டம், சுயதேடல் இதுதான் கதைக்களம்.

திருமணம் என்னும் பந்தத்தில் நுழைந்த பின்பு அதிலுள்ள  பொறுப்புகளையும், கடமைகளையும் உதாசீனபடுத்தும் போது வாழ்வே சூனியமாகமாறி போகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் குறிப்பிட்ட காலத்தில் தனக்கெனவோர் துணையை தேர்வு செய்து அவனையோ / அவளையோ சார்ந்து வாழப்பழகிகொள்கிறார்கள். திருமண பந்தத்தின் ஊடாக அதை உறுதிப்படுத்தியும் கொள்கிறார்கள். அதன் பிறகு நினைத்த மூப்புக்கு அறுத்து எறிந்து விடவோ சேர்த்துக்கொள்ளவோ முடிவதில்லை. அதற்கான வழிமுறைகள் இருந்த போதும் அந்த கட்டத்துக்குள் நுழைந்த பிறகு மீண்டு வருவதென்பது இலகுவானகாரியமல்ல அதனால் தான் நம் கலாசாரத்தில் நடைமுறை ரீதியாக விவாகரத்துக்கள் அத்தனை சுலபமாக நிகழ்ந்து விடுவதில்லை. ஒரு காதல் தோல்வியிலிருந்து மீண்டு வருவது எவ்வளவு மனஅழுத்தத்தை தருமோ அதைவிட பலமடங்கு வலியையும் துயரத்தையும் திருமண பந்தத்தை முறித்து கொள்ளும் போது அனுபவிக்கவேண்டியிருக்கும். நம் சமுதாயத்தில் சச்சரவுகளுக்கு மத்தியில் இன்னும் பல குடும்பங்கள் ஒட்டிக்கொண்டு இருப்பதற்கு இதுவே காரணம். 

கரீன்
இந்த கதையில் பாருங்கள் கரீன் தன்னைப் பற்றியும், தன்சமூக அந்தஸ்து பற்றியும் மட்டும் நினைத்து சுயநலமாக நடந்து கொள்கிறான். அன்னாவை பற்றி பெரிதாக அலட்டி கொள்வதில்லை. பணத்தை மட்டும் கொடுத்தால் 
போதும் கிரகஸ்தனாக தன்கடமை முடிந்தது என்பது அவன் எண்ணம். 
அதையும் தாண்டி அன்பாய் பேசவும், மனம் சோர்ந்து போகும் போது சாய்ந்து கொள்ள நெஞ்சும், தன்குறையை கேட்டு ஆறுதல்படுத்த ஒரு துணை அவளுக்கு தேவை என்பதை உணர மறந்து போகிறான்.  

இந்த சந்தர்ப்பத்தில் விரான்ஸ்கியின் வருகை அவளுக்குள் (அன்னா) ஈர்ப்பை உண்டாக்குகிறது. இது கூடா நட்பு தான் இன்னோருவனின் மனைவி, இது 
முறையும் அல்ல வென்று அவனை அன்னா கடந்து போக பெரும் பிரயத்தனபடுகிறாள் ஆனால் முடியவில்லை. விதி வலியது, 
அன்புக்கா எங்கும் அவளின் இதயத்திற்கு அதை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி ஒருவர் தரும் போது பேதையுள்ளம் வேண்டாமென்றா சொல்லும்! 

கிட்டி 
இன்னோரு பெண் கதாபாத்திரமான கிட்டிக்கு முன்பு இரண்டு தேர்வுகள் 
ஒன்று சமுதாயத்தில் நல்ல அந்தஸ்த்திலும், சம்பாத்யத்திலும் உள்ள விரான்ஸ்கி. ஆனால் அவன் அவளுடனான உறவில் கிட்டியளவுக்கு தீவிரமாகயில்லை. உல்லாசமாக வாழ்வதில் நாட்டம்முடையவன். மற்றறையது லேவின், கிட்டியை மனதார நேசிக்கிறான். அவனும் சமுதாயதில் நல்ல அந்தஸ்துள்ள பிரபு குடும்பத்தை சேர்ந்தவன்தான். சொத்து, சுகம் எல்லாம் விரான்ஸ்கிக்கு நிகராகவுண்டு ஆனால் கிராமத்தான், சொந்தமாக பண்ணையுண்டு விவசாயியும்கூட, நகர்ப்புற நாகரிக வாழ்க்கையில் பெரிதாக ஈடுபாடு இல்லாதவன். உல்லாசமாக பொழுதை போக்குவதும், களியாட்டங்களில் ஈடுபடுவதெல்லாம் பிடிக்காது. 
நாஸ்திகன் (கதையின் ஆரம்பத்தில்) சுயதேடல்மிக்கவன் நான் யார் ? எதற்கு பிறந்தேன்? ஏன் ஏழை விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் இப்படி வறுமையில் உழல்கிறார்கள்? கடவுள் இருக்கிறாரா, இல்லையா ? அரசியலின் பொறுப்பு என்ன? அரசாங்கத்தின் கடமையேன்ன? என்னால் இந்த பாவப்பட்ட குடியானவர்களுக்கு எப்படி உதவிடமுடியும்? இப்படி ஆயிரம்  கேள்விகள் மனதிற்குள் நித்தமும் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் அனுபவத்தின் மூலம் கிடைக்கும் படிப்பினையிலிருந்து கற்றுக்கொள்கிறான். தெளிவும் பெறுகிறான். வாழ்க்கையில் அதை நடைமுறைபடுத்தி வெற்றியும் காண்கிறான். கிட்டி விரான்ஸ்கியை வாழ்கை துணையா தேர்வு செய்ய 
நினைத்த போதும் விதி லெவினுடன் சேர்த்து விடுகிறது. 

லேவின் கதாபாத்திரத்தை டால்ஸ்டாய் தன்னை உருவகபடுத்தி கொள்ள படைத்ததாக இலக்கிய ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பெண் உரிமை, மதப்பற்று, ஏழைகளின் மேல் காட்டும் இரக்கம், செல்வந்தராக இருந்த போதிலும் தானும் விவசாயிகளுடன் சேர்த்து வேலை செய்வது போன்ற நிஜவாழ்க்கையில் அவர் கடைபிடித்த கொள்ளகைகளையே லெவினும் கடைபிடிக்கிறான்.

அன்னாவும் விரான்ஸ்கியும் ஒன்றாக சேர்ந்துவாழ ஆரம்பித்த பிறகு எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நிகரான அத்தனை சிக்கல்களையும் 
கிட்டி, லேவின் தம்பதிகளும் எதிர்க்கொள்கிறார்கள். ஆனால் பேசித் தீர்த்து கொண்டு கடந்து போய்விடுகிறார்கள். அன்னா, கரீனுடன் வாழ்ந்த போது எதிர்கொண்ட சிக்கலை விரான்ஸ்கியுடனும் சந்திக்க நேர்கிறது. ஆனால் அவன் அன்னாவை மனப்பூர்வமாக காதலிக்கிறான். அவளுக்காக உயிரையும் கொடுக்க துணிகிறான். கிட்டியுடன் தனக்கு உண்டாகாத காதலின் முழுவீரியத்தையும் அன்னாவின் உறவில் பெறுகிறான்.அவளுக்காக தான் இராணுவத்தில் வகித்த உயர்ப்பதவி, குடும்பம், நண்பர்கள், கௌரவம், எல்லாவற்றையும் துறந்த போதிலும். அன்னாவை திருப்திபடுத்த முடியாமல் போகிறது. நித்தமும் வாய்தர்க்கம், மணமுறிவு, தன்காதலை தினமும் அவளுக்கு நிரூபிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். நிரூபித்தும் தோல்வியே அடைகிறான்.

அன்னா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? அவளின்  நம்பிக்கையின்மைக்கு காரணம்மென்ன?  

கரீனை பிரிந்து வந்துவிட்ட போதிலும் தன் மகன் செரிஜாவினை பிரிந்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அவனை சந்திக்க கரீன் அனுமதியளிக்க மறுக்கிறான். விரான்ஸ்கியும் சில நேரங்களில் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகள் காரணமாக அன்னாவுடன் இருக்கும் நேரத்தை குறைத்து கொள்கிறான். பல சமயங்களில் வீட்டுக்கே வருவதில்லை. இவனை நம்பி எல்லாவற்றையும் விட்டு வந்துவிட்டேன். இப்பொழுது இவனுக்கு என்மேல் உள்ள காதல் குறைந்தது வருகின்றது. இவன் என்னை நீங்காமலிருக்க திருமணம் தான் ஒரே வழியேன்று முடிவுக்கு வரும் போது கரீன் விவாகரத்தளிக்க மறுக்கிறான். சட்டரீதியாக கரீனுடன் விவாகரத்து பெற்றால்தான் விரான்ஸ்கியை திருமணம் செய்துகொள்ள முடியும்.

எல்லாப் பக்கத்தில் இருந்துவரும் பிரச்சனைகள் அன்னாவை நிலைத்தடுமாற செய்கிறது. பைத்தியம் பிடிக்காத குறைதான். விரக்தியடைந்து போகிறாள். 
விரான்ஸ்கி தன்னை உயிராக நேசிக்கிறான். என்னை எந்த சந்தர்ப்பத்திலும்  கைவிடமாட்டான் என்று அவளுக்கு தெரியும். ஆனால் மனஅழுத்தம் தரும் 
நம்பிக்கை ஈன்மை அவளை பாடாய்படுத்துகிறது! 

இத்தனைக்கும் கரீனும் மோசமானவனல்ல, அவன் இடத்திலிருந்து பார்க்கும் பொழுது பரிதாபத்திற்கு உரியவன்தான். முடிந்த மட்டும் அன்னாவுக்கு உதவுகிறான். சில சமயங்களில் தன் சுயகௌரவம் எட்டிபார்க்கும் பொழுது கோவப்படுகிறான். விவகாரத்தளிக்க மறுப்பதன் மூலமும், மகனை சந்திக்க விடாமல் தடுப்பதன் மூலமும் அவளை பழிவாங்குகிறான். அவன் கோபத்திலும் நியாயமுண்டு தன் மனைவி வேறு ஒருவனுடன் உறவில் இருந்தால் யாருக்குதான் கோபம் வராது. 

அப்படியென்றால் கரீன் செய்த தவறுதான் என்ன!? 

அன்னாவினை அவன் காதலிக்கவில்லை அவள் தனிமையை ஏக்கத்தை புரிந்து கொள்ளவில்லை. குழந்தை பிறந்ததும் வீட்டு தேவையை கவனித்து கொண்டு  சிலவுக்கு பணம் கொடுத்தால் தன்கடமை முடிந்ததென்று நினைத்து கொண்டான். அந்த நேரத்தில் விரான்ஸ்கி இவளை நெருங்கிவர அன்னா காதலில் விழுந்து விடுகிறாள். அவனின் அழகை, வசதியை, இத்யாதி காரணங்களுக்காக அவனை விருப்பவில்லை. அன்பிற்காக மட்டும்தான்.

ஆப்ளான்ஸ்கி
(அன்னாவின் சகோதரன்) 
ஆப்ளான்ஸ்கி அவன் மனைவி டாலிக்கு உண்மையா இல்லை. வேறு பெண்களுடன் உறவில் இருக்கிறான். ஒரு தடவை கையும் களவுமாக மாட்டிக்கொள்ளும் போது அவன் மேல் கடுங்கோபம் கொண்டு டாலி பிரிந்து போகப் பார்க்கிறாள். அது அன்னாவின் தலையீட்டினால்  தடுக்கப்பட்டு 
இருவருக்கும் இடையில் சமாதானம் உண்டாகிறது. அதற்கு பிறகும் கூட ஆப்ளான்ஸ்கி மாறவில்லை தன் இஷ்டம் போலவே வாழ்கிறான். அதுவெல்லாம் டாலிக்கு தெரியாமலும் பார்த்து கொள்கிறான். சில நேரம் இவன் நடவடிக்கைகளில் அவள் சந்தேகம் உற்றப்போதும் பெரிதாக அலட்டி கொள்ளாமல் தன்  தலைவிதியேன்று எண்ணி அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு பழகிவிடுகிறாள். 

*கிட்டி - லேவின் 
*அன்னா - கரீன் - விரான்ஸ்கி 
*ஆப்ளான்ஸ்கி - டாலி 
இந்த மூன்று தம்பதிகளின் உறவுகளும் பல சிக்கல்களை சந்திக்கிறது.
சிலர் அதில் இருந்து மீண்டு வருகிறார்கள். 
சிலர் கிடைத்த வாழ்க்கைக்கு பழகிப்போய்விடுகிறார்கள். 
சிலர் வாழ்வை தொலைத்து விடுகிறார்கள். 
இந்த நாவல் வேறும் புத்தகமல்ல ஒவ்வொரு ஆணும், பெண்ணும் 
படிக்க வேண்டிய கீதை. இதன் சாரத்தை உள்வாங்கிகொண்டால் தாம்பத்ய வாழ்கையில் ஏற்படும் பல சிக்கல்களை தாண்டி வந்துவிடலாம். எந்த காலத்திலும் முற்று முழுதாக புரிந்துகொள்ளவோ அல்லது தீர்த்து கொள்ளவோ முடியாதது தானே மனித உறவு(சிக்கல்)கள். விட்டுக்கொடுப்பில், புரிந்துணர்வில், அன்பின் மூலமாக மட்டுமே அதை உயிர்ப்பாக வைத்திருக்க முடியும். 

 ***
ஸ்பாய்லர்_அலெர்ட் 
 -----------------------------
இந்த நாவலை வாசிக்கும் போது எந்த ஒரு வாசகனுக்கும் ஏற்படக்கூடாத துர்ப்பாக்கிய நிலைமை எனக்கு ஏற்பட்டது. புத்தகத்தின் முன் பக்கத்திலிருந்த  குறிப்புகளில் "அன்னா" கடைசியில்  இரயிலின் முன் பாய்ந்து தற்கொலை 
செய்து கொள்வாள் என்பதை அறியாமல் படித்துவிட்டேன். ஆரம்பத்தில் அன்னாவை நான் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. அவளின் நடவடிக்கைகள் மூலம்  வெறுத்தேன். பிறகு சில பக்கங்கள் தாண்டியதும் அவளை பற்றி மேலும் தெரியவந்தபோது அவளை பிடிக்க ஆரம்பித்தது. பாதிப்புத்தகத்தை தாண்டியதும் அவளை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்பொழுது அவள் மேல் எந்த குறையும் எனக்கு தோன்றவில்லை. அவள் அனுபவிக்கும் துன்பத்தை பார்த்து பச்சாதாபம் தான் உண்டானது. இன்னும் சில பக்கங்களில் தன்னை மாய்த்து கொள்ளப்போகிறாளே என்று மனது பதறியது! என்னால் அவளுக்கு உதவவும் முடியாத கையறுநிலை. நாவலின் கடைசி தருணங்களில் அவள் கடுமையான மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள். 
டால்ஸ்டாய் ஏன் இப்படி அன்னாவினை பாடாய்ப்படுத்துகிறார் என்று விசனப்பட்டுக்கொண்டேன். 

இப்பொழுது ரயில் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. விரக்தியின் உச்சத்தில் அன்னா  தண்டவாளத்திற்கு அருகே போய் நின்று கொள்கிறாள். நான் எதிர்கொள்ளப்பயந்த அந்த தருணம் இதுதான். என்னால் எதையும் மாற்ற முடியாது. மனதில் இனம்புரியாத பெரும்துயரத்தை உணர ஆரம்பித்தேன். 
வேறு வழியில்லை இதை வாசித்து கடந்து போகவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை. வேகமாக வந்த இரயிலின் முன்பு பாய்ந்து அன்னா இறந்து போகிறாள். என் கண்கள் கலங்கிவிட்டது. அழவேண்டும் போலிருந்தது. நான் அந்த தருணத்தில் தனியாக  இருக்கவில்லை. பெரும் பிரயத்தனப்பட்டு அழுகையை அடக்கி கொண்டேன். டால்ஸ்டாய் கொஞ்சம்கூட ஈவிரக்கம் இல்லாதவர். அவளை இப்படி அநியாயமாக கொன்றுவிட்டார். 

பாவம் அவளை வாழவிட்டிருக்கலாம்.

நரேஷ் 
14-02-2020

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I