The Intruder / 2019

அழையா விருந்தாளி 

இரண்டு மணிநேரத்தில் தரமான த்ரில் 
படம் பார்க்க நினைத்தால் இந்த படத்தை பாருங்கள். மனம் அமைதியில்லாமல் குழப்பமான மனநிலையில் இருந்தால் தவிர்த்து விடுவது நல்லது. மனதை பதற்றத்திலேயே வைத்திருக்க கூடிய கதை என்பதால் சொல்கிறேன். பாண்டஸியாக கதை நகர்ந்தால், ஸ்லேசர் (Slasher) ரக படங்களை கூட இலகுவாக பார்த்து விடலாம். நிஜத்திற்கு அருகில் நகரும் இம்மாதிரியான கதைகள் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். சாதாரண கதைதான். இயக்குனர் சொல்லிய விதத்தில் மிரட்டி விட்டார். படம் தொடக்கம் முதலே நம்மை எதோ ஒரு பதற்றத்திலேயே வைத்திருக்கும்.

ஸ்கோட்டும், எனியும் புதிதாய் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதி. தங்கள் குடும்ப வாழ்க்கையை இனிதே ஆரம்பிக்க கிராமப்புறத்தில் உள்ள ஒரு அழகான பழைய வீட்டை விலைக்கு வாங்குகிறார்கள். அது ஊரின் ஒதுக்கு புறத்தில், காட்டிற்கு அருகாமையில் அமைத்துள்ள வீடு. நீரோடை, பசுமையான மரங்கள், பச்சைபசேலென இருக்கும் புல்வெளி, என இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான இடம். பார்த்த எவருக்கும் உடனே பிடித்து போகும். என்ன ஒரு குறை, அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை. மற்றும்படி தரமான வீடு.

இவர்கள் வீட்டை வாங்கிய பின்னரும் 
வீட்டின் பழைய சொந்தக்காரனான சார்லி அந்த வீட்டை விட்டு மனதளவில் பிரியவில்லை. எதோ ஒரு காரணம் 
சொல்லி அடிக்கடி வீட்டிற்கு வந்து போகிறான். இன்னும் தன் வீடு என்பது போலவே அவனது நடவடிக்கைகள் இருக்கிறது. ஒரு மர்மமான ஆசாமியாக நடந்து கொள்கிறான். சார்லியையும், 
அந்த வீட்டையும் சுற்றி எதோ ஒரு மர்மம் இருப்பது ஸ்கோட்டுக்கு புலப்படுகிறது.  
இரவில் தங்களை வீட்டில் யாரோ கண்காணிப்பது போலவும் உணருகிறான். இவையெல்லாம் சேர்ந்து சார்லியின் மீதிருக்கும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. அசட்டையாக இருக்கும் எனியை எச்சரிக்கிறான். அவள் நம்ப மறுக்கிறாள். அதற்கு பின்னர் தான் கதை சூடுபிடிக்க தொடங்குகிறது. உண்மையில் சார்லி கெட்டவனா? இல்லையேன்றால் அவனின் நோக்கம் என்ன? என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

பிரதானமாக மூன்று கதாபாத்திரங்ளையும், ஒரு வீட்டையும்  மட்டும் வைத்துகொண்டு, முழுப்படத்தையும் விறுவிறுப்பாக நகர்த்தியதில் இயக்குனரின் சாமர்த்தியம் புலப்படுகிறது. படம் தொடங்கி பதினைந்தாவது நிமிடத்தில் நமக்குள் தொற்றி கொள்ளும் பரபரப்பு கடைசி மட்டும் தொடர்கிறது. Imdb 5.5/10 
ரேட்டிங்கை பார்த்து குறைவாக மதிப்பிடவேண்டாம். தரமான திரில்லர்.

நரேஷ் - 44

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I