ப்ரஷர் குக்கர்

(குறுங்கதை - 11)

அந்த ப்ரஷர் குக்கரில் தான் 
அவர்கள் தினமும் அவிந்துக்  கொண்டிருந்தார்கள்.
காலை எட்டுக்கு ஆரம்பித்தால் அன்றைய நாள் வேலை நேரம் முடியும் வரைக்கும், ஊசி நிலத்தில் விழும் ஒலியைக் கூட துல்லியமாகக்  கேட்கலாம். அவ்வளவு நிசப்தம். காற்றில் அபிநயம் பிடித்துதான் பேசிக்கொள்வார்கள். 
வார்த்தைகள் கூட ஒலியின்றி வெறும் காற்றாய் தான் வெளிவரும். 

புதிதாய் அங்கு வந்து சேருபவர்கள் அதே வேகத்திலேயே காணாமல் போய்விடுவதுமுண்டு. 
சில சமயங்களில் மீறி சிக்கியவர்கள்  அழுத்தம் தாங்காது  இருக்கையிலேயே வெடித்து சிதறிக்கிடப்பார்கள். அவர்களை அப்படியே அள்ளி குப்பைத்  தொட்டியில் போட்டுவிட்டு வேலை சிறிதும் தடையுறாமல் கம்பனி நிர்வாகம் பார்த்துக்கொள்ளும். குடும்பத்திற்காகத் தங்களை நேந்துவிட்ட ஒரு சில பலிக்கடாக்கள் மட்டும் அங்கே மீந்திருக்கும்.

ரெஸ்ட் ரூமில் உள்ள முகம் 
பார்க்கும் கண்ணாடிதான் 
எச். ஆர். சில சமயங்களில் சைக்கார்டிஸ்ட் என எல்லாமே, மேனேஜரிடம் கடிப்பட்டவர்கள். மூத்திரம் முட்டுவதாகப் பாவனை செய்துக்கொண்டு அங்கு சென்று அதனிடம் முறையிட்டு, தன் பிம்பம் கரைவதைச் சில நிமிடங்கள் பார்த்து விட்டு, முகத்தைக் கழுவிக்கொண்டு புன்னகைத்தபடியே வெளிவருவார்கள். அந்த கணம் தங்கள் சுயமரியாதை நீங்கி மனம் இலகுவானதை உணருவார்கள். 
அந்த கண்ணாடியின் முன்பு  நடைமுறைப்படுத்தாத பல கொடூர கொலைத்திட்டங்கள் எல்லாம் திட்டமிடப்பட்டு அடுத்த நொடியே மறக்கப்படுவதும் உண்டு.  

ப்ரஷர் குக்கரில் தொடர்ந்து அவிந்தால் தான் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று நிறுவப்பட்ட  சுயமுன்னேற்ற புத்தகங்களை வாசிக்கும் பொழுது "எழுதியவரின் கழுத்தை கடித்து குதறவேண்டும்!" என்று தோன்றும்.
வேறு வழியில்லை அதை நம்பித்தான் ஆகவேண்டும். 
ஆனால் தொடர்ந்து அவியத் முக்கியத்தகுதி சூடு, சுரணை எல்லாம் மருந்துக்கும் இருக்கக்கூடாது. 
இதை அங்கு உயர்ப்பதவிகளில் வகிக்கும் ஜால்ராக்கள் 
நடைமுறை வாழ்வில் நிரூபித்துக்  காட்டினார்கள். அவர்களைப் பார்த்து உத்வேகம் பெற்றவர்களும் உண்டு.

வருட இறுதியில் ஊதிய உயர்வை எதிர்பார்ப்பார்கள் என்று அறிந்து வைத்திருக்கும் நிர்வாகம்,
கைவசம் தயாராக வைத்திருக்கும் 
பிலாக்கணத்தை தான் சகிக்க முடியாது. ஆட்டு குட்டிக்காகக்  கண்ணீர் சிந்தும் ஓநாய்களை 
அங்கு பார்க்கலாம். இத்தனைக்கும் நடுவில் மாதக்கடைசியில்
'சம்பளம் வைப்பில் இடப்பட்டுள்ளது' என்று வரும் அந்த ஒற்றைக் குறுஞ்செய்திதான் கொஞ்சம் ஆசுவாசம் அளித்து அடுத்த மாதத்திற்கு அவர்களை அவியத் தயார் செய்யும்.
***
நரேஷ் 

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I