எழுத்தாளர் ஆவது சுலபம்

எழுத்தாளர் ஆவது சுலபம், ஆனால் 
நம் எழுத்தை மற்றவர்களை வாசிக்க செய்வதுதான் சவாலான காரியம். 
எழுதுவது எல்லாமே படைப்பாகிவிட முடியாது. அதனால் தான் சொல்கிறேன் எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல!. மலையின் உச்சியை அடையமுயலும் சிறு எறும்பென நான் முயற்சித்து கொண்டிருக்கிறேன். 
நான் சோம்பேறி, தற்போதைய வேகத்தை வைத்து கணித்து பார்க்கும் பொழுதும் ஏறி முடிப்பேனா என்பதே சந்தேகம் தான்.

நண்பர்கள் எழுத்தாளர் என்று கூப்பிடும் பொழுது என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னும் ஒரு புத்தகம் கூட எழுதியது இல்லை பிறகு எப்படி எழுத்தாளன் ஆகமுடியும் என்று நானே என்னிடம் கேட்டுக் கொள்வேன். 
முதன் முதலாக #கனலி இலக்கிய இணைய தளத்தில் என் "தவிப்பு" என்ற குறுங்கதை வெளிவந்த பொழுது அதில் "எழுத்தாளர்: நரேஷ்" என்று குறிப்பிட்டிருந்தார்கள். அன்றிலிருந்து எழுத்தாளன் என்ற பட்டத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொண்டேன். 
"உனக்கு கதை எழுதவே தெரியவில்லை" என்பவர்களிடம், நான் எழுத்தாளன் அல்லவென்று தன்அடக்கத்துடன் நடந்து கொண்டால் சில அரைவேக்காடுகள் 
தலை மேல் ஏறி கக்கா போய்விடுகிறார்கள். அடக்கமும், பணிவும் அளவாக இருக்கவேண்டும் என்பதை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். முதலில் நான் என்னை நம்ப வேண்டாமா, பிறகு எப்படி மற்றவர்கள் நம்புவார்கள். அதனால் நான் இப்பொழுது என்னை எழுத்தாளன் என்று முழுதாக 
ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டேன். உருப்படியாக ஒரு கதை சரி எழுதியிருக்கிறேன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு. 
உங்களுக்கு பா.சிங்காரத்தை தெரியுமா ? இலக்கிய வாசகர் என்றால் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இன்றைய திகதியில் தமிழின் சிறந்த எழுத்தாளர்களை பட்டியலிட்டால் முதல் பத்து இடங்களுக்குள் வருவார். 
தமிழின் மிக சிறந்த நாவல்களை வரிசைப்படுத்தினால் இவரின் 
"புயலிலே ஒரு தோணி"
"கடலுக்கு அப்பால்" என்ற இரண்டு நாவலையும் தவிர்க்க முடியாது. 

பா.சிங்காரம் தன் வாழ் நாளில் இந்த இரண்டு நாவல்களை மட்டுமே எழுதினார். அவர் எழுதிய பிறகு  அச்சுக்கு கொண்டு வர ஏழு, எட்டு வருடங்கள் ஆனது. ஆரம்பத்தில் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. 
அத்துடன் மனிதர் எழுத்தை வெறுத்தே விட்டார். அதற்கு பிறகு அவர் எதுவும் எழுதவில்லை. இப்பொழுது பாருங்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். சாரு தமிழ் சமூகத்தை 'நெக்ரோபிலியா' என்று விழிப்பது சரிதான். பாரதி உயிருடன் இருக்கும் போது பசியுடன் உழலவிட்டவர்கள் தானே நாம். 

மேற்குறிப்பிட்ட இரண்டு நாவல்களும் தமிழுக்கு புதியவை. கதை நிகழ்வது இரண்டாம் உலகமகா யுத்தகாலத்தில்
பர்மா, இந்தோனேசியா, சிங்கப்பூர், 
இந்தியா தான் கதைக்களம். ஜப்பானிய மொழி, சீன மொழி, மலாய் ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் கதாபாத்திரங்கள் உரையாடிக்கொள்ளும். ஹிட்டலர், நேதாஜி எல்லாம் வந்து போவார்கள். தத்துவம், காதல், அரசியல், விடுதலை என எல்லா உணர்வுகளும்  உண்டு. மொத்தத்தில் வாசித்து 
முடிக்கவே சவாலான நாவல்.
மீள் வாசிப்பு செய்யும் பொழுது 
புதிய பரிமாணங்கள் புலப்படும். 

அவர் இன்னும் எழுதியிருக்க வேண்டியவர். மனிதரை கண்டுகொள்ளாமல் 
அநியாயமாக இழந்து விட்டோம். 
நூறு புத்தகங்கள் எழுதியவர்கள் எல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கும் போது இரண்டு புத்தகம் மட்டுமே எழுதி சிங்காரம் வரலாற்றில் நிலைத்துவிட்டார். 

நாம் எவ்வளவு எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல, என்ன எழுதுகிறோம் 
என்பதே முக்கியம்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I