Memories of Murder (2003)

Memories of Murder 
No Spoilers 
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம்.

தென் கொரியாவில் உள்ள 
Hwaseong, Gyeonggi என்னும் மாநிலத்தில் 1986 ஆம் ஆண்டு தொடக்கம் 1991ற்கு  இடைப்பட்ட காலப்பகுதியில் தொடர் மர்மகொலைகள் நிகழ்கின்றன. கொலைக்காரனை கண்டுபிடிக்க மூன்று துப்பறிவாளர்கள் களத்தில் இறங்குகிறார்கள். புலி வேட்டைக்கு குருவி பிடிப்பவர்களை அனுப்பிய கதையாக மாறிப்போகிறது. தேடலில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கொலைகளும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. இவர்களும் விடுவதாகயில்லை.
நேரம் காலம் பாராது தேடுகிறார்கள். மேலிடத்திலிருந்து அழுத்தமும் அதிகரிக்கின்றது. நாட்கள் நகர, நகர இவர்களின் நிலைமை பரிதாபமாகிறது.
அப்பொழுது தான் அவர்களுக்கு புரிகிறது தாங்கள் தேடுவது,
சாதாரணமான கொலைகாரனல்ல  கொடூரமான சைக்கோவென்று.

நிகழ்ந்த கொலைகளை ஆராய்ந்து பார்த்த பொழுது அனைத்திலும் சில ஒற்றுமைகளை காணமுடிகிறது. கொலையுண்டவர்கள் அனைவரும் பெண்கள். மரணித்த விதமும் ஒன்றே, அவர்களின் உயிரை பறிக்க பயன்படுத்தியது அவர்களின் உள்ளாடையை. ஒவ்வொருவரும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கொல்லப்பட்டுள்ளனர். முடிவில் இந்த பாணியில் கொலை செய்வது சைக்கோ சீரியல் கில்லர்கள் தான் என்பது ஊர்ஜிதம் ஆகிறது.

வருடங்கள் கடந்து போகின்றன....., எந்த முன்னேற்றமும் இல்லை.
மர்ம கொலைகள் தொடர்கின்றன..., மறுபுறம் கொலைகாரனைத் தேடும் படலமும் தீவிரமடைகிறது. சைக்கோ சீரியல் கில்லரை பிடிப்பது ஒன்றும் அத்தனை சுலபமானதல்ல அவர்கள் மிகுந்த அறிவுக்கூர்மை உடையவர்கள். சிறு தடயம் கூட இல்லாமல் காரியத்தை கச்சிதமாக முடிப்பதில் கைதேர்ந்தவர்கள். சீரியல் கில்லர் என்ற பட்டம் கிடைக்கவே ஒரே மாதிரி பல கொலைகளை செய்திருக்க வேண்டும் இல்லையா?

அவர்கள் அகப்படும் வரைக்கும் எந்த குற்றப்பின்னணியும் இருக்காது.
பொதுவாக சமூகத்தில் மிகுந்த மரியாதைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அயலவரிடம் விசாரித்து பார்த்தால், " ஓ அவரா..., தங்கமான மனுஷனாச்சே! தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பாரே" என்பார்கள். மற்றவர்களை விடுங்கள் அவர்களின் குடும்பத்திற்கே சுயரூபம் தெரியாது. 

இவற்றை அழுத்திக் குறிப்பிட காரணம் சாதாரண கொலையாளிக்கும் சீரியல் கில்லருக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. இருவருக்கும் கொலைக்கான நோக்கமே முற்றிலும் வேறுபட்டிருக்கும். அவர்களுக்கு உள்ளே உறங்கும் மிருகம் எல்லா நேரங்களிலும் வெளிப்படாது ஆனால் வெளிவரும் போது விளைவுகள் படுமோசமாக இருக்கும். பணத்திற்காக, தனிப்பட்ட விரோதத்திற்காக எல்லாம் உயிரை எடுப்பது கிடையாது. மாறக கலவியில் கிடைக்கும் இன்பத்தை, கொடூரமாக கொலைச் செய்யும் தருணங்களில் அடைவார்கள். அந்த வேட்கை வரும் பொழுது சிக்குபவர்கள் கதி அதோ கதைதான்!

முடிந்தால் மதனின் "மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்" என்ற புத்தகத்தில் சீரியல் கில்லர்களை பற்றிய திகிலூட்ட கூடிய ஒரு அத்தியாயம் உண்டு அதனை படித்துவிட்டு. இந்த படத்தை பாருங்கள். சுவாரசியமாக இருக்கும். 
நான் அறிந்து தமிழில் வந்த சீரியல் கில்லர்களை பற்றிய அருமையான நூல் இதுதான்.

ஹாலிவுட் திரில்லர் பார்க்கும் மனநிலையோடு இந்த படத்தை அணுகினால், ஏமாந்து போவீர்கள். காரணம், கொரியன் சினிமாவில் ஹாலிவுட் அளவுக்கு பிரமாண்டம், தொழிலநுட்பம், நேர்த்தி என அனைத்தும் உண்டு. அதைவிட ஒரு படி யதார்த்தமாக இருக்கும். நம்பகத்தன்மை அதிகம். இன்னொரு முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் பெரும்பாலான கொரியன் படங்களை அப்படியே தமிழுக்கு மாற்றி எடுத்து விடலாம். சிறு மாறுதல்களை செய்தால் மட்டும் போதும். அப்படியே நம் நிலத்துடன் பொருந்தி போகும். அதனால் தான் கதையின் பின் புலத்துடன் இலகுவாக நம்மை தொடர்புபடுத்தி கொள்ளமுடிகிறது.

இந்த படத்தை பார்க்கும் பொழுது ஒரு கட்டத்தில் நானும் டிடக்டிவ்வாக மாறி கொலையாளியை தேட ஆரம்பித்து விட்டேன். கண்டுப் பிடித்தேனா? இல்லையா? என்பதை நான் சொல்ல மாட்டேன். நீங்களும் படத்தை பார்த்து அந்த அனுபவத்தை பெறுங்கள். ஆனால் ஒன்று படத்தின் கடைசிக் காட்சி வரும் பொழுது, "அடேய் படத்தை முடிச்சிடாதீங்கடா" என்று இறைந்து கேட்பீர்கள். 
பிறகு மண்டை காய்ந்து கூகுள் செய்து பார்க்க போய்விடுவீர்கள். 

மொத்தத்தில் இந்த படம் ஒரு  "மாஸ்டர் பீஸ்"  
காட்பாதர் படத்தில் துப்பாக்கியில் இருந்து தோட்டா அவ்வளவு சுலபத்தில் பாயாது. ஆனால் நமக்கே  உயிர்ப்பயம் வரும் படியாக படம் முழுவதும் மிரட்டி இருப்பார்கள். காட்சிகளின் வீரியம் செறிந்து இருக்கும். அது போலத் தான் இந்த படமும். ஒவ்வொரு கொலையும்  நிகழ முன்பு நமக்குள் சப்த நாடியும் உறைந்து போகும். இவ்வளவிற்கும் வன்முறைக் காட்சிகள் மிகையாக காட்டப்படுவதில்லை. 

இப்பொழுது சென்று படத்தை பாருங்கள். மேற்கொண்டு படிக்க வேண்டாம். படத்தை பார்த்த பிறகு உங்களுக்கு ஒரு துன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. பிறகு மனதில் தோன்றும் குழப்பத்திற்கு கீழே உள்ள பத்தியில் விடையுண்டு.

***
நிஜக்கதையின் பின்னனி 

தென் கொரியாவின் Hwaseong Gyeonggi என்னும் மாகாணத்தில் 1986 - 1991 வரைக்கும் இடைப்பட்ட காலத்தில் தொடர்க்கொலைகள் நிகழ்கிறது.
அவற்றில் பத்துக் கொலைகள் நிகழ்த்தபட்டது ஒரே விதத்தில்.
கொலைகாரனை கண்டுபிடிக்க முடியவில்லை. நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை உருவாகுகிறது. பின்னர் Hwaseong serial murders என நினைவு கூரப்படும் இச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 
Memories of Murder என்னும் இந்த படம் 2003 ஆம் ஆண்டு வெளியாகிறது. 
கடைசி மட்டும்  கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.

1986 - 1991 காலகட்டத்தில் சந்தேகத்தில் பிடிக்கப்பட்ட நபரின் DNA மாதிரி ஜப்பானுக்கு அனுப்பட்டு பெறப்பட்ட முடிவுகள் அவனுடன் பொருந்தி போக மறுக்கிறது. (படத்தில் அமெரிக்காவுக்கு அனுப்ப படுவதாக  காட்டப்படும்) 
பின்பு அவனும் விடுதலை செய்யப்படுகிறான். தென் கொரிய நாட்டுச் சட்டப்படி குறிப்பட்ட காலப்பகுதிக்குள் கொலையாளியை கண்டு பிடிக்க முடியாவிட்டால் அந்த வழக்கு கைவிடப்படும். அந்த நிலையை Hwaseong serial murders வழக்கும் எட்டுகிறது. இந்த கொலைக்காரனை தண்டித்தே ஆகவேண்டும் என்பதற்காக அதற்கு பிறகும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மேலும் சில வருடங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. இருப்பினும் குற்றவாளியை நெருங்க முடியவில்லை. பின்பு ஒரு கட்டத்தில் இந்த வழக்கு கைவிடப்படுகிறது.

சில வருடங்கள் கழித்து 2019 ஆம் ஆண்டு தென்கொரிய காவல் துறை Hwaseong serial murders காரணமான சீரியல் கில்லரை கண்டு பிடித்து விட்டதாக திடீர் அறிவிப்பை விடுகிறது. 50 வயதை கடந்த Lee Choon-jae என்பவன் தான் கொலைகாரன்.  அவன் உள்ளாடையிலிருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரி கொல்லப்பட்ட ஒருவரின் உடலிருந்து சேகரிக்கபட்ட DNA மாதிரியுடன் பொருந்தி போனதை வைத்து உறுதிப்படுத்துகிறார்கள்.

அச்சமயத்தில் இவ் வழக்கு காலாவதி ஆகிவிட்டபடியால் சட்டப்படி அவனை தண்டிக்க முடியாது. ஆனால் நிரூபிக்கப்பட்ட தருணத்தில் அவன் ஒரு பெண்ணை வன்புணர்ந்து கொலை செய்தமைக்காக ஆயுள் தண்டனையை அனுபவித்து கொண்டிருந்தான். ஆரம்பத்தில் அவன் தன்மேல் சுமத்தபட்ட குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. பின்பு எல்லாவற்றையும் தான் செய்தாக வாக்குமூலம் அளித்தான். கூடவே மேலும் சில அதிர்ச்சியான தகவல்களையும்; 10 சீரியல் கொலைகள், 4 இதர கொலைகள்.மேலதிகமாக கணக்கில் வராத 30 மேற்பட்ட வன்புணர்வுகள், இன்னும் பல வன்புணர்வு முயற்சிகள் என பலவற்றையும் செய்தாக ஒப்புக்கொண்டான்.  
 Lee Choon-jae 
***
இந்த படத்தின் கடைசி மூன்று நிமிடக் காட்சி உலகப் புகழ் பெற்றது. கதையின் நாயகன் பல வருடங்களுக்கு பிறகு தான் கொலையாளியை தேடித்திரிந்த ஊருக்கு வருகிறான். அங்கு ஒரு பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்த வயல்வெளியில் உள்ள ஓர் கான்கிரீட் வாய்காலை பார்த்து  பழைய நாட்களை மனதில் மீட்டியப்படி சிந்தனையில் ஆழ்ந்திருப்பான். கடைசி மட்டும் கொலைகாரனை கண்டு பிடிக்க முடியாமல் போனதை எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது அப்பாதை வழியே போகும் சிறுமி ஒருத்தி  

"அந்த கானுக்கு அடியில என்னத்தை பார்த்துட்டு இருக்கீங்க" என்று இவனை பார்த்து கேட்க. 

அவன்; ஒன்னும் இல்ல, சும்மானு சொல்வான்.

அதற்கு அந்த சிறுமி "இப்படிதான் கொஞ்ச நேரத்துக்கு முதல்ல வேற ஒருத்தரும் பார்த்துட்டு இருந்தாரு, அங்க என்ன இருக்குனு கேட்டதுக்கு ரொம்ப வருசத்துக்கு முன்னாடி இங்க ஒரு சம்பவம் பண்ணுனேன்" என்றார் என சொல்வாள்.

ஹீரோ அதிர்ச்சியுடன்
"அவன் முகத்தை பார்த்தியா? 
பார்க்க எப்படி இருந்தானு "  கேட்க, 

அவள்; "பார்க்க சாதாரணமா தா... இருந்தாருனு" சொல்வாள். 

ஹீரோ மெதுவாக திருப்பி திரையின் ஊடாக நம்மை வெறித்து பார்ப்பார். 
அந்த கொலைகாரனும் இந்த படத்தை அச் சமயத்தில் பார்த்து கொண்டிருக்கலாம் என்ற நோக்கத்தில் வைக்கப்பட்ட காட்சியது. 
மிரட்டலாக இருக்கும். 

பின் குறிப்பு: 
Memories of Murder படத்தை நான் முதன் முதலில் பார்த்தது 2018 ஆம் ஆண்டு, அப்பொழுது கொலையாளியை கண்டுபிடித்திருக்கவில்லை. 
 

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I