Scam1992: The Harshad Mehta Story (2020)

1992 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் நிகழ்ந்த பெரும் பணமோசடி வெளிச்சத்திற்கு வருகிறது. அதனை 'scam' என்ற ஆங்கிலப் பதத்தில் சொன்னால் இன்னும் பொருத்தமாகயிருக்கும். இந்த ஸ்கெமின் மதிப்பு கிட்டத்தட்ட நூறு பில்லியன் இந்திய ரூபாய்கள் ஆகும்.

ஹர்ஷத் மேத்தா என்ற பெயரை
நம்மில் பலர் இந்த வெப்சீரிஸ்
வெளியாகியிருக்கும் வரைக்கும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம். தொண்ணுறுகளில் மும்பை பங்குச்  சந்தையின் முடிச்சூடா மன்னன். 
இத்தொடரை பார்த்து முடித்த பிறகு வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு
இவரை மறக்காது.  இந்தியாவில் வெளியான "Paatal Lok, Sacred Games" போன்ற சீரிஸ்களுக்கு பிறகு நான்
மிகவும் ரசித்து பார்த்த தொடர்
 'Scam 1992' பங்குச் சந்தை வியாபாரம் சார்ந்த கதைக்களம். அதில் இடம் பெற்ற மோசடியை பற்றியக் கதை. வணிகம் சார்ந்தது, சிக்கலான மோசடி இதை எல்லோருக்கும் புரியும் படியாக எடுத்துள்ளதுதான் தொடரின் சிறப்பே.

யார் இந்த ஹர்ஷத் சாந்தி லால் மேத்தா?  நிஜமாகவே அவர் கிரிமினலா? இல்லை, பலிக்கடாவாக்கப்பட்டவரா?
அப்படி அவர் செய்த மோசடித்தான் என்ன என்பதை மிகச் சுருக்கமாக சொல்கிறேன்.

குஜராத்தை பூர்விகமாக கொண்ட
ஓர் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். கல்வியிலும் பெரிதாக சோபிக்காதவர். இளமைக் காலத்தில்
பனியன் விற்பது முதல் வைரக்கல்லை தரம் பிரிப்பது வரை என பலத்தரப்பட்ட வேலைகளில் ஈடுபடுகிறார். இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் ஏஜென்ட் வேலையும் அதில் அடக்கம். இந்த காலகட்டத்தில்
தான் பங்குச் சந்தையின் மீது ஆர்வம் ஏற்படுகிறது. அத்துறையினுள்
நுழைகிறார். மெது மெதுவாக அதன் 
நுணுக்கங்களை கற்றுத் தேர்கிறார். ஆரம்பத்தில் பங்குச் சந்தையில்
சிறிய அளவில் முதலீடு செய்கிறார்.
அதில் வெற்றியும் காண்கிறார்.
பிறகு ஓரளவுக்கு பெரிய அளவில்
முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்கும் பொழுது எதிர்பாராதவிதமாக பங்குச் சந்தை வீழ்ச்சி அடைகிறது. ஒரே இரவில் எல்லாவற்றையும் இழக்கிறார். ஆனால் இந்த தோல்விகள் எல்லாம் அவரை துவண்டு போகச் செய்யவில்லை மீண்டும் புதிய உத்வேகத்தோடு களத்தில் இறங்குகிறார். இப்பொழுது அவரிடம் முதலீடு செய்யப் பணம் இல்லை, தான் பங்குச் சந்தையில் கற்றுக்கொண்ட அறிவை முதலீடாக
வைத்து குரோவ்மோர் (Growmore)
என்னும் நிறுவனத்தை உருவாக்குகிறார். எந்த பங்கை வாங்க வேண்டும், எப்பொழுதும் விற்க வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு வழிக்காட்டும் கன்சுலேட்டிங் நிறுவனம். பங்குச் சந்தையை பற்றிய இவரின் அறிவு வியக்கத்தக்கது. இவரை நம்பி பணத்தை போட்டவர்கள் எல்லாம் கொழுத்த லாபத்தை பார்க்கிறார்கள். பங்கு சந்தை உலகின் அமிதாப் பச்சன் என்னும் அளவுக்கு அவர் புகழ் பரவுகிறது. மேத்தாவின் அடுத்த குறி பணச்சந்தை (Money Market) அதிலும் தன்னை நிரூபிக்கிறார். (இப்படி ஒரு
சந்தை இருப்பதே எனக்கு இந்த தொடரை பார்த்த பின்புதான் தெரியும்)

அதுவரைக்கும் பங்குச் சந்தை,
பணச்சந்தையை ஆட்டிவைத்து கொண்டிருந்த பரம்பரை பணக்காரர்கள் எல்லாம் பொறாமையில் வெந்து போகிறார்கள். ஹர்ஷத் மேத்தாவின் வளர்ச்சியை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.  

எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது ஓர் நாள் ஹர்ஷத் மேத்தாவின் அழிவின் முதல் விதை விதைக்கப்படுகிறது. பெரிய வங்கிகளில் ரசீது (bank receipt) இல்லாமல் பெரும் தொகையை கடனாகப் பெற்று அதனை பங்குச் சந்தையில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின்
பங்குகளில் முதலீடு செய்கிறார்.
போலியாக அதன் சந்தை பெறுமதியை உயர்த்திய பின்பு, நல்ல விலைக்கு விற்கிறார். அதன் மூலம் கொள்ளை லாபத்தை சம்பாதித்து வங்கியில் வாங்கிய பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்து விடுகிறார். இவ்வாரான பணபரிவர்த்தனை  சட்டப்படி தவறென்றாலும் வங்கிகள்
தங்களின் நம்பிக்கை மிகுந்த வாடிக்கையாளர்களிடம் இந்த உறவை பேணி வந்தன, இங்கு ஹர்ஷத் மேத்தா செய்த தவறு இதனை  இந்தியாவில் உள்ள பல வங்கிகளில்  ஒரே நேரத்தில் செய்கிறார். ஒரு மாதத்தில் திருப்பி கொடுப்பதாக வாங்கும் கடனை தன் செல்வாக்கை பயன்படுத்தி மேலும் சில  வாரங்களுக்கு தள்ளிப் போடுகிறார். பங்குச் சந்தையின் நுணுக்கங்களை அறிந்த இவருக்கு ஒரு சில வாரங்கள் என்பது பலகோடியை சம்பாதித்து கொடுத்துவிடும்.

அதேநேரம் தன் குரோவ்மோர் (Growmore) நிறுவனத்தின் மூலம்
வாடிக்கையாளர்களை சரியான
பங்குகளின் மீது முதலீடு செய்ய
வைத்து தானும் லாபமடைந்து
தன்னை நம்பியவர்களையும்
லாபமடையச் செய்கிறார்.
'பிக்புல்' என்று இன்னொரு பட்டமும் கிடைக்கிறது அதாவது பங்கு சந்தையை தூக்கி விடுபவர்.

வங்கி ரசீது இல்லாமல் கடன் வாங்கியது போக 'ஸ்டாம்ப் பேப்பர்' மோசடி போன்ற சில முறைகளிலும் பணத்தை பெறுகிறார். மேத்தா சிஸ்டத்தை ஏமாற்றிய முறைகள்
நம் தலையை குழப்பி விடும் நூதன திருட்டு வகையறா, மேலோட்டமாக பார்த்தால் தவறாக எதுவும் தெரியாது. அதே நேரம் 
உள்ளே பெரும் பிரளயமே நடந்து முடிந்திருக்கும். ஒவ்வொன்றாக தனியாக சிறுகுறிப்பு எழுதினால் கூட இந்த கட்டுரை பல பக்கத்திற்கு நீண்டு விடும். அதனால் நாம் அதற்குள் ஆழமாக போகவேண்டாம்.

ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கை தரம் உயர்கிறது. அப்போதைய காலக்கட்டத்தில் இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள், பிரபலங்களை விட சொகுசான வாழ்க்கையை வாழ்கிறார்.
அம்பானியை விட அதிக வருமான வரிக் கட்டுகிறார். Toyota Corolla,Toyota Sera, Lexus LS400 போன்ற உலக சந்தையில் அப்பொழுதான் அறிமுகமாகியிருந்த புதுரக கார்கள் எல்லாம் மேத்தாவிடம் இருந்தது. அதில் அவருக்கு பிடித்த லெக்சஸ் கார் மிகப் பிரபலம். மும்பையில் கடற்கரைக்கு பக்கமாக 15,000 சதுர அடிப் பரப்பளவு கொண்ட சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு. அதன் உச்சியில் நீச்சல் தடாகம், சிறிய கோல்ப் கோர்ஸ் போன்றவற்றை உருவாக்கி வைத்திருந்தார். அன்றை நாட்களில் பல பத்திரிகைகளில்
தலைப்பு செய்தியே மேத்தா தான்,
'பிஸ்னஸ் டுடே' போன்ற வர்த்தக மேகஸின்களில் முகப்பு அட்டையில் 
எல்லாம் இடம் பிடித்தார். இந்த திடீர் வெளிச்சம் தான் மேத்தாவின் மீது அனைவரின் பார்வையும்
விலக்காரணமாக அமைந்து,
வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.

டெல்லியில் பிரதமர் வரைக்கும்
அவருக்கு அரசியல் தொடர்பு நீண்டது. தொட்டதெல்லாம் துலங்கியப்படியால்  பிக்புல் தறிக்கெட்டு ஓடத்துவங்குகிறது. வெற்றியின் வேகம் அவர் கண்ணை மறைக்கிறது. அவரின் அசுர வளர்ச்சி எதிரிகளுக்கு பொறாமையை
தூண்டுகிறது. வாய்ப்பு கிடைக்கும்
போது ஏறி மிதிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பம் தொடக்கம் அவரின் தம்பியான அஸ்வின் மேத்தா "அண்ணா.... ரொம்ப வேகமா போறீங்க, மாட்டிக்க போறோம். நாம எப்ப விழுவோம், ஏறி
மிதிக்கலாமுன்னு ஒரு கூட்டமே காத்துட்டு இருக்கு" என்ற எச்சரிக்கையை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறார்.
மேத்தா அவரின் பேச்சை கேட்டிருக்கலாம். "காதல்னா ரிஸ்க் இருக்கத்தான் செய்யும்" இது தான் மேத்தாவின் தாரக மந்திரம்.
அவர் காதல் தொழிலின் மீது!

அந்த நாளும் வருகிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவின்  இன்வெஸ்டிகேஷன்  ஜெர்னலிஸ்ட்டான சுஜீட்டா தலாளுக்கு (Sucheta Dalal)
ஹர்ஷத் மேத்தா வங்கியில் ஐநூறு கோடி ரூபாய் காசோலையை, வங்கி ரசீது இல்லாமல் வாங்கியதை பற்றியத் துப்பு திட்டமிட்டு மேத்தாவின் எதிரிகளால் அனுப்படுகிறது. ஏற்கனவே மேத்தா
எதோ தில்லு முள்ளு செய்கிறார் என்ற சந்தேகத்தில் பின் தொடர்ந்து
கொண்டிருந்த சுஜீட்டாவிற்கு 
இந்த செய்தி பெரும் புதையல் கிடைத்தமைக்கு சமம். மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் ஒருவாறு அந்த செய்தியை பத்திரிகையில் எழுதுகிறார். அதன் தொடர் விளைவுகளாக பல அழுத்தங்கள் எழுந்து அரசாங்கம் ஹர்ஷத் மேத்தாவின் மேல் சிபிஐ விசாரணையை முடக்கி விடுகிறது.
அதுவரை மேத்தாவுடன் இருந்த
பெரும் அரசியல் புள்ளிகள் தாங்களும் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவரை கைவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அப்போதைய இந்திய பிரதமராக இருந்த நரசிம்ம ராவுக்கு தேர்தல் காலத்தில் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக ஊடகவியலார் சந்திப்பில் கூறி நாட்டையே அதிரவைக்கிறார். ஆனால் அதனை அவரால் நிரூபிக்க முடியாமல் போகிறது. இல்லை அவர் அதனை வேண்டும்மென்றே தவிர்த்து விட்டதாகவும் ஒரு பேச்சுண்டு.

குடி, புகைத்தல், பெண் சகவாசம் என
எந்த கூடாப் பழக்கமும் கிடையாது.
தன் தொழிலில் எதிர்க்கொள்ளும்
சவாலும் அதனைப் போராடி அடைவதும்தான் அவருக்கு போதையூட்டக் கூடியது. தன்னை எதிர்ப்பவர்களை மதியால் எதிர்க்கிறார். அதிகாரத்தை கொண்டு அடக்கப் பார்க்கிறார்.
ஆனால் ஒரு போதும் வன்முறையை
கையில் எடுக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் சுஜீட்டாவை 
இல்லாமல் செய்திருக்கலாம். வன்முறை அவர் இயல்பிலேயே இல்லாதவொன்று.

இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்த சமயத்தில் மொத்தமாக 70 கிரிமினல் வழக்கும், 600 சிவில் வழக்கும் அவருக்கும், குடும்பத்திற்கும் எதிராக தொடரப்பட்டது. அதிகாரத்தை கட்டுப்படுத்தியவர்கள் மேத்தா தங்களை பற்றி மூச்சே விடக்கூடாது என்பதில் மட்டும் குறியாக இருந்தார்கள். சிறைவாசத்தில் ஓர் நாள் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கே மரநாற்காலியில் தனது நாற்பத்தி ஏழாவது வயதில் தனியே நாதியற்று இறந்து போகிறார். அந்த கணம் நம் மனதில் ஏற்படும் வலியை தவிர்க்க முடியாது. ஓர் திறமையான வியாபாரிக்கு இந்த முடிவு நேர்ந்திருக்க கூடாது. அவரின் தவறுகளுக்கு தண்டிக்கபட்டிருக்கலாம் ஆனால் பெரும் புள்ளிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அவரை திட்டமிட்டே நசுக்கிவிட்டார்கள். நூறு பில்லியன் ரூபாய் மோசடியை தனி ஒருவனால் செய்திருக்கவே முடியாது. இதனால் பலன் அடைத்தவர்கள் பலர். அதிகாரதை பயன்படுத்தி அவர்கள் தப்பித்து கொண்டார்கள். மேத்தா மட்டும் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டார்.

அவர் செய்த பெரிய தவறு மக்களின் பணத்தை மோசடி செய்து முதலீடு செய்தமைதான். கொஞ்சம் பிசகி இருந்தாலும் முழு நாட்டின் பொருளாதாரமுமே விழுந்திருக்கும்.
சுஜீட்டா தலாலின் துணிவையும்,
திறமையும் பாராட்டியே ஆகவேண்டும். மேத்தாவின் ஸ்கெமை பொருளாதார நிபுணர்களால் மட்டுமே எதோ புரிந்துக்கொள்ள முடியும். வங்கிகளின் நெறிமுறைகளில் இருந்த ஓட்டையை பயன்படுத்திதான் விளையாட்டு காட்டியுள்ளார். அதனைக் கண்டு பிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வருவது அத்தனை சுலபமல்ல!, இந்த வழக்கிற்கு பிறகு வங்கி மற்றும் பங்கு சந்தையின் சட்டத்திட்டங்களில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. 2006 ஆம் ஆண்டு குடியரசு தலைவர் அப்துல் கலாம் கையால் பத்மஷிரி விருந்து வழங்கி சுஜீட்டா தலால் கௌரவிக்கப்பட்டார். 

இன்றும் சில பொருளாதார நிபுணர்கள், ஹர்ஷத் மேத்தா மோசடி செய்யவில்லை, வங்கி நெறிமுறைகளில் இருந்த நெளிவு சுளிவுகளை தனக்கு சாதகமாக
பயன்படுத்தி மட்டுமே கொண்டார் என்கிறார்கள்.

இந்த கதையை அனைவருக்கும்
புரியும்படி இலகுப்படுத்தி எடுத்துமே
எதற்கு மேத்தாவை குற்றவாளி என்கிறார்கள் என்ற குழப்பம் வரும்.
நிறைய தேடலுக்கு பின்புதான் இந்த கட்டுரையை எழுதினேன். இத்தனைக்கும் நான் மிக சுருங்கவே சொல்லியிருக்கிறேன்.

சுஜீட்டா மேல் எனக்கு கோபம் வந்தது. இவளால் தான் மேத்தா மாட்டிக்கொண்டார் என்று. மேத்தாவின் பேச்சும், உழைப்பின் மீதான பற்றும் நம்மை மயக்கி விடுகிறது. மோசடிக்காரன் என்றாலும் என்னால் வெறுக்க முடியவில்லை. ஏன் என்றால் இவரை விட மோசமான திருடர்கள் எல்லாம் வெளியில் சுதந்திரமாக இருக்கிறார்கள். சட்டத்தால், ஊடகத்தால் அவர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை. கனத்த மனதுடன் தான் இத்தொடரைப் பார்த்து முடித்தேன். 

Debashis Basu மற்றும் Sucheta Dalal  இருவரும் சேர்ந்து எழுதிய
"The Scam: Who won, Who lost,
Who got away" என்ற புத்தகத்தினை மையமாக வைத்துதான் இந்த தொடரை உருவாக்கியுள்ளார்கள். இத்தனை சுவாரசியமாக ஓர் நிஜக்கதை இருப்பது வியப்பளிக்கிறது. இந்த கதை மேத்தாவுக்கும் உண்டான மரியாதையை செய்துவிட்ட அளவில் எனக்கு மகிழ்ச்சி. 'Scam 1992' மணிரத்னத்தின் 'குரு' வையும் Martin Scorsese யின் 'The wolf in wall street' யையும் நினைவுபடுத்திச் சென்றது.
வணிகம் சார்ந்த தொடரை எல்லோருக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். ஒரு சீசன் மட்டுமே எடுக்க கூடிய தொடரில் பல கதாபாத்திரங்களை உள்ளடக்கி சிறப்பாக உருவாக்கி  உள்ளார் இயக்குனர்  ஹான்சல் மேத்தா  (Hansal Mehta), நடித்தவர்கள் எல்லோரும் மனதில் பதிந்து போகிறார்கள். சிபிஐ அதிகாரி மாதவனாக வரும் ராஜட் கபூரின் (Rajat Kapoor) நடிப்பெல்லாம் மிரட்டல்!, சிபிஐயின் விசாரணை இப்படித்தான் இருக்கும் என்ற சித்திரத்தை கண்முன்னே நிகழ்த்திக்காட்டுகிறது.
பிரடிக் காந்தி (Pratik Gandhi)  ஹர்ஷத் மேத்தாவாக வாழ்ந்து விட்டார் என்று சொல்லலாம். மிக நேர்த்தியான நடிப்பு. சுஜீட்டா தலால்  (Sucheta Dalal)
ஆக நடித்த ஸ்ரேயாவின் நடிப்பும் அருமை. குறை சொல்லும் படியாக எந்த கதாபாத்திரமும் இல்லை.
கதை வசனங்கள் செம்மை. தமிழ் டப்பிங் தரம், ஒவ்வொருவரின்
குரலும் கனக்கட்சிதம். இன்ட்ரோ  மியூசிக்கை ஸ்கிப் செய்யமாட்டீர்கள்.
அதில் வரும் அனிமேஷனே கதையை சொல்லிவிடும். 

ஊடகவியலாளராக ஒரு மோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் தருணத்தில் அதன் தாக்கத்தில்
சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மேத்தா போன்று  சிலர் நெஞ்சு வலி வந்து இறந்து போகிறார்கள். இத்தகைய தருணங்கள் ஊடகவியலார்களை மிகுந்த மனசோர்வுக்கும், குற்ற உணர்ச்சிக்கும் உற்படுத்தும். இந்த தொடரில் அத்தகை நிகழ்வுகள் சிறப்பாக காட்டப்பட்டிருக்கும்.
இதற்கெல்லாம் நாம் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். மேத்தாவின் தவறால் அவரை நம்பி மோசம் போன பலர் தற்கொலை செய்துக் கொண்டார்கள். அதில் ஒரு வங்கியின் முகாமையாளரும் அடக்கம். இந்த பாவத்திற்கு எல்லாம்
மேத்தா பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்.

இந்திரா காந்தியின் மரணம், அதனால் ஏற்பட்ட கலவரம், பின்னர் ராஜீவ் காந்தியின் பதவி ஏற்பு, அவரின் படுகொலை. வாஜ்பாய் பிரதமராக வந்தமை. 1998 ஆம் ஆண்டு போக்ரானில்  இந்தியா வெற்றிகரமாக அணுகுண்டு பரிசோதனையை நடத்தி முடித்தமை.
போன்ற அரசியல் நிகழ்வுகள் பங்கு சந்தையில் ஏற்படுத்திய தாக்கத்தை
கதையுடன் நேர்த்தியாக தொகுத்து உள்ளார்கள். அத்துடன் இந்த மோசடியுடன் தொடர்புடைய  அனைவரின் நிஜமான பெயர்களையும், சம்பவங்களையும் அப்படியே காட்டியிருப்பதும் சிறப்பு.
இந்த சம்பவம் நிகழ்ந்து இருபது வருடங்கள் கடந்து இன்று எல்லாம் நீர்த்து விட்டது. நரசிம்ம ராவின் பெயரைக் கூட பயமில்லாமல்  மோசடியில் பயன்படுத்த முடிக்கிறது. யோசித்து பாருங்கள், கடைசியில் காலம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.

நீங்கள் எந்த வகைக் கதையை
பார்ப்பவராக இருந்தாலும் சரி,
நல்ல சினிமா பிடிக்குமா? ஆம் என்றால் இதனை பாருங்கள் முதலில்.  
 

Comments

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I