வைரஸ்களாகிய நாம்

(கொரோனா வைரஸ்களின் கதை)

நண்பர் Thandapani Thendral 
தண்டபாணி தென்றல் எழுதிய "வைரஸ்களாகிய நாம்: கொரோனா வைரஸ்களின் கதை" என்னும் அறிவியல் புத்தகத்தை படித்தேன்.
இவ்வருட kindle pen to publish போட்டிக்கு எழுதியுள்ளார். புத்தகத்தை படிக்கும் போது வியந்து போனேன். சாதாரண ஒருவரால் இப்படி ஒரு புத்தகத்தை எழுத முடியாது. காரணம் ஒரு எழுத்தாளனாக இதற்கு பின்னால் உள்ள உழைப்பை என்னால் கற்பனை செய்துப் பார்க்க முடிகிறது.
அறிவியல் தகவல்களை பிழையில்லாமல் கொடுக்க வேண்டும். இதற்கு உசாத்துணையாக இவர் வாசித்த புத்தகங்கள், கட்டுரைகள், இணையதளங்கள் பற்றிய விபரங்களை எல்லாம் நூலின் கடைசி பக்கத்தில் இணைத்துள்ளார்.

யாரும் எளிதில் சீண்ட மாட்டார்கள்
என்று தெரிந்தும் அறிவியலை மையமாக வைத்து ஒரு வருட உழைப்பில் புத்தகத்தை கொண்டு வருவதற்கு மனதில் உத்வேகம் இல்லாமல் முடியவே முடியாது.
இப் புத்தகம் ஒரு நாள் தனக்கான அங்கீகாரத்தை பெரும் என்பதில்
எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

நுண்ணுயிரிகளை பற்றிய இவரது கற்கை தான் வைரஸ்களை பற்றி விரிவாகவும், அனைவருக்கும் புரியும்படி எளிமையாகவும் எழுதுவதற்கு உதவியாக இருந்துள்ளது. சுஜாதாவின் "தலைமைச் செயலகம்" படித்துவிட்டு இதனை படிக்க நேர்ந்தது. எழுத்து நடையில் அவரின் தாக்கத்தை உணர்ந்தேன். இவர் தனக்கே உரிய பாணியில் கலக்கிவிட்டார். சில பக்கங்களை குபீர் சிரிப்புடனே கடந்தேன். குறும்புகார எழுத்தாளர்
(முயல் கொம்புக்கு கேன்சர் செல்கள் தான் காரணம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர் சக விஞ்ஞானிகளிடம் சொல்லும் தருணம், அவர்களின் ரியாக்ஷன்)

அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும், இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், தடுப்பூசி போடலாமா வேண்டாமா, இந்நிலை எப்பொழுது மாறும். முக்கியமாக யார் பேச்சை கேட்பது, ஆள் ஆளுக்கு ஒவ்வொரு கருத்தை சொல்லி குழப்பி அடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் உங்களுக்கு தெளிவான புரிதலை இந் நூல் கொடுக்கும். சிக்கலான அறிவியலை முடிந்த மட்டும் இலகுபடுத்தி எழுதியுள்ளார். சில பக்கங்களை புரட்டும் போது மண்டை காயும் அதை கண்டு சோர்ந்து விடவேண்டாம்.
நாம் என்ன பரீட்சைக்கா படிக்கிறோம். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக படித்து புரிந்து கடந்து செல்லலாம்.

இனி புத்தகத்தில் இருந்து சில சுவாரசியமான தகவல்கள் 

அ.) எறும்புகள் பூஞ்சைக் கொல்லிகளாக பாக்டீரீயாவை வளர்த்து எலி, மூட்டை பூச்சிகளிடம் இருந்து தங்கள் உணவுச் சேமிப்பை பாதுகாத்துக் கொள்வது.

ஆ.) யானையை கூட பெரும் கூட்டமாக வேட்டையாடி கொள்ளக் கூடிய எறும்பு இனம்.

இ.) அக்காலத்தில் வேறியலேசன் (Variolation) முறை மூலம் சின்னம்மை போன்ற தொற்று நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கியமை. (நோயினால் பாதிக்கப்பட்டவரின் கொப்பளத்தில் உள்ள மேற்தோலைச் சீல் உடன் சுரண்டி எடுத்து காயவைத்து ஆரோக்கிமான  ஒருவரின் மூக்கின் அல்லது தோலின் ஊடாக உள்செலுத்தி வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுதல். [அந்த காலத்து வேக்சீன்] ) 

ஈ.) 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டில் தொற்று நோய்களை பற்றிய ஆராய்ச்சியில் மருத்துவர்கள் தங்களையும், மனைவி பிள்ளைகளையும் விஷப் பரீட்சைக்கு உற்படுத்தியமை. அவர்களின் தியாகம் அதிர்ச்சி அடைய செய்துவிட்டது.
அந்த வழியில் வந்தவர்கள் தான் இன்று ஒரே வருடத்தில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுப் பிடித்திருக்கிறார்கள். மனித குலமே மருத்துவ துறைக்கு  கடமைப்பட்டுள்ளது.

உ.) வைரஸ் என்ற லத்தீன் மொழி சொல்லுக்கு அர்த்தம்  - விஷம் 

ஊ.) மலேரியா என்றால் "கெட்ட காற்று" என்று அர்த்தம் 

எ.) சீனா தன் சுயநலத்திற்காக சார்ஸ் வைரஸ் பரவலை பற்றிய தகவல்களை எப்படி கசிய விடாமல் தடுத்தது. கொரோனா விஷயத்திலும் அதையே செய்தது. (எதிர்காலத்திலும் அப்படியே செய்யும் போல)

ஏ.) காடுகளை அழித்து விலங்குகளின் வாழ்விடங்களையும், உணவு ஆதாரங்களையும் இல்லாமல் செய்வதால் அவை மனிதர்களை அண்டி தங்கள் உடலில் காவிக் கொண்டிருக்கும் வைரஸ் போன்ற நோய் கிருமிகளை பரப்பியமை. (வௌவால்கள், எறும்பு தின்னிகள்)

ஒ.) இது தான் அல்டிமேட்;
மூக்குச் சளியை தின்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அது எப்படி? என்பதை புத்தகத்தை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
நான் சொல்ல மாட்டேன். இன்னும் 
இது போல பல தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது.

கிண்டிலிலை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் 
"வரம் தா வசந்தா",
"மாமனாரின் மந்திர கோல்" போன்ற குப்பைகளுக்கு நடுவில் சிக்கித் தவித்து கொண்டிருக்கும் தரமான படைப்பு!

 இது போன்ற அறிவியல் புத்தகங்களை தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே. எல்லோராலும் தொட முடியாத பகுதி. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ம.நரேஷ்

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I