சார்பட்டா (2021)

 
Rocky Series முதல் Cinderella Man
வரைக்கும் புகழ் பெற்ற அத்தனை குத்துச் சண்டை படங்களையும்
பார்த்து விட்டேன். ட்ரைலர் பார்த்து ஏமாந்து போன சமீபத்திய இந்தி
படமான Toofaan (2021) முதற்கொண்டு. பாக்ஸிங்கில் செண்டிமெண்டை சேர்ப்பதற்கு பதில், செண்டிமெண்டில் பாக்ஸிங்கை மூழ்கடித்து, ஏமாற்றி விட்டார்கள்.

பொதுவாக குத்துச் சண்டைப் படங்களுக்கு ஒரு பாணி உண்டு.
நாயகன் எப்படிப்பட்ட பலசாலியையும் அடித்து வீழ்த்தி விடும் அளவுக்கு திறமையானவனாக இருப்பான்.
ஆனால் மாஸ்டர் அவனை உடனே சேர்த்துக் கொள்ளாமல் அலைய விடுவார். பின்பு அவன் திறமையைக் கண்டு நம்பிக்கை கொண்டு, சேர்த்துக் கொள்வார். கடுமையாகப் பயிற்சி அளிப்பார். முடிவில் எப்படியும் ஹீரோ வில்லனை வீழ்த்தி விடுவான் என்று நமக்கு நன்றாகத் தெரியும். அந்த இடத்தில் ஒரு தடங்கல் அல்லது பெரும் பிரச்சனை ஹீரோவுக்கு வரும். அதை தாண்டி வரவே முடியாது. அப்படியே நாமும் நம்புவோம். அந்த இடரை எப்படி ஹீரோ எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுகிறான் என்பது தான் படத்தின் உச்சக்கட்டம். இந்த இடத்தில் தான் இயக்குநரின் திறமை இருக்கிறது. இங்கு சறுக்கினால் மொத்த படமும்
 'சப்' என்று ஆகிவிடும்.

சார்பட்டா பரம்பரை படம், ஹீரோவுக்கு வரும் தடங்கள் என்ற இடத்தில் தான் கொஞ்சம் சறுக்கி இருக்கிறது. ஒரே நேர்கொட்டில் சென்று கொஞ்சம் ஏறி அப்படியே இறங்கி விடுகிறது. கடைசிக்கட்டப் பதற்றம் நமக்கு ஏற்படுவதில்லை. எப்படியும் ஆர்யா ஜெயித்து விடுவார் என்ற நம்பிக்கையில் குத்துச் சண்டைக் காட்சியை மட்டும் ரசித்துக் கொண்டிருந்தேன். ரசிகர்களுக்கு கொஞ்சம் டென்ஷனை ஏற்றி விட்டிருந்தால் படம் முத்திரைப் பதித்திருக்கும்.

இருந்தாலும் இதை ஒரு பெரிய குறையாகச் சொல்ல முடியாத
அளவுக்கு படம் சிறப்பாக வந்துள்ளது. ஆர்யாவின் உடற்கட்டை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தேர்ந்த குத்துச் சண்டை வீரனாகவே
தெரிகிறார். பா.ரஞ்சித் ஒரு நேர்க்காணலில் சொல்வார். ஆர்யாவுக்கு கையில் பாக்ஸிங் க்ளாவ்ஸ்சை மாட்டி மேடையில் ஏற்றி விட்டு விடலாம், அந்த அளவுக்கு கடுமையாக பயிற்சி செய்து நிஜமான குத்துச்சண்டை வீரனாகவே மாறிவிட்டார் என்று. வேம்புலி, பிரபா, டான்சிங் ரோஸ் எல்லாம் நம்மை ஏமாற்றாமல் சண்டை காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறார்கள். அதுவும் டான்சிங் ரோஸின் சண்டை செய்யும் பாணி செம்மை! ரசித்து பார்த்தேன்.

பா.ரஞ்சித் 1970களில் சென்னையில் தமிழர்களின் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த குத்துச் சண்டைக் கலாசாரத்தை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்து வெற்றியும் கண்டுள்ளார். வெறும் குத்துச்சண்டை படமாக மட்டும் எடுக்க நினைக்கவில்லை.
சொற்ப காட்சியில் வந்தாலும் நாயகி (சஞ்சனா நடராஜன்) மனதில் பதிந்து விடுகிறார்.

குத்துச் சண்டைப் படம் எடுக்கிறேன் என்றுச் சொல்லி பூலோகம் படத்தில் ஜெயம் ரவியின் உடல் உழைப்பை
நாசம் செய்து இருப்பார்கள். இதில்
அந்த கொடுமை நடக்கவில்லை இதற்கெ பா.ரஞ்சித்துக்கு நன்றிச் சொல்ல வேண்டும். 
 
விளையாட்டை மசாலா போட்டு நீர்த்துப் போகச் செய்யாமல், குத்துச் சண்டைக்கு உரிய கௌரவத்தை சிறப்பாகச் செய்த அளவில் சார்பட்டா பரம்பரை சிறந்த ஓர் ஆரம்பத்தை உருவாக்கி உள்ளது.
எதிர்காலத்தில் இன்னும் சிறந்த குத்துச் சண்டை படங்கள் வரும் என்று நம்பலாம்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I