Van Diemen's Land (2009) நரகப்பயணம்


(Van diemen's land இன்றைய Tasmania 
Sarah Island இல் உள்ள ஓர் இடம்)

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில்,
1822ஆம் ஆண்டில், Van diemen's land என்னும் ஒரு தீவில் உள்ள சிறையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் தான் இப்படம். அலெக்சாண்டர் பியேர்ஸ் என்பவனும் அவனுடன் சேர்ந்து ஏழு குற்றவாளிகளும், அந்த கொடுமையான சிறைச்சாலையில் இருந்து தப்பிப் போகிறார்கள்.
டாஸ்மானியாவின் அடர்ந்த வனாந்திரத்தின் ஊடாக கிழக்கு பக்கம் உள்ள மனிதக் குடியிருப்புக்கு போய்ச் சேருவது தான் திட்டம்.

"Survaival is not an easy game to play"
என்ற கூற்றிற்கு இணங்க 
ஆரம்பத்திலிருந்த உற்சாகமும், தையிரியமும் பயணப்பட ஆரம்பித்ததும் மெல்ல மெல்ல குறையத் தொடங்குகிறது.
அடை மழை, பனி, மேடு பள்ளம், மலை, கடுங்குளிர் என்று அந்த அடர்ந்த வனாந்திரம் தன்னுடைய சுயரூபத்தை காட்டத் துவங்குகிறது.  போகப்...., போகப்... முடிவே இல்லாமல் விரிந்துக் கொண்டு போகிறது. கைவசமிருந்த சொற்ப உணவும் தீர்ந்துப் போக பசி, மயக்கம், கலைப்பு எல்லாம் ஒன்றாச் சேர்ந்து வாட்டி வதைக்கிறது. கால்களை தூக்கி ஓரு அடி முன் வைக்க முடியாத அளவுக்கு சோர்ந்து துவண்டுப் போகிறார்கள். கண்கள் எல்லாம் இருண்டு மரணக் களைப்பாக இருக்கிறது. அப்பொழுதும் நம்பிக்கையுடன் எப்படியாவது உயிர் தப்பி விடவேண்டும் என்று பயணத்தை தொடர்கிறார்கள்.
கூடாத நேரம், அக்கூட்டத்தில் ஒருவனுக்கும் வேட்டையாட, மீன் பிடிக்க, தற்காலிக தங்குமிடம் அமைக்க என ஒன்றும் தெரியாது. மோசமான சூழலில் உயிர் பிழைக்கும் திறன் அற்றவர்கள். 

Spoiler Alerts 👇

ஒரு கட்டத்தில் காட்டில் தொலைந்து விட்டோம் என்று அவர்களுக்கு விளங்குகிறது. உணவில்லாமல் ஓரு நாள், இரண்டு நாள் போகிறது. இப்பொழுது உணவுத் தேவை, அக்கூட்டத்தின் தலைவன் ராபர்ட் (தப்பிக்கும் பொழுது அவனிடம் மட்டும் தான் கோடாலி இருந்தது. அதனால், அவனே தன் நண்பன் மேத்தீவின் ஆதரவு உடன் தன்னை தலைவனாக நியமித்துக் கொண்டான்.) "இதற்கு மேல் நாம் முன்னேறிப் போக, நமக்கு சக்தி தேவை. அதனால் நம்மில் ஒருவனைக் கொன்று (நரமாமிசம்) சாப்பிடலாம்" என்ற பயங்கரமான யோசனையை முன்வைக்கிறான்.

ராபர்ட்டும் அவன் நண்பனும் தங்கள் திட்டத்தை அலெக்ஸாண்டர் பியேர்ஸ் இடம் சொல்கிறார்கள். பயணத்தில் மிகவும் பலவீனப்பட்டுள்ள பியேர்ஸ்னுடைய நண்பன் தான் முதல் இலக்கு. இந்த திட்டம் கூட்டத்தில் வேறு யாருக்கும் தெரியாது. தக்கச் சமயம் வரும் மட்டும் காத்திருக்கிறார்கள். ராபர்ட் தங்கள் பலிக்கடா அசந்து போகும் தருணத்தில் கோடாரியால் மண்டையில் ஒரே போடாகப் போட்டு பிளந்து விடுகிறான். அப்பொழுதும் உயிர் உடனே பிரியாமல் துடித்துடித்துக் கொண்டிருப்பதை பார்த்து கத்தியால் கழுத்தை அறுத்து கதையை முடித்து விடுகிறான்.

இந்த கொடூரமான திட்டத்தை பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் அக்காட்சியை பார்த்து மிரண்டுப் போய் விடுகிறார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே, பிணத்தை கூறுப்போட்டு சமைத்து உண்பதற்கு தயாராவதை கண்டு பீதியில் வெறுண்டு  விடுகிறார்கள். சற்றும் எதிர்ப்பார்க்காத கோரச்சம்பவம், எல்லாம் சடுதியில் நடந்து முடிந்து விடுகிறது. இதற்கு பிறகும் இவர்களுடன் சேர்ந்து பயணித்தால் நமக்கும் இதே நிலைமைதான் என்பதை அனுமானித்துக் கொண்ட இரண்டு கிழவர்கள் கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியே தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள். சிலருக்கு ராபார்டின் கொடூரமான நடவடிக்கை பிடிக்காவிட்டாலும் தனியே பயணித்தால் மரணம் நிச்சயம் என்று உணர்ந்து எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியா இருக்கிறார்கள். எப்படியாவது உயிர்த் தப்பி இக்காட்டை விட்டு வெளியேறி விடவேண்டும் என்பது மட்டுமே அனைவரினதும் ஒரே குறிக்கோள்.

மறுநாள் நரமாமிசக் கூட்டம் தங்கள் வழியே பயணத்தை தொடர்கிறார்கள்.
இப்பொழுது கூட்டத்திலிருக்கும் ஒவ்வொருத்தனுக்கும் தெரியும் நாம் சோர்ந்து விட்டால், கரிச்சட்டியில் கொதிப்போம் என்று. இரவு உறங்கும் நேரத்தில் கூட கண்ணை மூடாமல் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடனே நோட்டம் இட்டுக் கொள்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவையான ஓய்வு கிடைக்காமல் மேலும் துவண்டுப் போகிறார்கள். பயணம் செய்யும் பகல் நேரத்திலும் ஒருவனுக்கு பின்னால் ஒருவன் மிகுந்த எச்சரிக்கையுடனே இருக்கிறார்கள். இதற்கு இவர்கள் பேசாமால் அந்த சிறையிலேயே வாழ்ந்து மடிந்து இருக்கலாம். நரகப்பயணம்! 

முடிவில் எத்தனை பேர் உயிருடன் காட்டை விட்டு வெளியேறினார்கள்
என்று படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இது உண்மைச் சம்பவம் என்பது தான் அதிர்ச்சியான செய்தி!, ரத்தமும், சதையுமான இக்கதையை தப்பி வந்த ஒருவன் பின்னாளில் பதிவு செய்திருக்கிறான். அதை தான் படமாக எடுத்து உள்ளார்கள்.
எவ்வித கமர்சியல் சமாச்சாரங்களும்  அற்று நிகழ்ந்ததை அப்படியே பதிவு செய்திருக்கிறார்கள். அதனால் சில இடங்களில் ஆவணப்படம் ஒன்றைப் 
பார்க்கும் உணர்வை ஏற்படுத்தக் கூடும். படத்தின் கலர், அடர்வனாந்திரத்தை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் எல்லாம் செம்மை!, சர்வைவல் படம் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் தவிர்க்க கூடாத அருமையான படைப்பு.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I